அரசியல்உள்நாடு

ஐ.தே.க. – ஐ.ம.ச. இணைவது குறித்து மகிழ்ச்சியான செய்தியை கூறிய இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரளவின் திறந்த அழைப்பு தொடர்பில் கலந்துரையாட ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளது.

அது தொடர்பில் கலந்துரையாட கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச, செயலாளர் சஞ்சித் மத்தும பண்டாரவை நியமித்துள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் எங்களுடன் இணைந்துகொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் புதிய செயலாளர் தலதா அத்துகோரள விடுத்திருக்கும் பகிரங்க அழைப்பு தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரளவின் அழைப்பை நாங்கள் மிகவும் உயர்வாக கருதுகிறோம். ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சென்றே ஐக்கிய மக்கள் சக்தி அமைக்கப்பட்டது. ஒரு காலத்தில் நாங்கள் ஒரு கட்சியாகவே இருந்தோம்.

ஆனால் கட்சி அதன் அடிப்படைக் கொள்கைகளிலிருந்து விலகியதால் பிளவு ஏற்பட்டது. இரு பிரிவினரும் ஒரு கொள்கை உடன்பாட்டை எட்டுவது நன்மை பயக்கும் என்று நான் நம்புகிறேன்.

அதனால் ஐக்கிய தேசிய கட்சியின் அழைப்பு தொடர்பில் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமித்திருக்கிறார். இது தொடர்பாக வெகுவிரைவாக கலந்துரையாடல்கள் இடம்பெறும் என நம்புகிறோம்.

அத்துடன் ஜனநாயகத்தின் பொருட்டு வலுவான எதிர்க்கட்சி அவசியமானது, அது இல்லாவிட்டால் அரசாங்கம் சர்வாதிகாரப் பாதையை நோக்கிச் செல்லக்கூடும். அதனால் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரு புரிந்துணர்வுக்கு வர வேண்டும் .

அது பதவிகள் அல்லது தேர்தல் வெற்றிகளுக்காக அன்றி, ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கு அடித்தளமாக செயல்படும் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்காக எதிர்க்கட்சிகள் பொறுப்புடன் செயல்படுவதை உறுதிசெய்யும் கொள்கை ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும்.

இதுதொடர்பான கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவும் கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற கட்சியின் நிர்வாக்கூட்டத்தில், கட்சியின் தலைமை பொதுச் செயலாளரை மேற்பார்வையிடும் வகையில், கலந்துரையாடல்களை தொடங்க ஒப்புதல் அளித்தது.

மேலும் அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்து சில மாதங்களே ஆகின்றன அதனால் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் தீர்ப்பு வழங்க இது சரியான நேரம் அல்ல. எவ்வாறாயினும், அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது, மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க நம்பிக்கையை ஏற்படுத்தியது.

இருப்பினும், தேர்தலின் போது வாக்குறுதியளிக்கப்பட்டதற்கும் தற்போது நடைமுறைப்படுத்தப்படுவதற்கும் இடையில் முரண்பாடுகள் இருப்பதாகத் தோன்றுகிறது.

மக்கள் விடுதலை முன்னணி ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் கடந்த கால ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தியது மற்றும் உலகெங்கிலும் மனித உரிமைகள் பற்றி உணர்ச்சிவசப்பட்டு பேசியது, ஆனால் அத்தகைய உறுதிப்பாடுகள் இப்போது மங்கிவிட்டதாகத் தெரிகிறது.

அரசாங்கம் தொடர்பில் எமது இந்த அவதானிப்பு பொறாமையுடன் தெரிவிக்கப்படுதில்லை. எதிர்க்கட்சிகள் வலுவாக இருப்பது மட்டுமல்லாமல், ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் வழங்க வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கைகள் உறுதியானவை.

மக்களை அவர்களின் துன்பங்களிலிருந்து விடுவித்து, நாட்டை மீட்டெடுக்கவும், சரியான பாதையில் செல்வதற்கும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

எனினும், அரசாங்கம் செய்யும் அனைத்தும் தவறு என்ற நிலைப்பாட்டை நாங்கள் எடுக்கவில்லை.

மக்களின் கஷ்டங்களைப் போக்கவும், தேசத்தைப் புதுப்பிக்கவும் நாங்கள் எப்போதும் எங்கள் ஆதரவை வழங்குவோம் என்றார்.

-எம்.ஆர்.எம்.வசீம்

Related posts

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை பெப்ரவரி 17 ஆம் திகதி

editor

இரு முஸ்லிம் மாணவர்களின் மரணம் : அறிக்கை கோருகிறார் வடக்கு ஆளுநர் திருமதி சார்ள்ஸ்.

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் – யாரும் கட்டுப்பணம் செலுத்தவில்லை.

editor