சூடான செய்திகள் 1

பகிரங்க விவாதத்திற்கு கர்தினால் மெல்கம் ரஞ்சித்திற்கு ஜனாதிபதி அழைப்பு

நாட்டின் அரச தலைவர்களுக்கு முதுகெலும்பு இல்லை என அண்மையில் தனது உரையில் கருத்துத் தெரிவித்திருந்த கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதிலளித்துள்ளார்.

தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்காகவே கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் அரசாங்கத்தின் மீது வசைபாடியிருப்பதாக குற்றம் சாட்டிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்திடம் குறைபாடுகள் இருந்தால் அவை தொடர்பில் ஒழிந்திருந்து வசை பாடுவதை நிறுத்தி, பகிரங்க விவாதமொன்றிற்கு வருமாறும் சவால் விடுத்துள்ளார்

கொழும்பில் நேற்று உரையாற்றும் போது ஜனாதிபதி இது தொடர்பில் தெரிவிக்கையில்;

“நான் இந்த நான்கரை வருடங்களுக்கு மேலாக யாருடன் மோதிக் கொண்டிருக்கின்றேன் தெரியுமா?. போதைப் பொருள் கடத்தல்காரர்கள், பாரதூரமான குற்றவாளிகள், பாலியல் வன்கொடுமையாளர்கள், சிறுவர்களை வன்கொடுமையில் ஈடுபடுத்துவோர், புகையிலை வியாபாரிகள் இவர்களுடன்தான் நான் மோதிக் கொண்டிருக்கின்றேன்.

அரசியலில் உள்ள மோசடிக்காரர்கள், கள்ளர்கள், திருடர்கள், பாதாள உலகக் கோஸ்டியினர் ஆகியோருக்கு எதிராகவே நான் போராடுகின்றேன்.

அவர்களுடன் தான் நான் மோதுகின்றேன். இதற்கமைய எனக்கு நல்ல முதுகெலும்பொன்று இருக்கின்றது என்பதை மிகத் தெளிவாக நிரூபித்துக்காட்டியிருக்கின்றேன். பல்வேறு குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஆகியோருடன் முதுகெலும்பு உள்ளவர்கள் என்று கூறிக்கொள்பவர்களும் இணைந்து என்னை தாக்க முற்பட்டுள்ளனர். ..

அதனால் பாதாள உலகக் கோஷ்டியினர், பாலியல் வன்கொடுமையாளர்கள், சிறுவர் துஸ்பிரயோகங்களில் ஈடுபடுவோர் உட்பட நாட்டை சீரழிக்கும் கும்பல்களுடன் முதுகெலும்பு உள்ளவர்கள் இணையக்கூடாது.

அவர்களுக்கு எதிரான போரை தொடுத்துள்ள எம்முடன் இணைந்து நாட்டில் சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டி, நீதியான சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு உதவ வேண்டும். அரசாங்கத்தில் குறைபாடுகள் இருந்தால் அவை தொடர்பில் பகிரங்கமாக கலந்துரையாட முன் வர வேண்டும்..” எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது தாக்குதல்

தெஹிவளையில் 6 வாள்களுடன் வர்த்தகர்கள் கைது

05 நாள் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்