ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு வியாழக்கிழமை (03) கொழும்பிலுள்ள ஹைட் பார்க் மைதானத்தில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
மத வழிபாடுகளுடன் 2 மணியளவில் மாநாடு ஆரம்பமானது. கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் மாநாட்டு மற்றும் தேசிய நிறைவேற்றுக்குழுவை கூட்டுவதற்கான ஆவணம் முன்வைக்கப்பட்டது.
தொடர்ந்து அவரால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டு, மாநாட்டின் அறிக்கை முன்வைக்கப்பட்டது.
அதற்கமைய இவ்வாண்டுக்கான கட்சியின் தலைவராக இம்முறையும் சஜித் பிரேமதாசவின் பெயர் முன்மொழியப்பட்டு, சகலரது ஆதரவுடனும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அதன் பின்னர் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களால் உரைகள் நிகழ்த்தப்பட்டன.
இறுதியாக கட்சியின் தவிசாளராக இம்தியாஸ் பாகீர் மாக்கார், பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய அமைப்பாளராக திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் பொருளாளராக கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோரது பெயர்கள் கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவால் முன்மொழியப்பட்டன. இந்த முன்மொழிவும் சகலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர்களின் பெயர்களும் இதன் போது அறிவிக்கப்பட்டன.
அதற்கமைய உப தவிசாளர்களாக ஏ.எச்.எம்.ஹலீம், சந்திரானி பண்டார, பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிரேஷ்ட உப தவிசாளர்களாக லக்ஷ்மன் கிரியெல்ல, கபீர் ஹசீம், ரவீந்திர சமரவீர, ஜே.சி.அலவத்துவல ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உப தவிசாளர்களாக கயந்த கருணாதிலக, திலிப் வெதஆராச்சி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார நிர்வாகப் பிரதானியாகவும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன அபிவிருத்தி செயலாளராகவும், நிரோஷன் பெரேரா சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளராகவும், ஜனாதிபதி சட்டத்தரணி பர்மான் காசிம் சட்ட செயலாளராகவும், அசோக அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், உமா சந்திரா பிரகாஷ், துஷார இந்துநில் அமரசேன ஆகியோர் பிரதி செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.