உள்நாடு

உழவு இயந்திர விபத்து – மத்ரஸாவின் அதிபர், ஆசிரியர் மற்றும் உழவு இயந்திரத்தின் உதவியாளர்கள் இருவர் கைது

அம்பாறை-காரைத்தீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் மத்ரஸா பாடசாலையின் அதிபர், ஆசிரியர் மற்றும் உழவு இயந்திரத்தின் உதவியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 26ஆம் திகதி மத்ரஸா பாடசாலை முடிந்து சம்பந்தப்பட்ட மாணவர்கள் வீட்டிற்கு செல்ல பஸ் இல்லாததால், தலைமையாசிரியர் குறித்த உழவு இயந்திரத்தில் செல்லுமாறு அறிவுறுத்தியதோடு அதற்காக பணமும் வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.

வெள்ளம் காரணமாக குறித்த வீதியில் பஸ் சேவைகள் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறானதொரு பின்னணியில் பணத்திற்காக பயணிகளை ஏற்றிச் செல்லும் உழவு இயந்திரத்தில் பிள்ளைகளை அவர்களது வீடுகளுக்கு அழைத்துச் செல்லுமாறு அதிபர் பணிப்புரை வழங்கியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த வீதி ஆபத்தானது என்பதால் உழவு இயந்திரத்தில் குழந்தைகளை ஏற்றிச் செல்ல வேண்டாம் என இராணுவத்தினர் அறிவுறுத்தியிருந்தமை மேலும் தெரியவந்துள்ளது.

11 மாணவர்களுடன் சென்ற உழவு இயந்திரம் வௌ்ளத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் மீட்கப்பட்டதே 6 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

12 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட 6 மாணவர்களே காணாமல் போயுள்ளனர்.

இதுவரை 5 மாணவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு மாணவனை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது தவிர உழவு இயந்திர சாரதி மற்றும் மற்றுமொருவரின் சடலங்கள் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Related posts

உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டம்!

உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியினர் விபரம்

வவுனியாவில் பரபரப்பு: மாணவர்களை இலக்கு வைத்து குண்டு