அரசியல்உள்நாடுவீடியோ

ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் அம்பாறை மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் – ரிஷாட் எம்.பி | வீடியோ

ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் அம்பாறை மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (05) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு ஆகியவற்றின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“இன்றைய தினம் முக்கியமான இரண்டு அமைச்சுக்களுடைய விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அதில் குறிப்பாக. கிராமிய அபிவிருத்தி சம்பந்தமாக பல நல்ல கருத்துக்கள் இந்த சபையிலே முன்வைக்கப்பட்டிருக்கிறது.

அவற்றை விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றேன்.

கடந்த அரசாங்கங்கள் ஜனசக்தி, ஜனசவிய, சமுர்த்தி இப்பொழுது அஸ்வெசும போன்ற தலைப்பிலே, வறுமையை போக்குவதற்காக பல திட்டங்களை கொண்டுவந்தாலும் வறுமை கோட்டுக்குக் கீழே இருக்கின்றவர்கள் அப்படியேதான் இருக்கின்றார்கள்.

அதிகமான திட்டங்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டதாக இருந்ததும் இதனுடைய முன்னேற்றமின்மைக்கான காரணமாக நாங்கள் பார்க்கிறோம்.

அஸ்வெசும திட்டத்தை கடந்த அரசாங்கம் ஆரம்பித்தது. இப்பொழுது இந்த அரசாங்கமும் அதை முன்னெடுத்துச் செல்கின்றது. கடந்த அரசாங்கம் அதை ஆரம்பிக்கும்போது, தகுதியானவர்களை தெரிவுசெய்யும் விடயத்தில் தவறிழைத்திருக்கிறது.

பல்லாயிரக்கணக்கான சமுர்த்தி அதிகாரிகள் இருந்தபோதும், அஸ்வெசும திட்டத்தை வேறொரு திட்டம் போன்று கொண்டுவந்து, தகுதியான பலர் இருக்க, தகுதி இல்லாத பலர் அதனை பெறுகின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலையை எமது மாவட்டங்களில் காணக்கூடியதாக இருந்தது.

எனவே, எதிர்காலத்திலாவது அதில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்று நாங்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

கியூ. ஆர் (QR code) முறையிலேயே ஆட்களை தெரிவுசெய்கின்றபோது, அங்கு தவறுகள் இழைக்கப்படுகின்றதா? இல்லையா? என்பதை பார்வையிடுவதற்கான மேலதிகாரிகள் இல்லை.

அதை அந்தந்த பிரதேச செயலாளர்களிடம் பொறுப்புக்கொடுத்து, இறுதியாக அவர்களின் முடிவுக்கு விடும் பட்சத்தில், பாதிக்கப்படுகின்ற மக்கள் சென்று முறையிடுவதற்கும் நியாயம் கேட்பதற்கும் ஒரு பிரதேச செயலாளர் இருப்பார். எனவே, அரசாங்கம் தயவு செய்து இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

அதேபோன்று, இந்த அஸ்வெசும திட்டத்தை சமுர்த்தி வங்கிகளில் நீங்கள் பயன்படுத்த முடியும். 1083 சமுர்த்தி வங்கிகள் இருக்கின்றன. அந்த வங்கிகளின் ஊடாக இந்தத் திட்டத்தை வழங்கலாம். அந்த வங்கிகளை பயன்படுத்துகின்றபோது, மக்களுக்கும் இலகுவாக இருக்கும். அதனால் அந்த சமுர்த்தி வங்கிகளும் பிரயோசனமடையும்.

புதிய புதிய வங்கிகளெல்லாம் நவீன மயப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்தாலும், சமுர்த்தி வங்கிகள் நவீன மயப்படுத்தப்படவில்லை. எனவே, அந்த விடயத்திலும் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

அதேபோன்று, 1994ஆம் ஆண்டு சேவைக்கு வந்த சமுர்த்தி அதிகாரிகளுக்கு, 30 வருடங்களாக இதுவரையில் பதவி உயர்வுகள் கிடையாது. அவர்களுக்குப் பிறகு நியமனம் பெற்ற பல திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்களுக்கு காலத்துக்கு காலம் பதவி உயர்வுகள் கிடைக்கின்ற போதும், இந்த அதிகாரிகளுக்கு எந்தவொரு பதவி உயர்வுகளும் இதுவரையில் இல்லை.

அவர்கள் ஓய்வுபெற்று செல்கின்ற வேளையிலும் அதே நிலையிலிருந்துதான் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது. இது தொடர்பிலும் கவனத்திற்கொள்ள வேண்டும்.

