உலகம்

காசாவில் பெருநாள் தினத்திலும் இஸ்ரேல் கடும் தாக்குதல் – 20 பேர் பலி – புதிய போர் நிறுத்த முன்மொழிவுக்கு ஹமாஸ் இணக்கம்

காசாவில் மத்தியஸ்தர்கள் முன்வைத்த போர் நிறுத்த திட்டம் ஒன்றுக்கு இணக்கத்தை வெளியிட்டதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. எனினும் நேற்று (30) நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டபோதும் இஸ்ரேலின் தொடரும் தாக்குதல்களில் குறைந்தது 20 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹமாஸின் பிடியில் இருக்கும் மேலும் ஐந்து பணயக்கைதிகளை விடுவிக்கும் வகையில் 50 நாட்கள் நீடிக்கும் போர் நிறுத்த முன்மொழிவு ஒன்றுக்கே ஹமாஸ் அமைப்பு ஆதரவை வெளியிட்டுள்ளது.

எகிப்து மற்றும் கட்டார் மத்தியஸ்தர்களால் அனுப்பப்பட்ட போர் நிறுத்தத் திட்டத்திற்கே ஒப்புதல் அளித்ததாக காசாவுக்கு வெளியில் வசிக்கும் ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவரான கலில் அல் ஹய்யா அறிவித்துள்ளார்.

‘இரண்டு நாட்களுக்கு முன்னர் எகிப்து மற்றும் கட்டாரில் உள்ள மத்தியஸ்தர்களிடம் இருந்து முன்மொழிவு ஒன்று எமக்கு கிடைத்தது. நாம் அதனை சாதகமாக கையாண்டதோடு இணக்கத்தை வெளியிட்டோம்’ என்று கடந்த சனிக்கிழமை தொலைக்காட்சி உரை ஒன்றில் ஹய்யா கூறினார்.

‘இதனை ஆக்கிரமிப்பாளர்கள் (இஸ்ரேல்) குறைத்து மதிப்பிடமாட்டார்கள் என்று நாம் நம்புகிறோம்’ என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தத் திட்டம் தமக்கும் கிடைத்திருப்பதாக குறிப்பிட்டிருக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்காவின் முழு ஒருங்கிணைப்புடன் பதில் முன்மொழிவு ஒன்றை மத்தியஸ்தர்களிடம் சமர்ப்பித்திருப்பதாக தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதோடு தெற்கு காசா நகரான ரபாவில் நேற்று முன்தினம் தரைவழி தாக்குதல்களையும் ஆரம்பித்துள்ளது.

இந்தத் தாக்குதல்களுக்கு மத்தியில் காசாவில் உள்ள மக்கள் நேற்று (30) நோன்பு பெருநாளை கொண்டாடினர். இஸ்ரேலின் குண்டு வீச்சு மற்றும் இடிபாடுகளுக்கு மத்தியில் மக்கள் பெருநாள் தொழுகையில் ஈடுபட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலானவர்கள் பெருநாள் கொண்டாட்டத்தை விடவும் அடக்கஸ்தலங்களுக்கு சென்று உறவினர்களுக்காக பிரார்த்திப்பதில் ஈடுபட்டிருந்ததாக அங்குள்ள அல் ஜசீரா செய்தியாளர்கள் விபரித்துள்ளனர்.

எனினும் தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரின் மேற்காக இருக்கும் அல் மவாசியில் இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் கூடாரம் ஒன்றில் பெருநாள் தினத்தில் இஸ்ரேல் நடத்திய குண்டு வீச்சில் பத்துப் பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான ஆன் குறிப்பிட்டுள்ளது.

கான் யூனிஸில் இருக்கும் வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் கமெல் அல் அக்காத் என்பவர் கொல்லப்பட்டுள்ளார். இவரது மனைவி மற்றும் குழந்தை இஸ்ரேல் முன்னர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கான் யூனிஸின் கிழக்காக உள்ள பானி சுஹைலாவில் குடும்ப வீடு ஒன்றின் மீது இடம்பெற்ற வான் தாக்குதலில் இரு சிறுமிகள் கொல்லப்பட்டுள்ளனர். பெருநாளைக்கு அணியும் புத்தாடை உடனேயே இவர் கொல்லப்பட்டிருப்பதாக மஆன் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டு மேலும் 70 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. காசாவில் கடந்த மார்ச் முதலாம் திகதி முதல் கட்ட போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து கடந்த மார்ச் 18 ஆம் திகதியே இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியது. அது தொடக்கம் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 1000ஐ நெருங்கியுள்ளது.

மறுபுறம் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட மொத்த பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 50,277 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே தெற்கு காசாவில் பாதுகாப்பு வலயமாக குறிப்பிடும் பகுதியை விரிவுபடுத்தும் வகையில் ரபா நகரின் ஜினைனா பகுதியில் தரைவழி நடவடிக்கையை ஆரம்பித்ததாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

ஒரு சில நாட்களுக்கு முன்னர் நான்கு மைத்துனர்கள் கொல்லப்பட்டது உட்பட காசா போர் வெடித்தது தொடக்கம் தமது குடும்பத்தின் 20 உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருப்பதாக காசாவைச் சேர்ந்த அதல் அல் சயேர் தெரிவித்துள்ளார்.

‘கவலைக்குரிய பெருநாளாக இது உள்ளது’ என்று மத்திய நகரான டெயிர் அல் பலாவில் பெருநாள் தொழுகையில் பங்கேற்ற அவர் குறிப்பிட்டார்.

‘எமது அன்புக்குரியவர்கள், எமது குழந்தைகள், எமது வாழ்க்கை, எமது எதிர்காலத்தை நாம் இழந்துள்ளோம். நாம் எமது மாணவர்கள், எமது பாடசாலைகள் மற்றும் எமது கல்வி நிறுவனங்களை இழந்திருக்கிறோம். நாம் அனைத்தையும் இழந்துள்ளோம்’ என்று கண்ணீர் மல்க அவர் குறிப்பிட்டார்.

Related posts

டெக்சாஸ் மாநிலத்தை தாக்கிய ஹனா சூறாவளி

‘எவர் க்ரீன்’ லேசாகத் திரும்பியது

ரஷ்யா விமானங்கள அமெரிக்கா வான்பரப்பில் பறக்கத் தடை