அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

கல்வியின் மூலம் மட்டுமே வறுமையை முழுமையாக ஒழிக்க முடியும் – ஜனாதிபதி அநுர

அரசாங்கத்தின் முக்கியமான திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான உப தலைவர் மார்டின் ரேசர் தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் உலக வங்கி பிரதிநிதிகளுக்கும் இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (21) நடைபெற்ற சந்திப்பின் போது உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் மார்டின் ரேசர் (Martin Raiser) இதனைத் தெரிவித்தார்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், கிளீன் ஶ்ரீலங்கா, கிராமிய வறுமை ஒழிப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு உலக வங்கியிடமிருந்து நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க இதன்போது உடன்பாடு தெரிவிக்கப்பட்டது.

கல்வி, எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வடக்கு அபிவிருத்தி ஆகியவற்றில் புதிய திட்டங்களுக்கு உதவி வழங்குவது குறித்து இதன் போது கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

உலக வங்கி இலங்கைக்கு வழங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள கடன் உதவியை உரிய சமயத்தில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக மார்டின் ரேசர் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கல்வித் துறை முன்னேற்றத்தின் மூலம் கிராமிய வறுமையை ஒழிக்க முடியும் என்று குறிப்பிட்டார்.

அதற்காக புதிய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள கல்வி சீர்திருத்த முயற்சிகளுக்கும், பொதுப் போக்குவரத்துத் துறையின் முன்னேற்றத்திற்கும் தேவையான உதவிகளை வழங்குமாறு உலக வங்கி பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.

இலங்கையின் விவசாயத் துறையில் 28% தொழில்படை ஈடுபட்டிருந்தாலும், இலங்கைப் பொருளாதாரத்திற்கு விவசாயத் துறையிலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 6% பங்களிப்பு கிடைப்பது போதுமானதாக இல்லை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

மக்கள் தொகை அடர்த்திக்கு ஏற்ப இலங்கை மக்களுக்குத் தேவையான வசதிகளை வழங்க புதிய அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் திட்டம் குறித்து உலக வங்கி பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி விளக்கமளித்தார்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

2025 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் இந்த கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டது.

விமான நிலையம் மற்றும் துறைமுக அபிவிருத்திக்கான புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், துறைமுக அபிவிருத்தியை துரிதமாக மேற்கொள்ள இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

குறிப்பாக வடக்கின் அபிவிருத்திக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், வடக்கில் மூன்று முதலீட்டு வலயங்களை நிறுவ நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வடக்கில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், நீர் வசதிகளை வழங்கவும், வடக்கு மக்களின் சமூகப் பிரச்சினைகளுக்கு கலாச்சார அடையாளத்தைப் பாதுகாக்கும் வகையில் தீர்வு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார தெரிவித்தார்.

தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, உலக வங்கியின் பிராந்திய உள்நாட்டுப் பணிப்பாளர் (நேபாளம், மாலைதீவு, இலங்கை) டேவிட் சிஸ்லன்(David Sislen), உலக வங்கி மற்றும் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபன (IFC) (இலங்கை மற்றும் மாலைதீவு) உள்நாட்டுப் பணிப்பாளர் கெவோர்க் சார்க்சியன்( Gevorg Sargsyan),உப தலைவரின் விசேட உதவியாளர் கிஷான் அபேகுணவர்தன ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

தமிழர்களுக்காக UNயின் தலையீடு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் – சம்மந்தன், சுமந்திரன் வலியுறுத்தல்

கட்டுநாயக்க விமானநிலையத்தில் அவசரமாக விமானமொன்று தரையிறக்கம்…

சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற 30 புகழிட கோரிக்கையாளர்கள் கைது