காசாவில் புதிய தரைவழி தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் வகையில் இஸ்ரேல் இராணுவம் வெளியேற்ற உத்தரவுகளை பிறப்பித்திருப்பதோடு அதன் உக்கிர தாக்குதல்கள் நீடித்துவரும் நிலையில் மேலும் 42 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
வடக்கு காசாவின் பெயித் ஹனூன், பெயித் லஹியா உட்பட பல பகுதிகளில் இருந்து பலஸ்தீனர்களை வெளியேறும்படி இஸ்ரேல் இராணுவம் நேற்று புதிய உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.
முன்னதாக தெற்கு காசாவின் ரபா மற்றும் அதற்கு அருகாமை பகுதிகளில் இருந்து மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் உத்தரவை இஸ்ரேல் பிறப்பித்திருந்தது.
காசாவில் முதல் கட்ட போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் அங்கு வான் மற்றும் தரை வழியாக கடும் தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல் இராணுவம் தரைவழி படை நடவடிக்கையையும் தீவிரப்படுத்தி வருகிறது.
இதற்கு வழிவகுக்கும் வகையில் கடற்கரையோரத்தில் பரந்து காணப்படும் கூடாரங்கள் இருக்கும் மவாசி பகுதியை நோக்கி பலஸ்தீனர்களை வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
பலஸ்தீனர் நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இஸ்ரேல் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தது.
எவ்வாறாயினும் பெருநாள் தினங்களிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தணியவில்லை.
பெருநாள் ஆரம்பித்தது தொடக்கம் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 100 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும் இதில் 32 சிறுவர்கள் அடங்குவதாகவும் ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதேநேரம் காசா பகுதியில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அங்கு மனிதாபிமான நெருக்கடி தீவிரம் அடைந்திருப்பதாகவும் அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 42 பேர் கொல்லப்பட்டு மேலும் 183 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காசாவில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் நீடிக்கும் நிலையில் அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாகவும் அந்த அமைச்சு கூறியது.
இதில் இரண்டு மாத போர் நிறுத்தத்தின் பின் கடந்த மார்ச் 18 ஆம் திகதி காசா மீது இஸ்ரேல் தாக்குதல்களை ஆரம்பித்தது தொடக்கம் குறைந்தது 1,042 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு 2,542 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைப்பு டெலிகிராமில் வெளியிட்ட மேற்படி அறிவிப்பில் கூறியுள்ளது.
இதேவேளை ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியமான யுனிசெப் வெளியிட்ட அறிவிப்பில், காசா போர் நிறுத்தம் முறிந்து இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்களை ஆரம்பித்தது தொடக்கம் அதன் கடுமையான குண்டு வீச்சுகள் மற்றும் தரைவழி தாக்குதல்களில் குறைந்தது 322 சிறுவர்கள் கொல்லப்பட்டு மேலும் 609 பேர் காயம் அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளது.
இதன்படி கடந்த 10 நாட்களில் சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 100 சிறுவர்கள் கொல்லப்பட்டு அல்லது காயமடைந்திருப்பதாக அது சுட்டிக்காட்டியது.
இந்த சிறுவர்களில் பெரும்பாலானவர்கள் இடம்பெயர்ந்து, கூடாரங்கள் அல்லது சேதமடைந்த வீடுகளில் தங்கி இருந்தவர்கள்’ என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 2023 ஒக்டோபரில் காசாவில் போர் வெடித்தது தொடக்கம் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 50,399 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 114,583 பேர் காயமடைந்துள்ளனர்.