அரசியல்உள்நாடு

ஒலுவில் துறைமுகத்தை விரைவாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுங்கள் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை

நாட்டில் அதிகமான மீன்பிடி தொழில் மேற்கொள்ளப்படும் கிழக்கு மாகாணத்தில் முறையான துறைமுகம் ஒன்றுகூட இல்லை.

அதனால் ஒலுவில் துறைமுகத்தை விரைவாக அபிவிருத்தி செய்து அந்த பகுதி மீனவர்களின் மீன்பிடி தொழிலை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (5) நடைபெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் கிராமிய அபிவிருத்தி, சமூகப்பாகாப்பு மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சு மற்றும் கடற்றொழில் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுகளின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்துவரும் கடற்றொழில் அமைச்சுக்கு கடந்த அரசாங்கமோ இந்த அரசாங்கமோ முக்கியத்துவம் வழங்கவில்லை.

வரவு செலவு திட்டத்தில் மிகவும் குறைவான தொகையையே இந்த அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஒலுவில் துறைமுகம் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அமைச்சராக இருந்து வர்த்தக துறைமுகமாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுத்திருந்தார்.

ஆனால் தற்போதுள்ள ஆட்சியாளர்கள் அதனை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் அது தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்தது.

என்றாலும் கடந்த ஆட்சியில் மீன்பிடி அமைச்சு அந்த துறைமுகத்தின் ஒருபகுதியை பொறுப்பெடுத்து செயற்பட்டதால், தற்போது அதனை மீன் பிடித்துறைமுகமாக வர்த்தமானி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

இருந்தாலும் அங்குள்ள மண்ணை அள்ளுவதற்காக அந்த பகுதி மீனவர்கள் பல இலட்சம் ரூபாக்களை செலழித்துள்ளனர்.

எனினும் அந்த துறைமுகம் இன்னும் அபிவிருத்தி செய்யப்படாமல் கைவிடப்பட்டிருக்கிறது.

அதனால் வர்த்தமானி செய்யப்பட்டிருக்கும் பகுதியை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்முனை பகுதியில் 250க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் இருக்கின்றன. அந்த மீனவர்கள் நூற்றுக்கும் மேறபட்ட கிலாேமிட்டர் பயணித்து வாழைச்சேனை துறைமுகத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.

தென்மாகாணத்தில் ஒவ்வொரு பிரதேசத்திலும் துறைமுகம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நாட்டில் அதிக மீன்பிடி தொழில் மேற்கொள்ளப்படும் கிழக்குமாகாணத்தில் ஒரு துறைமுகம்கூட முறையாக இல்லை.

அதனால் ஒலுவி்ல் துறைமுகத்தில் தேங்கி இருக்கின்ற மண்ணை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அந்த மண்ணை அகற்ற நடவடிக்கை எடுத்தால் 500க்கும் மேற்பட்ட படகுகளை அங்கு நிறுத்த முடியுமாக இருக்கும்.

அதேபோன்று வாழைச்சேனை துறைமுகமும் ஒரு மீன்பிடி துறைமுகத்துக்குரிய எந்தவித வசதியும் இல்லாமல் இயங்கிக்கொண்டிருக்கிறது.

அங்கு வசதிகள் இல்லாமையால் 300க்கும் மேற்பட்ட படகுகள் வெளியில் கட்டப்படுகின்றன.

அதனால் இந்த துறைமுகத்தையும் விரைவாக அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரம் மட்டக்களப்பு பூநொச்சிமுனை இறங்குதுறை பிரச்சினைக்கு தீர்வாக மிதக்கும் இறங்குதுறை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, அரசாங்கத்திற்கு தேவையான உதவிகளை வெளிநாடுகளிடம் இருந்து பெற்றுத்தர தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Related posts

டுபாயிலிருந்து 290 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனாவிலிருந்து மேலும் 11 பேர் குணமடைந்தனர்

சி.ஐ.டிக்கு செல்ல தயார் என மனுஷ நாணயக்கார நீதிமன்றுக்கு அறிவித்தார்

editor