உள்நாடுசூடான செய்திகள் 1புகைப்படங்கள்

கண்டியில் மும் மத ஸ்தலங்களுக்கும் சென்று ஆசி பெற்ற ஜானாதிபதி (Photos)

மதத் தளங்களுக்கு ஜனாதிபதி பயணம் செய்து ஆசி பெற்றார் !

  •  மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களையும் சந்தித்தார்
  • நாட்டின் பிள்ளைகள் கல்வியை இழக்க இடமளியோம்.
  • ஆசிரியர் சமூகத்தின் மதிப்பைப் பாதுகாப்பது ஆசிரியர்களின் பொறுப்பாகும்.
  •  சம்பள பிரச்சினைகள் ஏற்படாதவாறு அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கான முறைமையொன்று அடுத்த வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படும்.
  • மகா நாயக்க தேரர்களைச் சந்தித்து ஜனாதிபதி எடுத்துரைத்தார்.
  • ஜனாதிபதியின் விசேட உரை எதிர்காலம் மீதான நம்பிகையை தந்துள்ளது அதற்காக மகா சங்கத்தினரின் ஆசி ஜனாதிபதிக்கு கிட்டும். அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் முருந்தெனியே தம்மரதன தேரர்

பிள்ளைகளின் கல்விக்காக காலை வேளையில் ஆசிரியர்கள் பாடசாலைகளில் இருக்க வேண்டியது கட்டாயமானது என்றும், எதிர்வரும் நாட்களில் அவ்வாறு நடக்காமல் போனால் ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்தார்.

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் ஸ்ரீ வரகாகொட ஞானரதன தேரரை இன்று (27) சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

ஆசிரியர்களும், அதிபர்களும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு முன்மாதிரியாக செயற்பட வேண்டும் எனவும், அவர்கள் போராட்டங்களிலும், வேலைநிறுத்தங்களிலும் ஈடுபடும் போது, எதிர்காலத்தில் பிள்ளைகளுக்கு அவர்களால் எவ்வாறு அறிவுரைகளையும் வழிகாட்டல்களையும் வழங்க முடியும்​ என சிந்திக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஒட்டுமொத்தமாக ஆசிரியர் சேவையிலிருக்கும் சகலரும் இந்த ஆர்ப்ப்பாட்டத்தில் பங்கெடுக்கவில்லை என்றும் அரசியல் சார்ந்தவர்களே இதில் பங்கெடுத்திருப்பதாக தனக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதனால் ஒட்டுமொத்த ஆசிரியர் தொழிலுக்கும் களங்கம் ஏற்படுமெனவும் தெரிவித்தார்.

சிங்கள பாடசாலைகளுக்குள் மாத்திரமே இந்த பணிப் புறக்கணிப்பு காணப்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, தமிழ், முஸ்லிம், தனியார் பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் வழமைப்போல நடைப்பெறுவதாகவும் தெரிவித்தார்.

பாடசாலையின் பாதுகாவலர்கள் மாணவர்களை திருப்பி அனுப்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (27) முற்பகல் வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையைத் தரிசித்து ஆசி பெற்றுக்கொண்டார். தலதா மாளிகைக்கு சென்ற ஜனாதிபதியை, தியவடன நிலமே உள்ளிட்ட விகாரை பஸ்நாயக்க நிலமேமார்கள் வரவேற்றனர்.

அதனையடுத்து தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதிக்கு மகா சங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஆசிர்வதித்தனர்.

இதன்போது கண்டி தலதா மாளிகையில் கலைஞர் அதுல ஹேரத்தினால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அரசர் மற்றும் அரசியின் சிலைகளையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

அதனையடுத்து தலதா மாளிகையை தரிசிக்க வந்திருந்த பொது மக்களோடும் ஜனாதிபதி சிநேகபூர்வமாக உரையாடினார்.

அதன்பின்னர் மல்வத்து மகா விகாரைக்கு சென்ற ஜனாதிபதி மல்வத்து பீடத்தின் மகா நாயக்க தேரர் வண. திப்படுவாவே ஸ்ரீ சுமங்கள தேரரை சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார்.

நேற்றைய விசேட உரையின் பின்னர் முதல் முறையாக மகா நாயக்க தேரர்களைச் சந்தித்த ஜனாதிபதி, அரசாங்கத்தின் முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் அவர்களுக்கு விளக்கமளித்தார். அதனையடுத்து கண்டி பெருநகர அபிவிருத்தி திட்டத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மல்வத்து மகாநாயக்க தேரர்களிடம் கையளித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்துமாறு மகாநாயக்க தேரர்கள் விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்த ஜனாதிபதி, சம்பள பிரச்சினைகள் ஏற்படாதவாறு அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கான முறைமையொன்று அடுத்த வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் என உறுதியளித்தார்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து தற்போதும் அமைச்சரவை கவனம் செலுத்தியிருப்பதாகவும், அதற்கான குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“நான் ஆட்சியை பொறுப்பேற்ற வேளையில் மல்வத்து விகாரைக்கு வந்திருந்தேன். அதன்போது நீங்கள் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைவாக நாட்டின் ஆட்சியை நெறிப்படுத்தி இன்று வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுள்ளோம். அந்த தகவலை உங்களுக்குச் சொல்லவே இன்று இங்கு வந்தேன். வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான இரண்டு இணக்கப்பாடுகளையும் எட்டியுள்ளோம்.

