உள்நாடு

கடற்றொழில் , நீரியல் வளத்துறைக்கான புதிய சட்ட மூலம் – டக்ளஸ் தேவானந்தா

(UTV | கொழும்பு) –

 

கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறைக்கான திருத்தப்பட்ட புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டுவருவதாகவும் அதற்கான வரைவு தற்போது துறைசார் நிபுணர்களின் கருத்துக்களுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.மீன்பிடிப் படகுகளில் Battery Motors போன்ற எரிபொருள் மாற்று வழிமுறைகளைப் பயன்படுத்தப்படுவதால் மீனவர்களின் உற்பத்திச் செலவு குறைவதோடு, அதன் மூலம் எரிபொருள் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

“பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த நாடாக இருந்த எமது நாட்டை, மீண்டும் மீட்டெடுக்கும் வகையில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கம் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு சிறப்பான வரவு செலவுத்திட்டத்தை முன்வைத்துள்ளது. யுத்தம் மற்றும் கோவிட் தொற்று போன்ற பல்வேறு காரணங்களால் எமது நாடு பின்னடைவை அடைந்திருந்தது. இலங்கை எப்படி நெருக்கடிகளில் இருந்து இவ்வாறு மிக வேகமாக மீண்டு வந்தது என்று எனது வெளிநாட்டு உத்தியோகபூர்வ விஜயங்களின் போது அந்நாட்டவர்கள் ஆச்சரியமாகக் கேட்கின்றார்கள். அதற்கு ஜனாதிபதியின் வழிகாட்டல், சிறப்பு ஆளுமை, அதற்கு பக்க பலமாக இருந்து இந்த அரசாங்கத்தை முன்னெடுப்பவர்கள் தான் காரணம் என்று நான் அவர்களுக்கு கூறி வருகின்றேன். அதேபோன்று இலங்கை மக்களும் இந்த நெருக்கடிகளை விளங்கிக்கொண்டு அரசாங்கத்திற்கு ஒத்துழைத்து வருகின்றார்கள் என்பதையும் நான் அங்கு குறிப்பிடுகின்றேன்.

2024 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தில் கடற்றொழில் அமைச்சுக்காக சுமார் 8400 மில்லியன்கள் ஒதுக்கப்ட்டுள்ளது. அதில் 6077 மில்லியன்கள் மூலதனச் செலவாகவும் 2323மில்லியன் ரூபா மீண்டுவரும் செலவாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் உட்பட அவர்களின் முன்னேற்றத்திற்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் எவ்வாறு நாங்கள் சிறப்பாக முன்னெடுக்கலாம் என்றும் எதிர்காலத்தில் அதனை ஒரு அடிப்படையாக வைத்து முன்னேறலாம் என்றும் வகுத்திருக்கின்றோம். அரசாங்கத்தின் இந்த நிதி ஒதுக்கீட்டுக்கு மேலதிகமாக எமது நாட்டின் கடற்றொழிலை வளப்படுத்தும் வகையில் மேலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனியார் முதலீடுகளையும் ஊக்குவித்து வருகின்றோம்.

மேலும், எரிபொருள் விலை உயர்வு எமது கடற்றொழிலாளர்களின் தொழிலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பிரதான விடயமாக உள்ளது. பல்வேறு காரணங்களால் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும்போது இலங்கையிலும் அதன் விலைகள் அதிகரிக்கின்றன. இதற்கு அரசாங்கத்தைக் குறை கூற முடியாது. கிடைக்கும் அனைத்து சந்தர்ப்பங்களையும் செயற்திறன் மிக்க வகையில் பயன்படுத்தி இந்நாட்டின் கடற்றொழில் துறையை முன்னேற்றும் வகையிலேயெ எமது திட்டங்களை வகுத்து செயற்படுகின்றோம். எரிபொருள் செலவு போன்ற உற்பத்திச் செலவுகளைக் குறைக்க பல்வேறு மாற்று வழிமுறைகளை பயன்படுத்தவும் திட்டமிட்டு வருகின்றோம்.

அந்த வகையில், படகுகளில் Battery Motors பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்தும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றோம். இது மீனவர்களின் உற்பத்திச் செலவைக் குறைப்பதுடன் எரிபொருள் பிரச்சினைக்கும் தீர்வாக அமையும். அது தொடர்பில் பரீட்சார்த்த நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளோம். அதேபோன்று கடற்றொழில் சட்டத்தைப் பொருத்தவரை எமது அமைச்சு திருத்தப்பட்ட புதிய கடற்றொழில் சட்டமொன்றை தயாரித்து வருகின்றது. அது தற்போது சட்ட வரைவு என்ற நிலையிலேயே உள்ளது. ஆனால் இதனைப் பற்றி சரியாக விளங்கிக்கொள்ளாமலும் உள்நோக்கத்திலும் பலர் தவறான கருத்துகளைக் கூற முற்படுகின்றார்கள். இது ஒரு வரைபே அன்றி முடிவல்ல. துறைசார் நிபுணர்களில் கருத்துகளையும் பெற்றே இதனை முன்னெடுக்கவுள்ளோம்.

இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடல் பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் பிரச்சினையைப் பொருத்தவரை, அது இரு நாடுகளுக்கும் இடையிலான விடயம் என்பதால் இராஜதந்திர ரீதியிலேயே அதனை அணுக வேண்டியுள்ளது. இந்திய அரசியலமைப்பின் பிரகாரம் மீன்படி விடயம் மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. எனவே அது தொடர்பில் வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து நேரடியாக இந்தியாவுக்கே சென்று பாண்டிச்சேரி மற்றும் தமிழ் நாட்டு அரசு உட்பட இந்திய ஊடகங்களுடன் கலந்தரையாடுவதே சிறந்த தீர்வாக அமையும் என்பதே எனது நிலைப்பாடாகும்.” என்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

‘தரம் 05 பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகளை வெளியிட வேண்டாம்’ என்ற கோரிக்கை நிராகரிப்பு

சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்களை இன்று ஜனாதிபதி சந்திக்கிறார்

செவிப்புலனற்ற முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வாவின் கன்னி உரை

editor