கச்சத்தீவு பிரச்சினையை வைத்து தமிழகத்தில் வாக்கு வேட்டை அரசியல் நடத்தப்பட்டு வருகின்றது. எது எப்படி இருந்தாலும் கச்சத்தீவென்பது இலங்கைக்குரியதாகும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் மற்றும் கச்சத்தீவு பிரச்சினை என்பன தொடர்பில் யாழில் இன்று (03) ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
‘தமிழகத்தில் தேர்தல் வருவதாக இருந்தால், அதனோடு சேர்ந்து கச்சத்தீவு பிரச்சினையும் வந்துவிடும். அதேபோல தேர்தல் பிரசாரத்திலும் அது பேசுபொருளாக மாறும்.
கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலங்களிலும் இது பற்றி பேசப்பட்டது. தற்போது முதல்வர் மு.கா. ஸ்டாலினும் அவ்வழியை கையாண்டுள்ளார்.
ஆனால் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதை சர்வதேசம் கூட அங்கீகரித்துள்ளது.
எனவே, தமிழகத்தில் தேர்தலுக்கு வேண்டுமானாலும் கச்சத்தீவு பிரச்சினையை வைத்து விளையாடலாம்.
அது இலங்கைக்குரியது என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.
அதேவேளை, தமிழக மீனவர்களிடமிருந்து பெறப்பட்டு அரசுடமையாக்கப்பட்டுள்ள கப்பல்களை ஆழ்கடலில் மூழ்கடிப்பது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
அதன் பயன்பாடு தொடர்பில் ஆராயப்பட்டுவருகின்றது.
அத்துடன், பாரத பிரதமர் மோடியின் வருகை என்பது மீனவர்களுக்கான வருகை அல்ல.
13 ஆவது திருத்தத்துக்கான வருகையும் அல்ல. அவ்வாறு கூறிக்கொண்டு வேண்டுமானால் இங்குள்ள தமிழ்க் கட்சிகள் சுய திருப்தி அடையக்கூடும் என தெரிவித்தார்.
-பிரதீபன்