அரசியல்உள்நாடு

கட்டாய தகனம் – இந்த மன்னிப்பு போதாது – பைஸர் முஸ்தபா

கொவிட் – 19 பெருந்தொற்றுப்பரவல் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டாயத்தகனக் கொள்கையினால் பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் அரசாங்கம் மன்னிப்புக்கோரியிருப்பினும், தமது அன்புக்குரியவர்களைக் கட்டாயத்தகனம் செய்தமையினால் குடும்பங்கள் முகங்கொடுத்த உளவியல் பாதிப்பையும், துன்பத்தையும் சரிசெய்வதற்கு இந்த மன்னிப்பு போதுமானது அல்ல என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி கட்டாயத்தகனக்கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டமை தொடர்பில் முறையான விசாரணையை முன்னெடுப்பதற்கு விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறும், அதனூடாக இக்கொள்கை அமுலாக்கத்துக்குக் அரச, தனியார்துறை சார்ந்த நபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்டோரை அடையாளங்காணுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, அதில் மேலும் கூறியிருப்பதாவது:

கொவிட் – 19 பெருந்தொற்றுப்பரவல் காலப்பகுதியில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் சுகாதார வழிகாட்டல்களுக்கும், இஸ்லாமியர்களின் மத நம்பிக்கைக்கு அமைவாக சடலங்களை அடக்கம் செய்வதில் உலகளாவிய ரீதியில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளுக்கும் முற்றிலும் எதிராக இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டாயத்தகனக் கொள்கையினால் பாதிக்கப்பட்ட சகல தரப்பினரிடமும் அரசாங்கம் அண்மையில் மன்னிப்புக்கோரியிருக்கின்றது.

அவ்வாறு மன்னிப்புக்கோருவதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கையினைப் பாராட்டும் அதேவேளை, தமது அன்புக்குரியவர்களைக் கட்டாயத்தகனம் செய்தமையினால் குடும்பங்கள் முகங்கொடுத்த உளவியல் பாதிப்பையும், துன்பத்தையும் சரிசெய்வதற்கு இந்த மன்னிப்பு போதுமானது அல்ல என்பதை உங்களது கவனத்துக்குக்கொண்டுவர விரும்புகின்றேன்.

மாறாக கட்டாயத்தகனக்கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டமை தொடர்பில் முறையான விசாரணையை முன்னெடுப்பதற்கு விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு உங்களிடம் வலியுறுத்துகின்றேன். அந்த ஆணைக்குழுவானது மேற்குறிப்பிட்ட கொள்கை அமுலாக்கத்துக்குக் காரணமான அரச, தனியார்துறை சார்ந்த நபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்டோரை அடையாளங்காணவேண்டும்.

அதேபோன்று இவ்விவகாரத்தைப் பொறுத்தமட்டில் பாதிக்கப்பட்ட தரப்பினர் உளவியல் ரீதியில் தொடர்ந்து துன்பத்தை அனுபவித்துவரும் நிலையில், அவர்களுக்கு முறையான இழப்பீட்டையும், ஏனைய நிவாரணங்களையும் வழங்கவேண்டும் எனவும் பரிந்துரைக்கின்றேன்.

அத்தகைய நடவடிக்கைகள் நல்லிணக்கத்துக்கும், சமூகங்களுக்கு இடையிலான ஒருமைப்பாட்டுக்கும் வழிவகுக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை என அவர் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

– நா.தனுஜா

Related posts

இன்று அரச விடுமுறை

உயர் தரப் பரீட்சைகள் குறித்து வெளியான அறிவிப்பு!

ஜனாதிபதியின் 71 ஆவது பிறந்த நாள் இன்று