மேலும், நடைமுறைப்படுத்தப்படுகின்ற அஸ்வெசும திட்டத்தில், இன்னும் அதிகமானவர்களை உள்வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

வன்னி மாவட்டத்தில் கடந்த காலங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், ஊனமுற்றவர்கள், பெண் தலைமைத்துவத்தை கொண்டவர்கள் என பலர் இருக்கின்றார்கள். அவ்வாறான பாதிக்கப்பட்ட மக்களினால் தொழில் செய்ய முடியாத நிலை மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி கற்க முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது.

எனவே, இந்த அஸ்வெசும போன்ற திட்டங்கள் வழங்கப்படுகின்ற போது, அவர்கள் முன்னுரிமை அடிப்படையில் உள்வாங்கப்பட வேண்டும். அவர்களும் பயனடையக்கூடிய விசேட திட்டங்களும் முன்வைக்கப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

அதேபோன்று, மீனவ அமைச்சர் யாழ்ப்பாணத்தில்தான் வாழ்ந்து வருகிறார். மீனவச் சமூகம் எவ்வாறான கஷ்டங்களை எதிர்நோக்குகிறார்கள் என்று அவருக்கு தெரியும். குறிப்பாக, இந்திய ரோலர் படகுகளினால் எமது மீனவர்கள் சொல்லொனா துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

எமது நாட்டில் மீனவர்களுக்கு அத்தனை சட்டங்களும் போடப்பட்டிருக்கின்றன. ஆனால். இந்தியாவிலிருந்து வருகின்றவர்கள் அனைத்துச் சட்டங்களையும் மீறி, எமது கரை வரை வந்து அத்தனை மீன்களையும் பிடித்துக்கொண்டு செல்லும் துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.

அனைத்து அரசாங்கங்களும் அமைச்சர்களும் இந்த விடயத்தில் நடவடிக்கை எடுப்போம் என்று கூறி வருகின்றனரே தவிர, எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொண்டதாக நாங்கள் காணவில்லை.

எனவே, கடற்படையினருடன் இணைந்து இதனை தடுப்பதற்கான இறுக்கமான திட்டத்தை வகுக்கின்றபோது மட்டுமே, இதனை தடுத்து நிறுத்த முடியும்.

இல்லையெனில், எமது மீனவர்கள் தொடர்ந்தும் வறுமைக்கோட்டுக்கு கீழே செல்கின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலையைதான் எதிர்கொள்ள நேரிடும்.

அத்துடன், நன்னீர் மீன்பிடியை வலுப்படுத்துவதற்கு விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நன்னீர் மீன்பிடித் துறைக்காக பல நல்ல திட்டங்களை வகுத்துச் செயற்பட முடியும்.

இந்திய அரசு, இலங்கையில் எக்குவா கல்சர் எக்ஸலண்ட் சென்டர் ஒன்றை மன்னாரில் அமைப்பதற்கு 10 மில்லியன் டொலர்களை தருவதாக வாக்குறுதியளித்துள்ளது.. அமைச்சர் அவர்கள் அவசரமாக அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற போது, மன்னார் மட்டுமல்ல குறிப்பாக, வடக்கு, கிழக்கு மக்கள் அதனால் பயனடைய முடியும்.

இந்தத் திட்டத்தின் ஊடாக எத்தனையோ நாடுகள் இன்று பொருளாதார ரீதியாக வளம் பெற்றிருக்கின்றது. வியட்நாம் போன்ற நாடுகளில் பெரியளவில் பொருளாதாரத்தை பெற்றுக்கொடுக்கின்ற ஒரு துறையாக இந்தத் துறை காணப்படுகின்றது.

இவ்வாறான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில், அது முறையான திட்டமிடலுடன் முன்னெடுக்கப்பட வேண்டும். அரசியல்வாதிகள் மற்றும் ஒருசில அதிகாரிகளின் செல்வாக்கினால், முறையான திட்டமிடல் இல்லாமல் இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதனால், சாதாரண மீனவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள்.

வெள்ளப் பாதிப்பு ஏற்படுகின்றது. பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ஒரு நல்ல திட்டமிடலுடன் அவ்வாறான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இந்திய அரசாங்கம் இலங்கைக்கு நன்கொடையாக இந்தத் திட்டத்தை வழங்கியுள்ளது. அதற்காக நாங்கள் இந்தியாவுக்கு நன்றி செலுத்துகின்றோம்.

