அரசியல்உள்நாடு

ஒருபோதும் இனவாதத்தை கையில் எடுக்கமாட்டோம் – பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா

கடந்த ஆட்சியாளர்கள் தங்களின் தோல்வியின் விளிம்பில் எடுக்கும் ஆயுதம் இனவாதம் ஆகும். ஆனால் எமது அரசாங்கத்தில் ஒரு காலமும் இனவாதத்தை கையில் எடுக்கப் போவதில்லை என பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.

மகுடம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் பிரபல எழுத்தாளர் வி.மைக்கல் கொலினின் எழுதிய ‘அன்பின் முத்தங்கள்” கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று மட்டக்களப்பு தமிழ் சங்கத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தில் அதன் தலைவர் வி.ரஞ்சித மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கலந்துகொண்டார்.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதியமைச்சர்,

“கடந்த ஆட்சியாளர்கள் தங்களின் தோல்வியின் விளிம்பில் எடுக்கும் ஆயுதம் இனவாதம் ஆனால் எமது அரசாங்கத்தில் எந்த ஒரு கட்டத்திலும் நாம் அதனை முன்னெடுக்க போவதில்லை.

எமக்கு எந்தவித பாதிப்புகள் வந்தாலும் நாம் ஒரு காலமும் இனவாதத்தை கையில் எடுக்கப் போவதில்லை என்ற உத்தர வாதத்தை நான் உங்களுக்கு தருகின்றேன்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தில் அரசியல் நெருக்கடி மாற்றப்பட்டுள்ளது.

இருப்பினும் பொருளாதார நெருக்கடி சமூக நெருக்கடிகள் காணப்படுகின்றன. இவற்றை நாம் வேகமாக மாற்றியமைக்க வேண்டிய தேவை உள்ளது.

நாம் நாட்டை மீள கட்டியெழுப்ப வேண்டிய தேவை உள்ளது. சமூக மாற்றத்தின் பிரதான பங்கினை இலக்கியவாதிகள் வகிக்கின்றனர்.

எமக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் பலமானது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அரசியல் முரண்பாடுகளானது தேர்தல் நிறைவடைந்த பின் அவை கைவிடப்படவேண்டும். மக்களுக்காக நாம் இன மத மொழி வேறுபாடு இன்றி ஒன்றிணைய வேண்டும்.

இதனை மாற்றி அமைத்து நாம் சரியான திசைக்கு மக்களை வழிநடத்த வேண்டிய இடத்தில் இருக்கின்றோம்” என்றார்.

-கிருஷ்ணகுமார்

Related posts

அரச கணக்காய்வு குழுவின் தலைவராக மீண்டும் லசந்த அழகியவன்ன

‘கெசல்வத்த ஃபவாஸ்’ கொலை

தபால் அலுவலகங்களை திறப்பது குறித்து விசேட கலந்துரையாடல்