உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் வனாத்தவில்லு பாடசாலைக்கும் தொடர்புண்டு

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு.தினத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹஸீமினால், புத்தளம் – வனாத்தவில்லு பகுதியில் பாடசாலையொன்று நடத்தப்பட்டதாகவும், குறித்த பாடசாலையில் பயங்கரவாதம் தொடர்பான போதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

குறித்த பாடசாலையில் ஆயுதப் பயிற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் மூலமே இது குறித்துத் தெரியவந்ததென்றும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் தி​ணைக்களத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“.. 2008ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டு இறுதி வரை, குறித்த பாடசாலை நடத்தப்பட்டுள்ளதுடன், நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த சுமார் 40 மாணவர்கள் இங்கு கல்வி கற்று வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

சஹ்ரான் இந்த இடத்துக்குச் சென்று பயங்கரவாதம் தொடர்பிலான போதனைகளை நடத்தியுள்ளார் என்பதுடன், காணொளிகளையும் காட்சிப்படுத்தியுள்ளார் என்றும் இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய, ஏனைய தற்கொலைதாரிகளும், இங்கு போதனைகளை முன்னெடுத்துள்ளனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இஸ்‌ரேல் – பாலஸ்தீனம் தொடர்பான யுத்தக் காணொளிகள், இலங்கையில் நடைபெற்ற சிவில் யுத்தக் காட்சிகள் என்பன காண்பிக்கப்பட்டு, அவர்களின் மனங்களை மாற்றி பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையும் தெரிய வந்துள்ளது.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் புதிய முறையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் குறித்த விசாரணைகளுக்கமையவே திருகோணமலை – சம்பூர் பிரதேசத்தில் ஆயுதப் பயிற்சி முகாம் தொடர்பான தகவல் கிடைத்தது.

தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவுக்கமைய, பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டு வரும் சந்தேகநபரே குறித்த சம்பூர் ஆயுத பயிற்சி முகாமை அண்மையில் அதிகாரிகளுக்கு அடையாளம் காட்டியுள்ளார் என்றும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்காக, புத்தளத்தில் அமைப்பொன்று நடத்தப்பட்டுள்ளமை குறித்தும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது..” எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

சாதாரண தர – உயர்தர மாணவர்களுக்கான அறிவித்தல்

இன்று மேலும் பலருக்கு கொவிட் உறுதி

சிறுவர்களுக்கான கொவிட் தடுப்பூசி செலுத்தல் ஆரம்பம்