ஆனால், அதை நடைமுறைப்படுத்துவதில் இழுபறிநிலை காணப்படுகிறது. எனவே, அவசரமாக அதை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகின்றேன்..

அதேபோன்று, “வங்காலை கிராமம்” மன்னாரில் இருக்கக்கூடிய ஒரு பெரிய மீன்பிடி கிராமம் ஆகும். இந்த கிராம மக்கள் கடலரிப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதைத் தடுப்பதற்கு சுவர் அமைப்பதற்கான நிதியை நாங்கள் கடந்த காலங்களில் ஒதுக்கி கொடுத்த போதும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அரசாங்க அதிபர்கள், கல்வி அதிகாரிகள் இருக்கக்கூடிய ஒரு கத்தோலிக்க கிராமமான வங்காலை, அழிந்து போகின்ற ஒரு ஆபத்தான நிலையை நாங்கள் காணக்கூடியதாக உள்ளது. எனவே, அதனை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மீனவ அமைச்சுக்கு உள்ளது.

மேலும், எமது பெருந்தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் அன்று அமைச்சராக இருந்தபோது கட்டிய ஒலுவில் துறைமுகம், இன்று மக்களுக்கு பயனற்றதாகியிருக்கின்றது.

அந்தத் துறைமுகத்தின் தாக்கம் நிந்தவூர், கல்முனை, திருக்கோயில் போன்ற இன்னோரன்ன பல பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கும் மீனவர்களுக்கும் பாதிப்பாக இருக்கின்றது.

ஒலுவில் துறைமுகத்தை கடந்த அரசாங்கத்தில் இருந்த மீன்பிடி அமைச்சு பொறுப்பேற்றது. இருப்பினும், எவ்வித வேலைத்திட்டத்தையும் செய்ததாக நாங்கள் காணவில்லை.

எனவே, ஒலுவில் துறைமுகம் புனரமைக்கப்பட்டால் IMUL மீன்பிடி படகுகளை செலுத்துகின்றவர்கள் பெரிதும் பயனடைவார்கள். கல்முனை, சாய்ந்தமருது, காத்தான்குடி, வாழைச்சேனை, கோறளைப்பற்று போன்ற பகுதிகளில் IMUL மீன்பிடி படகுகளை செலுத்துகின்றவர்கள், தற்பொழுது வாழைச்சேனையில்தான் தங்களுடைய படகுகளை கட்ட வேண்டிய நிலை, மீன்களை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த மீன்களுக்கான நல்ல பெறுமதி கிடைக்கப் பெறுவதில்லை.

எனவே, ஒலுவில் துறைமுகத்தை மீனவர்களுக்கு பயனுள்ளதாக ஆக்கி, அவர்களுடைய படகுகளை கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்கின்றபோது, வாழைச்சேனை மற்றும் கல்முனைப் பகுதியை சேர்ந்த இருதரப்பினரும் பயனடைய முடியும். எனவே, அதற்கான நடவடிக்கையை அரசு முன்னெடுக்க வேண்டும்.

அதேபோன்று IMUL மீன்பிடி படகினால் நாட்டுக்கு பெரிய வருவாயை மீனவர்கள் பெற்றுக்கொடுக்கின்றார்கள். ஆயிரக்கணக்கான படகுகள் இருக்கின்றது.

ஆனால், அவர்களது நலனுக்கான எந்தவொரு கொடுப்பனவுகளையும், திட்டங்களையும் இந்த அரசாங்கத்திலோ அல்லது இதற்கு முன்னரான அரசாங்கத்திலோ, இந்த வரவு செலவுத் திட்டத்திலோ நாங்கள் காணவில்லை.

அந்தப் பகுதிகளில் இருக்கின்ற முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள்தான் இந்தத் துறையில் அதிகமாக ஈடுபடுகின்றார்கள். எனவே, தயவுசெய்து நீங்கள் அவர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன்” என்றார்.

-ஊடகப்பிரிவு

வீடியோ

Related posts

நாட்டை வந்தடைந்துள்ள விளையாட்டு வீரர்களின் வாகன பேரணி கொழும்புக்கு

தனக்கு ஓய்வூதியம் சரியாக வழங்கப்படவில்லை – நான் அதை கேட்கவுமில்லை – பஸ்ஸில் செல்வதற்கு எனக்கு வெட்கமில்லை – சந்திரிகா குமாரதுங்க

editor

அசுத்தமான குளியலறை, சிறிய சிறைக்கூண்டு பூச்சிச் தொல்லை சிறையில் அவஸ்தைப்படும் இம்ரான்கான்!