சூடான செய்திகள் 1

களுகங்கை நீர்த்தேக்கத்தில் மங்கள நீர் நிரப்பல் விழா உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது

(UTV|COLOMBO)-21 ஆம் நூற்றாண்டில் எமது நாட்டின் நீர்ப்பாசன புரட்சியாக குறிப்பிடப்படும் மொரகஹகந்த – களுகங்கை பாரிய அபிவிருத்தி திட்டத்தின் களுகங்கை நீர்த்தேக்கத்தில் மங்கள நீர் நிரப்பல் விழா மற்றும் ரஜரட்டையையும் மலைநாட்டையும் ஒன்றிணைக்கும் மொரகஹகந்த களுகங்கை சுரங்கக் கால்வாயின் நிர்மாணப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வு சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

மொரகஹகந்த திட்டத்தின் இரண்டாவது நீர்த்தேக்கமான களுகங்கை நீர்த்தேக்கம், மாத்தளை மாவட்டத்தின் தும்பர பள்ளத்தாக்கின் நக்கிள்ஸ் மலையடிவாரத்தில் களுபஹன பிரதேசத்தில் ஊற்றெடுக்கும் களுகங்கையை லக்கல – பல்லேகம பிரதேசத்தில் இடைமறித்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நீர்த்தேக்கத்தின் மொத்த நீர்க் கொள்ளளவு 248 மில்லியன் கனமீற்றர்களாகும். அதாவது 200,880 ஏக்கர் அடிகளாகும். இதன் பிரதான அணைக்கட்டு 618 மீற்றர் நீளமும் 68 மீற்றர் உயரமும் உடையது. அணைக்கட்டின் மேற்பரப்பின் உச்சியின் அகலம் 08 மீற்றர்களாகும். நீர்த்தேக்கத்திற்கு வலது புறமாக நிர்மாணிக்கப்படும் கருங்கல் அணைக்கட்டு 719 மீற்றர் நீளமும் 28 மீற்றர் உயரமும் உடையது. இந்நீர்த்தேக்கம் 14.5 சதுர கிலோமீற்றர் பரப்பை கொண்டுள்ளதுடன், 128 சதுர கிலோமீற்றர் பிரதேசம் இதனால் போஷிக்கப்படுகின்றது.

களுகங்கை பிரதேசத்தில் மீளக் குடியமர்த்தப்படும் 3,000 குடும்பங்களுக்கு களுகங்கை நீர்த்தேக்கத்திலிருந்து நீர் விநியோகிக்கப்படுவதுடன், பழைய ஹத்தொட வாவியிலிருந்து நீரைப் பெற்று விவசாயம் மேற்கொள்ளப்பட்ட சுமார் 2,000 ஏக்கரில் தொடர்ச்சியாக பயிர்ச்செய்கை செய்வதற்கு தேவையான நீர் வழங்கப்பட்டதன் பின்னர் எஞ்சிய நீரை மொரகஹகந்த நீர்த்தேக்கத்திற்கு கொண்டுசெல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

மொரகஹகந்த மற்றும் களுகங்கை நீர்த்தேக்கங்களை ஒன்றிணைக்கும் 09 கிலோமீற்றர் நீளமான சுரங்க கால்வாயின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த கால்வாயினூடாக களுகங்கை நீர்த்தேக்கத்திலிருந்து நீரானது செக்கனுக்கு 35 கனமீற்றர் வேகத்தில் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை நோக்கிப் பயணிக்கும். இந்த சுரங்கக் கால்வாய் 25 அடி விட்டத்தைக் கொண்டுள்ளது. இதன் நிர்மாணப் பணிகளை 36 மாதங்களில் நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்படுவதுடன், இவ் அனைத்து திட்டங்களும் சூழல்நேயமான முறையில் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும்.

களுகங்கை நீர்த்தேக்கம் நிர்மாணிக்கப்படுவதனால் மொரகஹகந்த – களுகங்கை திட்டத்தின் மேல் எலஹெர கால்வாயினூடாக மஹா கனதராவ வரை கொண்டுசெல்லப்படும் நீரும் பழைய அம்பன் கங்கை, யோதஎல ஊடாக மின்னேரிய, கிரிதலை, கவுடுல்ல, கந்தளாய் வரை கொண்டுசெல்லப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டு அப்பிரதேசங்களில் விவசாய அபிவிருத்தியானது மேலும் விரிவுபடுத்தப்படும்.

அத்துடன் பழைய அம்பன் கங்கையினூடாக போவதென்ன நீர்த்தேக்கத்திலிருந்து மொரகஹகந்த, எலஹெர கால்வாயினூடாக கொண்டுசெல்லப்படும் நீர் வடமேல் மாகாணத்தில் சுமார் 40,000 குடும்பங்களுக்கு ஆண்டு முழுவதும் நீர்ப்பாசனத்திற்கும் குடிநீர் மற்றும் கைத்தொழில் நீர்த் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியதாக இருப்பதற்கும் களுகங்கை நீர்த்தேக்கத்திலிருந்து மொரகஹகந்த நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கப்படுவதனாலேயே ஆகும்.

மொரகஹகந்த – களுகங்கை நீர்த்தேக்கத் திட்டத்தினூடாக 25 மெகாவோட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்பிற்கு சேர்க்கப்படுகின்றது. மகாவலி திட்டத்தின் பின்னர் இந்நாட்டில் பல்நோக்கு செயற்திட்டத்தினால் தேசிய மின்கட்டணத்திற்கு 25 மெகாவோட் மின்சாரம் சேர்க்கப்படும் வரலாற்று முக்கியத்துவமான நிகழ்வு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

அத்துடன் 845 மீற்றர் நீளமான மொரகஹகந்த பிரதான அணைக்கட்டின் ஒரு புறத்தில் பாரிய கருங்கல்லால் வடிக்கப்பட்டுள்ள 27அடி உயரமான புத்தபெருமானின் திருவுருவச் சிலையும் பக்தர்களின் வழிபாட்டிற்காக ஜனாதிபதி அவர்களினால் திரைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தினை குலசிங்க நீர்த்தேக்கம் என பெயர் சூட்டப்படும் விசேட நிகழ்வும் நாளை ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இது எமது நாட்டிற்கே உரிய புதிய தொழிநுட்ப நிர்மாணங்களை உருவாக்கிய பொறியியலாளர் கலாநிதி ஏ.என்.எஸ்.குலசிங்கவை நினைவுகூரும் முகமாகவே இவ்வாறு பெயரிடப்படுகின்றது.

(ஜனாதிபதி ஊடக பிரிவு)

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

சேனா படைப்புழு தாக்கம் – விலங்குகளிற்கு உணவுத் தட்டுப்பாடு

ரயில் ஊழியர்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பில்

காற்றின் வேகமானது அதிகரித்து வீசலாம்