உள்நாடு

உள்நாட்டு இறைவரி சட்டத்தை அவசரமாகத் திருத்த நடவடிக்கை – மஹிந்தானந்த அளுத்கமகே.

(UTV | கொழும்பு) –

அரச வரிப் பொறிமுறையை மேம்படுத்தும் வகையில் உள்நாட்டு இறைவரிச் சட்டத்தை விரைவில் திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஒரு சில அதிகாரிகள் தமது கடமைகளை சரியாகச் செய்வதில்லை எனவும், அவர்கள் தொடர்பில் இந்த புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் மூலம் கடுமையான தீர்மானங்களை எடுக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நாட்டில் அரச வரிகளை அறவிடும் முறைமையில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகவும், எனவே நாட்டின் வரிக் கொள்கையை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் எனவும் மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தி நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே மஹிந்தானந்த அளுத்கமகே இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த மஹிந்தானந்த அளுத்கமகே, “தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு என்ற வகையில் தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப, வரிவிதிப்பதை முறைமைப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தியுள்ளோம். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கமைய பணவீக்கத்தை ஒற்றை இலக்கத்துக்கு கொண்டு வருதல், வெளிநாட்டுக் கையிருப்பை அதிகரித்தல் மற்றும் அரச வரி வருமானத்தை அதிகரித்தல் ஆகிய விடயங்களில், அரசாங்கம் எதிர்பார்க்கும் இலக்குகளுக்கு செல்ல முடியுமா என்பது தொடர்பில் எமது குழு ஆராய்ந்து வருகின்றது.

மேற்குறிப்பிட்ட பிரதான 03 இலக்குகளையும் எதிர்வரும் டிசெம்பர் மாதம் அடைய வேண்டியுள்ளதாகத் தெரிவித்த மஹிந்தானந்த அளுத்கமகே, அரச வரி வருமானத்தை அதிகரிப்பதைத் தவிர ஏனைய இலக்குகளில் நாம் ஓரளவு திருப்திகரமான நிலைக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார். அந்த வகையில், அரசாங்கத்துக்கு அதிக வருமானத்தை ஈட்டித்தரும் நிறுவனங்களான உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் இலங்கை மதுவரித் திணைக்களம் ஆகிய 03 நிறுவனங்களையும், குழு முன்னிலைக்கு அழைத்திருந்தோம்.
2023 ஆம் ஆண்டில் அரசாங்கம் எதிர்பார்த்துள்ள அரச வரி வருமானம், 3,105 பில்லியன்களாகும். ஆனால் அவற்றில் இந்த மூன்று நிறுவனங்களில் இருந்தும் இதுவரை, 1,179 பில்லியன்களே கிடைத்துள்ளது. அது அறவிடப்பட வேண்டிய வரியில் 38% வீதமாகும்.

இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் உரிய இலக்குகளை எட்ட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளது. அந்தவகையில், அரச வரி வருமானம் தொடர்பான இலக்கை இந்த மூன்று நிறுவனங்களுக்கும் அடைய முடியுமா என்பது குறித்து நாம் ஆராய்ந்தோம். இந்த நிறுவனங்களை முறையான மறுசீரமைப்புகளுக்கு உட்படுத்தாது அரசாங்கம் எதிர்பார்த்துள்ள இலக்குகளுக்கு செல்ல முடியும் என்று நாம் நம்பவில்லை. எனவே, இது குறித்து நாம் பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளோம். எமது நாட்டு மொத்த சனத்தொகையில், தனிப்பட்ட கோப்புகளின் படி 29,000 பேரே ஒரு ரூபாவேனும் வரி செலுத்துகின்றனர். வரி செலுத்தாமல் நான்கு மேன்முறையீடுகளை சமர்ப்பிக்கக்கூடிய ஒரே நாடு இலங்கை மட்டுமே. அந்த 04 மேன்முறையீடுகளை ஆய்வு செய்ய 15 ஆண்டுகள் செல்லும். அப்படியானால், இந்நாட்டு மக்கள் எவ்வாறு வரி செலுத்த முடியும்?” என்றும் மஹிந்தானந்த அளுத்கமகே சுட்டிக்காட்டினார்.

எனவே, வரிக்கொள்கை தொடர்பில், கவனம் செலுத்தியுள்ளதாகவும் நீதி அமைச்சின் உதவியுடன் உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய மறுசீரமைப்புகள் தொடர்பான வரைவு தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், வரி செலுத்துவது குறித்து முன்வைக்கக் கூடிய நான்கு மேன்முறையீடுகளை இரண்டாகக் குறைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். எனவே, இவ்வாறு வரி செலுத்த வேண்டியவர்கள் பல்வேறு மேன்முறையீடுகளை முன்வைத்தும் தமது வருமானத்தை சரியாக கணக்காய்வுக்கு உட்படுத்தாமலும், வரி செலுத்துவதை தவிர்த்து வருவதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே சுட்டிக்காட்டினார். எனினும், முறையான கணக்காய்வுகள் மூலம் இவ்வாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு கிடைக்க வேண்டிய வரி வருமானம், முழுமையாக கிடைக்குமாயின் வெளிநாடுகளிடம் கடன் பெறவேண்டிய நிலை இலங்கைக்கு ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 08 பில்லியன் ரூபா செலவில் கணனித் தரவுக் கட்டமைப்பு ஒன்றை தயாரித்துள்ளது. ஆனால், 10 ஆண்டுகளாகியும் இந்தக் கட்டமைப்பை செயல்படுத்த அதிகாரிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்தத் தரவுக் கட்டமைப்பில் 42 நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. தரவுக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்தினால் அவர்கள் விரும்பியபடி செயல்பட முடியாது. அதனால்தான் டிஜிட்டல் மயமாக்கலின் ஊடாக அரச பொறிமுறையில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் ஒன்றிணைத்து இவ்வாறு நிகழும் முறைகேடுகளைத் தடுப்பதற்கான பணிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வருகின்றார்.அரச வருமானத்தில் 90% வரி வருமானம் ஆகும். இந்நாட்டு மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படுவதும், நாட்டின் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதும், அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதும் அரசாங்கத்துக்கு கிடைக்கும் வரிவருமானத்தின் மூலமே ஆகும். அரசாங்கத்துக்கு வரி செலுத்தாத பலம்மிக்க தொழிலதிபர்கள் நாட்டில் உள்ளனர். உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அவற்றைக் கவனித்ததா? என்ற கேள்வி உள்ளது. சாதாரண மக்களிடம் வரி வசூலிப்பதை விட, வசூலிக்க வேண்டியவர்களிடம் வரி வசூலித்திருந்தால், அரச வரி வருமானத்தை அதிகரித்திருக்கலாம். எனவே முறையான கணக்காய்வுகளின் ஊடாக வரி வருமானத்தை அதிகரிப்பது குறித்து உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மீண்டும் சிந்திக்க வேண்டும். அறவிடப்பட வேண்டிய வரி வருமானத்தை வசூலிப்பதற்கு சரியான பொறிமுறை இல்லாமை குறித்து அரசாங்கம் கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும்.” என்றும் மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மாலைத்தீவிலிருந்து நாடு திரும்பிய 178 இலங்கையர்கள்

ராஜாங்கனையே சத்தரதன தேரருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!

ஐ.தே. கட்சியின் பிரதி தலைவராக ருவன் விஜேவர்தன தெரிவு