ஆசிரியர்களுக்கு அடுத்த வருடத்திலிருந்தே சம்பள அதிகரிப்பை வழங்க முடியும். அது குறித்து நாம் அவர்களுக்கு தெரியப்படுத்தியிருக்கிறோம். அதேபோல் ஏனைய அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக் குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது. 2022 ஆம் ஆண்டில் 3000 – 17000 வரையிலான சம்பள அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இவ்வருடத்திலும் 10 000 ரூபா சம்பள அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 13000-27000 வரையில் ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளது. அதனால் ஏனைய அரச ஊழியர்கள் குறித்தும் ஆலோசிக்க வேண்டும்.

இவ்வேளையிலும் தமிழ், முஸ்லிம் பாடசாலைகள் இயங்குகின்றன. சிங்கள பாடசாலை ஆசிரியர்கள் மட்டுமே இவ்வாறான தொழிற்சங்கச் செயற்பாடுகளில் இறங்கியுள்ளனர். எவ்வாறாயினும் சம்பள விடயம் தொடர்பில் அமைச்சரவை அனுமதி கிடைத்திருக்கிறது. அதன்படி 2025 ஆம் ஆண்டிலிருந்து அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கான சரியான முறைமையொன்றை செயற்படுத்த எதிர்பார்ப்பதோடு, அது குறித்து ஆராய்வதற்கான குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

கண்டி அபிவிருத்தி திட்டத்துக்கமைய நிர்வாக நகரத்தை குண்டசாலைக்கு கொண்டுச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய IIT பல்கலைக்கழகத்தினை கண்டியிலும் ஸ்தாபிக்க பேச்சுவார்த்தைகளை நடத்திவருகிறோம். பேராதனை பல்கலைக்கழகத்திற்கு புதிய கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படும். இவற்றுக்கு மத்தியில் அஸ்வெசும, உறுமய திட்டங்கள் ஊடாக மக்களுக்கும் நிவாரணங்களை வழங்குகிறோம்.” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அதனையடுத்து அஸ்கிரிய பீடத்தில் மகாநாயக்க வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரிடமும் சிறிது நேரம் கலந்தாலோசித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“பாரம்பரிய அரசியல் பிரிவினைகளுக்கு அமைய செயற்படுவதன் மூலம் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது. அரசியல் ரீதியாக பிரிந்து செயற்பட்டிருந்தால் இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுத்திருக்க முடியாது. நாட்டை தற்போதைய நிலைக்கு கொண்டு வர பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும் சேர்ந்தவர்கள் எமக்கு ஆதரவளித்தனர்.

மேலும் எதிர்க்கட்சியிலும் பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். முழு பாராளுமன்றமும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டிருந்தால் ஒரு நாடாக நாம் சிறந்த பெறுபேறுகளை அடைந்திருக்க முடியும்.

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் இணையுமாறு பாராளுமன்றத்தில் உள்ள அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளேன். இன்று உலக அரசியல் மாறிக்கொண்டிருக்கிறது. இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள முக்கிய கட்சிகள் பிளவடைந்துள்ளன. எனவே, இலங்கையின் பிரதான கட்சிகள் பிளவுபட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கான ஒப்பந்தத்தை எட்டியுள்ளோம். ஆசிரியர்கள் மற்றும் ஏனைய அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

ஒரு கிராமத்தில் நான்குக்கும் மேற்பட்ட அரச அதிகாரிகள் இருந்தாலும், பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பு பெரிதாக இல்லை. தெங்கு தொடர்பான நிறுவனம் இருந்த போதிலும், இலங்கையின் தெங்கு உற்பத்தி குறைந்துதான் செல்கிறது. ஆனால், கேரளாவில் தெங்கு உற்பத்தி அதிகரித்து வருகிறது.

அவர்கள் வேகமாக ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நகர்கின்றனர். எமது மகாவலி வலய அலுவலகங்கள் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் இயங்கினாலும் மகாவலி வலயமானது ஒரு ஹெக்டேயருக்கு மூன்று மெட்ரிக் டொன் விளைச்சலையே பெறுகிறது.

50 வருடங்களில் பெருந்தோட்டக் கைத்தொழில் மூலம் இந்தியா, சீனா போன்ற நாடுகள் பெரும் பொருளாதார நன்மைகளை அடைந்துள்ளன. வெள்ளையர் காலத்தில் தேயிலை, தெங்கு, இறப்பர் பொருளாதாரம் காணப்பட்டது. அதன் பின்னர் 1977களில் திறந்த பொருளாதாரத்துடன் உருவாக்கப்பட்ட ஆடை உற்பத்தித் துறை இல்லையென்றால் நாட்டின் பொருளாதாரம் இன்னும் சரிவடைந்திருக்கும்.

கடலாதெனியா, லங்காதிலக மற்றும் அம்பக்கே விகாரைகளை இணைந்து சுற்றுலா வலயமொன்றை உருவாக்கவுள்ளோம். அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பௌத்த நாகரீக நிலையத்தை உருவாக்கி பெருமளவிலான சுற்றுலாப் பயணிகளை இந்த கண்டி பிரதேசத்திற்கு வரவழைக்க எதிர்பார்த்துள்ளோம்.

வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகை, உடவத்த கெலே வனப்பூங்கா மற்றும் விக்டோரியா அணைக்கட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டியிலும் சில நாட்களை கழிப்பர்.

கண்டி நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் போகம்பர சிறைச்சாலை அமைந்துள்ள பகுதியை ஹோட்டல் வளாகமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும், நகரின் நிர்வாகப் பணிகளை குண்டசாலைக்கு மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. திகன பிரதேசத்தில் தொழிநுட்ப வலயமொன்றை அமைப்பதன் ஊடாக இப்பிரதேசத்தில் தொழில்நுட்ப மேம்பாட்டை ஏற்படுத்த முடியும்.

கண்டி – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் கொழும்பு முதல் மீரிகம வரையிலான பகுதியை சீனாவின் உதவியோடும், குருநாகலிலிருந்து கண்டி வரையிலான பகுதியை ஜப்பானின் உதவியுடன் நிறைவு செய்வது குறித்தும் தற்போது ஆலோசிக்கப்பட்டுள்ளது.

மேலும், நவீன விவசாயத்தை கிராமத்திற்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக செய்வதற்கும் உங்களுடைய ஆதரவை தேவைப்படுகிறது.” என்று ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.

வரலாற்று சிறப்பு மிக்க முத்தியங்கனை ரஜமஹா விகாரையின் விஹாராதிபதி அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர், வண.முருந்தெனிய தம்மரதன தேரர்:

“கடந்த இரண்டு வருட வரலாறு நினைவில் உள்ளது. ஜனாதிபதியாக பதவியேற்கும் முன்னர் நீங்கள் மகாசங்கத்தினரை தரிசித்து ஆசி பெற்றீர்கள். அப்போது நாடு மிகவும் கடினமான இடத்தில் இருந்தது. மக்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு பாராளுமன்றத்தை சுற்றிவளைக்க முற்பட்ட போது நீங்கள் சரியான தீர்மானங்களை எடுத்து நாட்டை இன்றைய நிலைக்கு கொண்டு வந்திருக்கிறீர்கள்.

இலங்கை ஒரு நாடாக தனித்து நிற்க முடியாது. சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்பட வேண்டும். அதைப் பற்றி உங்களுக்கு நல்ல புரிதல் இருக்கிறது. எனவே, சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி நாட்டின் பொருளாதார நிலைமையை நிர்வகிக்க உங்களால் முடிந்தது. உங்களது விசேட உரை எதிர்காலம் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தியது. அதற்காக உங்களை வாழ்த்துகிறோம். தலைவர்களை சோதித்து பார்ப்பதற்கான நேரம் இதுவல்ல.

எதிர்வரும் தேர்தலை இலக்கு வைத்து நாட்டின் பொருளாதார மற்றும் நிதி நிலைமையை புரிந்து கொள்ளாமல் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்குள் ஆசிரியர்களின் வகிபாகம் ஆசிரிய தொழிலின் கௌரவத்தை பாதிக்கிறது. ஆசிரியர்களே பிள்ளைகளுக்கு தவறான முன்னுதாரணமாக திகழ்கின்றனர்.” என்று தெரிவித்தார்.

அதனைடுத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கண்டி கட்டுகலை செல்வ விநாயகர் கோயிலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதோடு, எஸ்.கிருஷ்ணமூர்த்தி குருக்களினால் பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டன.

அதனையடுத்து கண்டி மீரா மக்காம் பள்ளிவாசலுக்கும் ஜனாதிபதி விஜயம் செய்தார். மௌலிவ ஓ.எல்.எம். தாஸிம் துஆப் பிரார்த்தனை மேற்கொண்டார். அங்கிருந்தவர்களுடன் ஜனாதிபதி சிறிது நேரம் உரையாடினார்.

அமைச்சர் மனுஷ நாணயக்கார, இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்தே, திலும் அமுனுகம, பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, மஹிந்தானந்த அலுத்கமகே, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க உள்ளிட்டோரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

ரஷியாவில் உலகக்கோப்பை கால்பந்து தொடர் கோலாகல கலைநிகழ்ச்சியுடன் ஆரம்பமாகியது

ரயில் சேவை வழமைக்கு

பிரகீத் எக்னலிகொட வழக்கு ஒத்திவைப்பு