உலகம்

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வேகம் வலுக்கிறது

(UTV | இலண்டன்) – சீனாவில் உகான் நகரில் தோன்றி 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவி உள்ளது. தற்போது இந்த தொற்று நோய், ஐரோப்பிய நாடுகளில் மையம் கொண்டுள்ளது. இங்கு 55 சதவீதத்துக்கும் கூடுதலாக தொற்று பரவல் அதிகரித்துள்ளது.

கடந்த 20 நாட்களாகவே ரஷியா, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உருமாறிய டெல்டா வைரஸ்தான் இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. உக்ரைன், ஆஸ்திரியா, ரஷியா ஆகிய நாடுகளில் மாதிரிகளை சோதனைக்கு உட்படுத்தியதில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட பாதிப்பு, டெல்டா வைரஸ் என தெரிய வந்துள்ளது.

போலந்து, பெல்ஜியம், ஆஸ்திரியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் தொற்று பரவல் கணிசமாக கூடி உள்ளது. இதிலும் டெல்டா வைரஸ்தான் முக்கிய பங்களிப்பு செய்து இருக்கிறது. மாதிரிகளை சோதித்ததில் உக்ரைனில் 85 சதவீதமும், ஆஸ்திரியாவில் 75 சதவீதமும், ரஷியாவில் 70 சதவீதமும், பெல்ஜியத்தில் 65 சதவீதமும், உக்ரைனில் 64 சதவீதமும், பிரான்சில் 51 சதவீதமும் உருமாறிய டெல்டா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் நேற்று ஒரே நாளில் 50 ஆயிரத்து 196 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இத்துடன் சேர்த்து அந்த நாட்டில் இந்த தொற்றுக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 48 லட்சத்து 94 ஆயிரத்து 250 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 235 பேர் பலியாகி இருக்கிறார்கள். இதுவரை அங்கு 97 ஆயிரத்து 198 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ரஷியாவில் நேற்று ஒரே நாளில் 40 ஆயிரத்து 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது.

மாஸ்கோவில் அதிகபட்சமாக 6,240 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் 3,230 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில் ரஷியாவில் 1,237 பேர் இறந்துள்ளனர். இதுவரை அங்கு 2 லட்சத்து 51 ஆயிரத்து 691 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார்கள்.

பிரான்ஸ் நாடு கொரோனாவின் 5-வது அலையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அந்த நாட்டின் சுகாதார மந்திரி ஆலிவர் வேரன் தெரிவித்தார்.

அங்கு இதுவரை இந்த தொற்றுக்கு 73 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதித்துள்ளனர். 1 லட்சத்து 19 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தொற்றால் இறந்தும் உள்ளனர்.

Related posts

ட்ரம்பின் பிரியாவிடை கோரிக்கையை பென்டகன் நிராகரிப்பு

டெல்லி வன்முறைகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

அல்-ஷிபா மருத்துவமனையில் சுரங்கம்- இஸ்ரேல் வெளியிட்ட காணொளி.