காசாவில் இரண்டு மருத்துவமனைகளிற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் செய்தியாளர் உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள மருத்துவர்கள் ஆறு செய்தியாளர்கள் உட்பட 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஊடகவியலாளர்கள் தங்கியிருந்த கூடாரங்களை இலக்குவைத்தே இஸ்ரேல் வான்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
காசாவின் தென்பகுதியில் உள்ள கான்யூனிசின் நாசெர் மருத்துவமனைக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்கள் காரணமாக அந்த கூடாரங்கள் தீப்பற்றி எரிந்தன இதன் போது பாலஸ்தீன் டுடே தொலைக்காட்சியின் உள்ளுர் செய்தியாளரான யூசெவ் அல் பஹாவி கொல்லப்பட்டார் .
விமான தாக்குதலில் காயமடைந்த ஆறு ஊடகவியலாளர்களில் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இதில் ஒருவர் கடும் எரிகாயங்களால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மற்றுமொருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச சட்டங்களின் கீழ் பத்திரிகையாளர்கள் பாதுகாக்கப்பட்டவர்கள் மோதலில் ஈடுபடும் தரப்பினர் அவர்களை பாதுகாக்கவேண்டும்.
எனினும் ஒக்டோபர் 2023 இல் இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்த பின்னர் 200 ஊடகவியலாளர்களும் ஊடக பணியாளர்களும் இஸ்ரேலின் தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளனர்.