அரசியல்உள்நாடு

ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பை ஆரம்பித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் – நாடு திரும்பியதும் அதிரடி நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா மற்றும் நேபாளத்துக்கான தனிப்பட்ட விஜயங்களை நிறைவு செய்து கொண்டு வியாழக்கிழமை (02) நாடு திரும்பினார்.

நாடு திரும்பியவுடனேயே ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று அவர் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் சிறு கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த டிசம்பர் 21ஆம் திகதி டில்லிக்கு விஜயம் செய்திருந்தார்.

கடந்த 27ஆம் திகதி டில்லியிலுள்ள இந்திய ஹாபிடேட் சென்டர் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவேந்தல் உரையை ஆற்றுவதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

இவ்விஜயத்துக்கு மத்தியில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் அவர் இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தார்.

அது மாத்திரமின்றி பல முக்கிய சந்திப்புக்களிலும் ஈடுபட்ட அவர், கென்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் கனா கணநாதன் உள்ளிட்டோருடனும் கலந்துரையாடல்களிலும் பங்கேற்றிருந்தார்.

இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு விஜயம் செய்திருந்த அவர் புதன்கிழமை (01) அந்நாட்டு பிரதமர் கே.பி.ஷர்மா ஒலியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தார்.

இந்நிலையில் இந்த முக்கிய விஜயங்களின் பின்னர் நேற்று மாலை அவர் நாடு திரும்பினார்.

உத்தேச உள்ளுராட்சிமன்றத் தேர்தல் மற்றும் மாகாணசபைத் தேர்தலில் களமிறங்குவதற்கு ஐ.தே.க.வை பலப்படுத்துவதற்கான மறுசீரமைப்புக்கள் குறித்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியிருக்கின்றார்.

குறிப்பாக ரவி கருணாநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாரத்தில் அந்த குழுவின் அறிக்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது.

அறிக்கை கையளிக்கப்பட்டதன் பின்னர் அதன் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

அவற்றைத் தொடர்ந்து ஐக்கிய மக்கள் சக்தியுடனான இணைவு குறித்து முன்வைக்கப்படும் நிலைப்பாடுகள் குறித்தும் ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-எம்.மனோசித்ரா

Related posts

தேநீர் மற்றும் பால் தேநீர் விலைகள் குறைவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையோருக்கு விளக்கமறியல்

77% வாக்காளர் அட்டைகள் விநியோகம்

editor