தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி இவ்வாறு தான் தொடரும் எனில் எமது நாட்டை கடவுளின் பொறுப்பிலேயே விட வேண்டும்.
வரவு – செலவு திட்ட விவாதம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும் தேசிய பாதுகாப்பு சமூகத்தில் பேசு பொருளாகியிருக்கின்றமை நாட்டின் பாரதூரமான நிலைமையையே காண்பிப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வரவு – செலவு திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அது குறித்த விவாதம் இடம்பெற்று வருகின்ற போதிலும், தேசிய பாதுகாப்பு தொடர்பிலேயே பரவலாகப் பேசப்படுகிறது.
ஒருபுறம் பாதாள உலகக் குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெறும் அதேவேளை மறுபுறம் பொலிஸாரின் காவலில் உள்ள சந்தேகநபர்களும் உயிரிழக்கின்றனர்.
எமது ஆட்சியில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்ற போது நாம் அவற்றுக்கெதிராக குரல் கொடுத்திருக்கின்றோம்.
கைது செய்யப்படும் சந்தேகநபர்கள் குற்றவாளிகள் என உறுதிப்படுத்தப்படும் வரை அவர்களுக்கு தண்டனை வழங்க முடியாது. அரசாங்கத்திலிருந்தாலும் எதிர்க்கட்சியிலிருந்தாலும் நாம் எமது நிலைப்பாட்டில் ஸ்திரமாகவுள்ளோம்.
இவர்களது ஆட்சி இவ்வாறு தான் தொடரும் எனில் எமது நாட்டை கடவுளின் பொறுப்பிலேயே விட வேண்டும்.
செலவுகள் ஏற்படும் என்பதால் முக்கியமான விடயங்கள் கூட இந்த அரசாங்கத்தால் தவிர்க்கப்படுகின்றன.
செலவுகளைப் பார்த்து பயந்து கொண்டிருக்காமல் வருமானத்தையும் அதிகரிப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்று நாட்டில் துப்பாக்கிகள் மிகவும் சரளமாக சமூகத்தில் புலக்கத்தில் உள்ளன. ஆனால் இந்த அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினர்களின் துப்பாக்கிகளைக் கூட மீளப் பெற்றுக் கொண்டது.
மறுபுறம் டீ – 56 ரக துப்பாக்கிகள் குறித்து தகவல்களை வழங்கினால் 10 இலட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று பதில் பொலிஸ்மா அதிபர் குறிப்பிடுகின்றார் என்றார்.
-எம்.மனோசித்ரா