உள்நாடு

ஊடகங்களை ஒடுக்க முற்படும் அரசின் முயற்சியை தோற்கடிப்போம் – சஜித் பிரேமதாச.

(UTV | கொழும்பு) –

சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒடுக்குமுறை சட்டத்தை அரசாங்கம் சமர்ப்பிக்க தயாராகி வருவதாகவும், இந்த சட்டங்கள் நிறைவேறினால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளாக செயற்பட்டவர்களைக் கூட விசாரிக்க முடியாது போகும் என்றும், அரசியல் சதிகளை கண்டு பிடிக்க முடியாது போகும் என்றும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நிகழ் நிலைக் காப்பு என்ற பெயரை முன்னிலைபடுத்திக் கொண்டாலும் அதில் எந்தப் பாதுகாப்பும் இல்லை என்றும், அதில் அடக்குமுறைகளே இருப்பதாகவும், பொதுமக்களின் குரல்களையும், எதிர்க்கட்சியை அடக்குவதுமே இதன் நோக்கம் எனவும் சுட்டிக்காட்டினார்.

மாத்தறை மாவட்ட உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள்,மகளிர் பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்களுடன் நேற்று நடந்த சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இதற்கென ஒரு ஆணைக்குழு நியமிக்கப்படவுள்ளதாகவும், அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதும் நீக்கப்படுவதும் ஜனாதிபதியாலே என்றும், தாம் கூறும்படி செயல்படாவிட்டால், அந்த உறுப்பினர்கள் நீக்கப்படலாம் என்றும் தெரிவித்தார்.
தமக்கு நட்பாக செயற்படும் அடியாட்களை நியமித்து தனது பதவிக்கும், தனக்கும், தனக்கு நெருக்கமானவர்களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

இந்த சட்ட மூலத்துக்கு ஏமாந்து விடக்கூடாது என்றும், ஒளிபரப்பு அதிகார சபை சட்டம் குறித்து கனம் நீதிமன்றம் கூட கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை தேவை என்றாலும், அதைச் செய்வதற்கான அதிகாரம் நிறைவேற்று அதிகாரத்திற்கு இல்லை என்றே கூறியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். உயர் நீதிமன்றத்தின் கனம் நீதியரசர்கள் வழங்கிய முந்தைய தீர்ப்புகளுக்கு முரணாக தற்போதைய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள ஊடக அடக்குமுறை சட்டத்திற்கு எந்த செல்லுபடி தன்மையும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியால் நியமிக்கப்படும் இந்த ஆணைக்குழு நீதிமன்றத்தின் அதிகாரத்தை கூட விஞ்சுவதாகவும், இது இந்நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் என்றும், 230 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பாகிஸ்தானில் இதுபோன்ற சட்டத்தை அறிமுகப்படுத்த இம்ரான் கான் தயாராக இருந்தாலும் இணைய சேவை வழங்குநர்கள் நாட்டை விட்டு வெளியேற எடுத்த தீர்மானங்களால் அவர் அதை வாபஸ் பெற நேரிட்டதாகவும் தெரிவித்தார். இந்த சட்டத்தில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கும் அதிகாரம் உள்ளதால் இணையதள மையங்கள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் உள்ளதாகவும், முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், கூகுள் போன்ற நிறுவனங்கள் கூட இதன் ஆபத்துக்கள் குறித்து எச்சரித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் டிஜிட்டல் பொருளாதாரத்தை கொண்டு வருகிறோம் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு இணையத்தையும் சமூக ஊடகங்களையும் கட்டுப்படுத்த முயல்கிறது என்றும், ஜனாதிபதி பட்டம், பதவியையும் பாதுகாக்கவே இவை அனைத்தும் செய்யப்படுகின்றன என்றார். தங்களுக்குப் பிடிக்காத கருத்துக்களை முற்றாக ஒதுக்கிவிட்டு அரச பயங்கரவாதத்தின் ஊடாக ஊடகங்களை ஒடுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இவ்வாறான சட்டங்களால் எந்த புதிய தொழில்நுட்பமும் நம் நாட்டிற்குள் வராது என்றும்,அன்னிய நேரடி முதலீடு கூட இழக்கப்படும் என்றும்,இந்தச் சட்டத்தின் மிகத் தெளிவான நோக்கம் மக்களின் குரலை அடக்கி ஜனநாயக உரிமையை அழிப்பதாகும் என்றும், பல்வேறு மாற்றுக் கருத்துக்களை அடக்கி ஒடுக்குவதாகவும் என கூறினார்.

அரசாங்கத்திற்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை தண்டிக்கவும்,கருத்து சுதந்திரம்,சிந்தனை சுதந்திரம்,ஒன்று கூடும் சுதந்திரம் ஆகியவை இல்லாதொழிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். நாட்டில் சர்வாதிகாரத்திற்கோ எதோச்சதிகாரத்திற்கோ இடமில்லை என்றும், அடக்குமுறைக்குப் பதிலாக, மக்களுக்கு சுதந்திரமும் உண்மையை அறியும் உரிமையும் இருக்க வேண்டும் என்றார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொடர்மாடி குடியிருப்புக்கள் குறித்த அறிவித்தல்

மேலும் 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

 நீர் விநியோகம் தடைப்படலாம்