உள்நாடு

கடும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு உடனடி நிவாரணம்

கடும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் நீரியல் வள பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலையினால் பொத்துவில் மீனவ மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய சென்ற போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“அண்மையில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக, நாட்டில் உள்ள அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டனர், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த மாகாணங்களின் மீனவர்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

16 படகுகள் முற்றாக சேதமடைந்துள்ளதை கண்டோம்.

பல மீனவக் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளன. ஜனாதிபதிக்கு இது குறித்து தெரியப்படுத்தியுள்ளோம்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தலையிட்டு இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறது.

வேலை வாய்ப்பை இழந்த குடும்பங்கள் தொடர்பிலான தகவல்களை பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஊடாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு அனுப்பி வைக்குமாறு கிராம சேவகர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சேதமடைந்த மீன்பிடி படகுகளுக்கு நிவாரணம் அளிக்க தயாராக உள்ளோம்” என்றார்.

இதேவேளை, கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழையினால் சேதமடைந்த வீதிகள் மற்றும் பாலங்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் வேலைத்திட்டம் இன்று (02) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல வீதிகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வழங்கப்படுவதாக அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.

எனவே அந்த வீதிகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு அவற்றை விரைந்து சீர்செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எஸ்.எம்.பி. சூரியபண்டார குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மழையுடன் கூடிய வானிலை காரணமாக சேதமடைந்த மனம்பிட்டிய – அரலகங்வில வீதி மிகக் குறுகிய காலத்தில் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

“ஜனாதிபதி பதவியில் இருந்தால் நாடு நாசம்” – முஜிபுர்

இலங்கை வந்த ஈரானின் முதல் பெண்மணி பற்றி உங்களுக்கு தெரியுமா?

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு