வகைப்படுத்தப்படாத

கலவானையில் நான்கு மலைத் தொடர்களில் மண்சரிவு அபாயம்

(UDHAYAM, COLOMBO) – நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம், மண்சரிவு மற்றும் வறட்சி காரணமாக இரண்டு லட்சத்து எண்ணாயிரத்து 660 குடும்பங்களைச் சேர்ந்த எட்டு லட்சத்து 4 ஆயிரத்து 831 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மையம் இதனை அறிவித்துள்ளது.

எட்டு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் 213 பேர் உயிரிழந்ததுடன், 150 பேர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன், 79 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளனர்.

அனர்த்தங்கள் ஏற்பட்டு 2 வாரங்கள் கடந்துள்ள நிலையிலும், காணாமல்போனோர் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

இதேவேளை, ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 853 குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து லட்சத்து 95 ஆயிரத்து 554 பேர் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அசாதாரண காலநிலையின் காரணமாக இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

அங்கு 87 பேர் உயிரிழந்ததுடன, 14 பேர் காணாமல் போயுள்ளனர்.

இந்த நிலையில், தேசிய கட்டிட ஆய்வு  பணிமனையால் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, காலி, மாத்தறை, ஹம்பந்தோட்டை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை நிலவுகிறது.

இதனுடன் இரத்தினபுரி – கலவானை பிரதேசத்தில் 4 மலைத் தொடர்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேவல்கந்துர, தோலஹேன, சமனபுர மற்றும் கொஸ்வத்தை ஆகிய மலைத் தொடர்களிலேயே இவ்வாறு மண்சரிவு அபாயம் காணப்படுவதாக கலவானை பிரதேச செயலாளர் உதய குமாரி குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே அவதான பிரதேசத்தில் வசித்து வந்த 36 குடும்பங்ளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை, வெள்ளம் மற்றும் மண்சரிவால் மூடப்பட்டிருந்த பல பாடசாலைகள் நேற்றையதினம் மீண்டும் திறக்கப்பட்டன.

பெரும்பாலான மாணவர்கள் சீருடை அல்லாமல் சாதாரண உடையிலேயே பாடசாலைக்கு வந்ததாகவும், பாடசாலைகளின் வரவு மட்டம் குறைவாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்தங்களால் பலியானவர்களில் 51 பேர் பாடசாலை மாணவர்களாவர்.

அத்துடன், 54 ஆயிரம் பாடசாலை மாணவர்கள் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், மண்சரிவு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நாவலபிட்டி கதிரேசன் தமிழ் வித்தியாலத்தை எதிர்வரும் 7ம் திகதி வரையில் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்டிட ஆய்வுப் பணிமனை வெளியிட்ட ஆய்வறிக்கையின் அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் என். நாகராஜ் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று இங்கிரிய – மாபுடுகல மஹா வித்தியாலயமும் அனர்த்த அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ளது.

இதேவேளை, பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்கின்ற போதும், வடமாகாணத்தின் பல மாவட்டங்களில் வறட்சியான காலநிலை நிலவுகிறது.

இதனால் 33 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 21 ஆயிரம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதிகபடியான பாதிப்பு யாழப்பாணத்தில் ஏற்பட்டுள்ளது.

அங்கு மருதங்கேணி, காரைநகர், சண்டிலிப்பாய், சங்கத்தானை மற்றும் வேலனை போன்ற பகுதிகளில் அதிக வறட்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் எதிர்வரும் 24 மணி நேரங்களுள், நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

Lion Srilal Fernando, MJF appointed District Governor of Lions Clubs International District 306 A1

விவசாயிகளுக்கு 40 ஆயிரம் ரூபாய் காப்புறுதி வழங்க நடவடிக்கை

ජවිපෙ ‘‘පාද සටන’’ විරෝධතා පාගමන අද ඇරඹේ