உள்நாடு

கல்முனை மாநகர சபையில் Online Payment System அங்குரார்ப்பணம்

கல்முனை மாநகர சபைக்கான கொடுப்பனவுகளை இணைய வழி ஒன்லைன் மூலம் செலுத்துவதற்கான Online Payment System இன்று செவ்வாய்க்கிழமை (27) மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

கல்முனை மாநகர சபையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற நிதி மோசடிகளைக் கருத்தில் கொண்டு, நிதிப் பிரிவை ஒழுங்குமுறைப்படுத்தி, மோசடிகளை முற்றாகத் தவிர்க்கும் வகையில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண சபை என்பவற்றின் அங்கீகாரம் பெற்ற வயம்ப அபிவிருத்தி அதிகார சபையின் “CAT-20 Payment System” எனும் செயலியானது UNDP – யூ.என்.டி.பி. நிறுவனத்தின் அனுசரணையுடன் சில மாதங்களுக்கு முன்னர் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

ஒரே கூரையின் கீழ் சேவைகளை வழங்கும் Onestop Service – முகப்பு அலுவவலகத்தில் ஏற்படுத்தப்பட்ட மேற்படி முறைமையின் ஓர் அங்கமாகவே ஒன்லைன் மூலமாக கொடுப்பனவுகளை செலுத்தும் சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது கல்முனை மாநகர சபைக்குட்பட்ட வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் பலர் நிகழ்வில் கலந்து கொண்டு குறித்த ஒன்லைன் மூலமான கொடுப்பனவு முறைமையை செயற்படுத்துவது தொடர்பிலான ஆலோசனை, வழிகாட்டல்களை பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜௌஸி, கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ், UNDP நிறுவனத்தின் கிழக்கு மாகாண திட்ட இணைப்பாளர் ஷாமில் சாலிஹ் உட்பட வயம்ப அபிவிருத்தி அதிகார சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களும் மாநகர சபையின் பிரிவுத் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்களும் பங்கேறிருந்தனர்.

கிழக்கு மாகாண சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் முகப்பு அலுவலக Onestop Service திட்டத்திற்கு ஏலவே 10 உள்ளூராட்சி மன்றங்கள் தெரிவு செய்யப்பட்டிருந்த போதிலும் மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மிஎடுத்துக் கொண்ட அயராத முயற்சி காரணமாக 11 ஆவது உள்ளூராட்சி மன்றமாக கல்முனை மாநகர சபையும் உள்வாங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை இத்திட்டத்தின் ஊடான Online Payment சேவையை கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களுள் முதலாவதாக கல்முனை மாநகர சபையே ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த Online Payment System மூலம் கல்முனை மாநகர சபைக்குரிய சோலை வரி உள்ளிட்ட சேவைக் கட்டணங்களை பொது மக்கள் மாநகர சபைக்கு வராமலேயே
www.pay.cat2020.lk எனும் இணையத்தளத்தினுள் பிரவேசிப்பதன் மூலம் ஒன்லைன் ஊடாக இலகுவாக செலுத்திக் கொள்ள முடியும்.

இது சம்மந்தமான மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர் முகப்பு அலுவலகத்தின் 0672059546 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்படுகிறது.

Related posts

கிண்ணியா நகர சபை தவிசாளர் விளக்கமறியலில்

நிலக்கரிக்கு தட்டுப்பாடு இல்லை

மேலும் 6 நோயாளர்கள் பூரண குணம்