அரசியல்உள்நாடு

கடவுச்சீட்டு, வீசா விவகாரத்துக்கு கடந்த அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் – விஜித ஹேரத்

கடவுச்சீட்டு மற்றும் வீசா விவகாரத்தில் கடந்த அரசாங்கம் பழைய முறைகளையே பின்பற்றியிருக்கலாம். ஆனால் அரசாங்கம் அதற்கான நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

இவ்விவகாரத்தில் விடயத்துக்கு பொறுப்பான முன்னாள் அமைச்சர் மாத்திரமின்றி முழு அமைச்சரவையும் பொறுப்பு கூற வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

செவ்வாய்கிழமை (1) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வி.எப்.எஸ். வீசா விவகாரம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அந்த முறைமை இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய பழைய முறைக்கு செல்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தால் பழைய முறையை நடைமுறைப்படுத்தியிருக்க முடியும். ஆனால் அரசாங்கம் அதற்கான நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

ஆனால் நான் அமைச்சுப் பொறுப்பினை ஏற்ற பின்னர் அதற்கான நடவடிக்கை எடுத்திருந்தேன். அதற்கமைய பழைய முறைமை மீள நடைமுறைப்படுத்தப்படுவதோடு, இணையவழியூடாக வீசா வழங்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து கணக்காய்வினை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கணக்காய்வாளர் திணைக்களம் அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

புதிதாக இலத்திரனியல் கடவுச்சீட்டை வழங்குவதற்கு விலைமனுவைக் கோரியிருந்தது. அதற்கமைய அந்த திட்டம் புதியதொரு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்த விலைமனுவுக்கமைய கடந்த ஜூன் மாதத்தில் முதலாவது கடவுச்சீட்டு தொகுதியை வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

எவ்வாறிருப்பினும் அதனை அண்மித்த நாட்களில் தம்மால் கடவுச்சீட்டுக்களை வழங்க முடியாது என்று அந்த நிறுவனம் அறிவித்தது.

அந்த சந்தர்ப்பத்தில் திணைக்களத்திலும் பழைய கடவுச்சீட்டு தொகை பாரியயளவில் காணப்படவில்லை. பாரிய தொகையொன்று கையிருப்பில் இருந்திருந்தால் இன்று இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.

பழைய கையிருப்பு தொகையில் 50 000 கடவுச்சீட்டுக்கள் மாத்திரமே காணப்பட்டன. ஆனால் நாளொன்றுக்கு சுமார் 3000 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படுகின்றன. எனினும் தட்டுப்பாடு காரணமாக அந்த எண்ணிக்கை வரையறுக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும் தற்போது தடையின்றி கடவுச்சீட்டை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் எதிர்கொண்டுள்ள அசௌகரியங்களுக்கு முன்னாள் அமைச்சர் மாத்திரமின்றி;, அவரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அங்கீகாரமளித்த முழு அமைச்சரவையும் பொறுப்பு கூற வேண்டும்.

விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வினை வழங்க தற்போதைய அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என்றார்.

-எம்.மனோசித்ரா

Related posts

கறுப்பு பூஞ்சை தொற்றுக்குள்ளான கொரோனா நோயாளர்கள் அடையாளம்

சபாநாயகருக்கு கொவிட் தொற்று

இந்தியன் இழுவை மடி படகையும் உள்ளூர் இழுவைமடி படகுகளையும் தடுக்க கோரி யாழில் மீனவர்கள் போராட்டம்….!