பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்த கருத்துக்களின் ஒரு பகுதி.
முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் எரிபொருள் விலை சூத்திரத்திலேயே தற்போதைய அரசாங்கம் இன்னும் தொங்கிக்கொண்டிருக்கிறது. எரிபொருள் விலை சூத்திரத்தை மாற்றியமைப்பதற்கு ஏற்ற அறிவு அரசாங்கத்திற்கு இல்லை.
தேசிய மக்கள் சக்தி அமைச்சர்கள் அனுபவமின்மையால் தற்போதைய அரசாங்கம் கோட்டாபயவின் அரசாங்கத்தை விட விரைவில் கவிழும் நிலை ஏற்படலாம் என பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நாட்டின் கிட்டத்தட்ட முந்நூற்று எண்பதாயிரம் ஏக்கர் நிலம் நீரில் மூழ்கியுள்ளது. வெள்ளத்தால் சேதமடைந்த பயிரிடங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் ஒரு பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.
இதன் பிரகாரம் ஒரு ஏக்கருக்கு 2600 ரூபா போன்ற சிறிய தொகையே கிடைக்கும். இதன்படி சேதமடைந்த காணிக்கு ஒரு பில்லியன் ரூபா போதுமானதாக அமையாது. அரசாங்கம் குறைந்தபட்சம் 20 பில்லியன் ரூபாவை ஒதுக்க வேண்டும். விவசாயிகள் தங்கள் வயல்களை மீட்டெடுக்க நிறைய பணம் செலவாகும்.
ஆறுகள், குளங்கள், மதகுகள் சேதமடைந்துள்ளன. அவற்றை சரி செய்ய வேண்டும். எனவே, இந்தத் தொகை போதுமானதாக இல்லை. அரசாங்கம் இந்த ஒரு பில்லியன் ரூபாவை எவ்வித மதிப்பீடும் இன்றியே ஒதுக்கியுள்ளது.
சேதமடைந்த வயல்களுக்கு 40,000 ரூபா இழப்பீடு வழங்குவதாக அரசாங்கம் அறிவித்தது. 40,000 ரூபா போதுமானதாக அமையாது என ஆதிவாசி தலைவர் ஊருவரிகே வன்னிலா எத்தோ தெரிவித்துள்ளார்.
களத்தில் இறங்கி அந்த 40,000 ரூபாவை வைத்து என்ன செய்ய முடியும் என்பதை கண்டறியுமாறு பிரதியமைச்சர் நாமல் கருணாரத்னவிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
முன்னர் விவசாய பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன விவசாயிகளுடன் இணைந்து போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொண்டார்.
ஆனால் இன்று பிரதியமைச்சராக நாமல் கருணாரத்ன விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக முன்நிற்காது அதனை மறந்து செயல்பட்டு வருகிறார். அரசாங்கம் உரிய மதிப்பீடுகளைச் செய்து விவசாயிகளுக்கு தேவையான இழப்பீடு வழங்களை வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் விடயத்தில் அரசின் பங்களிப்பு போதுமானதாக இல்லை. நாட்டில் ஏற்பட்ட பேரிடர்களை நிர்வகிப்பதில் அரச அதிகாரிகள் மட்டுமே பங்களித்தனர். அனர்த்த நிவாரணத்தில் நாட்டின் அரசியல் தலையீடு மிகக்குறைந்த மட்டத்தில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் பேரிடர் ஏற்பட்டபோது, முந்தைய அரசுகளின் பங்களிப்பு அதிகமாக காணப்பட்டது. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களின் பங்களிப்பும் காணப்பட்டது. ஆனால், இம்முறை அரசியல்வாதிகளின் பங்களிப்பு இல்லாமல், அரச அதிகாரிகளின் பங்களிப்புடன்தான் இந்த இக்கட்டான சூழலை கையாளப்பட்டது.
நாட்டை வீழ்ச்சியடைந்த நிலையில் இருந்து மீட்பதற்கு அரசியல் அதிகாரத்திற்கு மிகக் குறைந்த காலமே உள்ளது. எனவே ஜனாதிபதியும் பிரதமரும் தமது நேரத்தை நிர்வகித்து நாட்டுக்காக உழைக்க வேண்டும்.
மேலும் பெட்ரோல் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. நாட்டில் நாளொன்றுக்கு சுமார் 3500 மெட்ரிக் டொன் பெற்றோல் பயன்படுத்தப்படுகிறது. சுமார் 300 மெட்ரிக் டொன் மண்ணெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.
எனினும் பெற்றோலின் விலையை 2 ரூபாவால் குறைப்பதற்கு பதிலாக மண்ணெண்ணெய் விலையை 20 ரூபாவால் அரசாங்கத்தால் குறைத்திருக்க முடியும். அதன் மூலம் விவசாயிகள், மீனவர்கள், மலையகத் தொழிலாளர்களுக்கு மிகுந்த நிவாரணம் கிடைத்திருக்கும். பெட்ரோல் விலையை 2 ரூபாவால் குறைப்பதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை.
அந்த விலை குறைப்பை மக்கள் உணரவில்லை. 72 ஆண்டு கால சாபத்தால் உருவாக்கப்பட்ட சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் தான் மண்ணெண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது.
தற்போதைய அரசாங்கம் முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் வழங்கப்பட்ட விலைசூத்தி்த்தின் பிரகாரமே இந்த 2 ரூபாவையை குறைத்துள்ளது. ரணிலின் தொங்கு பாலத்தில் தான் இந்த அரசும் நடைபோடுகிறது.
எரிபொருளில் இருந்து பெரும் தொகை பணம் முன்னாள் அமைச்சர்களின் பாக்கெட்டுகளுக்கு சென்றதாக தேசிய மக்கள் சக்தி ஆட்சி வருவதற்கு முன்னர் தெரிவித்தது. ஆனால் இப்போது அந்த கமிஷன் தொகையை கூட தேசிய மக்கள் சக்தி அரசால் குறைக்க முடியவில்லை.
தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு அளித்த பொய்யான வாக்குறுதிகள் தற்போது ஒவ்வொன்றாக வெளிப்பட்டு வருகின்றன.
தேசிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் அனுபவமின்மையால், கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தை விட விரைவில் அவர்கள் நாட்டை வீழ்ச்சியடையச் செய்யும் நிலைக்கு இட்டுச் செல்வதாகத் தெரிகிறது.