காசாவில் தொடரும் உக்கிர தாக்குதல்களுக்கு மத்தியில் அங்கு இராணுவ நடவடிக்கையை அதிகரித்து பெரும் பகுதியை கைப்பற்றவிருப்பதாகவும் அவ்வாறு கைப்பற்றிய பகுதிகளை பாதுகாப்பு வலயங்களுக்குள் இணைக்கவிருப்பதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.
பெரும் அளவில் மக்கள் வெளியேற்றப்படவிருப்பதாகவும் அது எச்சரித்துள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ராயேல் காட்ஸ் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், மோதல் இடம்பெறும் பகுதிகளில் இருந்து வெளியேற்றங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் காசா மக்கள் ஹமாஸை ஒழித்து இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதே போரை முடிவுக்குக் கொண்டுவர ஒரே வழி என்றும் எச்சரித்துள்ளது.
இந்த படை நடவடிக்கை போராளிகள் மற்றும் உட்கட்டமைப்புகளை அகற்றுவதாகவும் பெரும் அளவான பகுதிகளை கைப்பற்றி அவற்றை இஸ்ரேல் அரசின் பாதுகாப்பு வலயத்திற்குள் இணைப்பதாகவும் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே காசாவின் எல்லை பகுதிகளில் ‘யுத்த சூன்ய வலயம்’ ஒன்றின் அங்கமாக காசாவின் சுமார் 62 சதுர கிலோமீற்றர் அல்லது 17 வீதமான நிலத்தை இஸ்ரேல் கைப்பற்றி இருப்பதாக இஸ்ரேலிய உரிமைக் குழுவான கிஷா குறிப்பிட்டுள்ளது.
எனினும் இராணுவ அழுத்தத்தால் அன்றி பேச்சுவார்த்தைகள் மூலமே இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று ஹமாஸ் மூத்த அதிகாரி பசம் நயிம், ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு மாதங்கள் நீடித்த முதல் கட்ட போர் நிறுத்தத்தின்போது 33 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் காசாவில் தொடர்ந்து 59 பயணக்கைதிகள் இருப்பதாக நம்பப்படுகிறது.
ஏற்கனவே தெற்கு காசா நகர்களான ரபா மற்றும் கான் யூனிஸில் இருக்கும் மக்களை முன்னர் மனிதாபிமான வலயமாக அறிவிக்கப்பட்டிருந்த கடற்கரையோர பகுதியான மவாசியை நோக்கி செல்லும்படி இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
வெளியேற்ற உத்தரவுகளை அடுத்து ரபாவை சூழவுள்ள பகுதிகள் கிட்டத்தட்ட வெறிச்சோடி இருப்பதாக பலஸ்தீன வானொலி குறிப்பிட்டுள்ளது.
காசாவில் இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்தி வருவதோடு நேற்று (02) அதிகாலை தொடக்கம் இடம்பெற்ற தாக்குதல்களில் குறைந்தது 57 பேர் கொல்லப்பட்டிருப்பதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஜபலியாவில் இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ஐ.நா. மருத்தவ நிலையம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில் 9 சிறுவர்கள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கான் யூனிஸில் தாக்குதல் ஒன்று இடம்பெற்ற பகுதியில் சிறிய பாதணி ஒன்றை உயர்த்திக் காட்டிய ரதா அல் ஜப்புர் என்ற பெண், இரத்தம் படிந்த சுவரை சுட்டிக்காட்டி தனது மூன்று மாத குழந்தையுடன் அயலவர் ஒருவரும் கொல்லப்பட்டதை விபரித்தார்.
மீட்பாளர்களால் கொல்லப்பட்டவர்களின் உடல் பாகங்களை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக சிவில் பாதுகாப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
தாக்குதல் இடம்பெறும்போது அந்த விட்டில் ‘நாங்கள் அமர்வதற்கு அல்லது உறங்குவதற்கு அல்லது ஒன்றும் செய்ய முடியாத நிலையில் தங்கி இருந்ததாக’ அல் ஜப்புர் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று எகிப்து எல்லையை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலின் வான் மற்றும் செல் தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது காசாவில் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலின் பாரிய தரைவழி படை நடவடிக்கைக்கான வாய்ப்பை அதிகரித்திருப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
காசாவின் தென் முனை நகரான ரபாவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளை நோக்கி இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் தரைப்படைகள் முன்னேற ஆரம்பித்திருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் நேற்று தெரிவித்தது.
இந்த வாரத்தில் ரபாவில் உள்ள சுமார் 140,000 மக்களை தமது வீடுகளை விட்டு வெளியேறுவதற்கு உத்தரவிட்டிருப்பதோடு வடக்கு காசாவிலும் இவ்வாறான வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை காசாவில் இஸ்ரேல் முழு முற்றுகையை கடைபிடித்து வரும் நிலையில் அங்குள்ள தீர்க்கமான அனைத்து பேக்கரிகளும் மூடப்பட்டுள்ளன.
காசாவில் பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அப்துல் நாசர் அல் அஜ்ரமி கூறியதாவது, ‘காசா பேக்கரிகளுக்கு ஐ.நாவின் உலக உணவுத் திட்டம் மாத்திரமே அனுசரணை மற்றும் அவர்களுக்கான அனைத்து உதவிகளையும் வழங்குகிறது’ என்றார்.
இந்நிலையில் பேக்கரிகள் மூடப்பட்டிருப்பட்டிருப்பது மாற்று வழி இல்லாத காசா மக்களுக்கு கடினமானதாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.நா நிறுவனம் காசாவில் உள்ள அகதி முகாம்களுக்கு உணவு வழங்குவதில் பேக்கரிகளே பிரதான மூலமாக உள்ளன.
கடந்த மார்ச் 1 ஆம் திகதி முதல் கட்ட போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த அடுத்த தினத்தில் காசாவுக்கான உதவிகளை இஸ்ரேல் முடக்கியதோடு அங்குள்ள பிரதான நீர் உப்பு நீக்கும் ஆலைக்கான மின்சாரத்தையும் துண்டித்தது. இதனால் அங்கு குடிநீர் பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது.
இந்த கொடிய போரில் பட்டினியை இஸ்ரேல் ஆயுதமாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ள ஹமாஸ் அமைப்பு, பஞ்சம் மற்றும் அழிவில் இருந்து காசாவை பாதுகாப்பதற்கு அவசரமாக செயற்படும்படி அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த 2023 ஒக்டோபர் தொடக்கம் காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 50,423 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.