சூடான செய்திகள் 1

உமா ஓய திட்டத்தை ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவு செய்ய பணிப்புரை

(UTV|COLOMBO) உமா ஓய பல்நோக்குத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை இவ்வருடம் ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவு செய்து அதன் நன்மைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார்.

இத்திட்டத்தின் நிர்மாணப்பணிகள் தற்போது சுமார் 92 வீதம் நிறைவடைந்துள்ளதுடன், எஞ்சியுள்ள பணிகளையும் துரிதமாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அவர்கள் திட்டத்திற்கு பொறுப்பாகவுள்ள பொறியியலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்

உமா ஓய பல்நோக்கு திட்டத்தின் முன்னேற்றங்களை கண்டறிவதற்காக இன்று (22) கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தபோதே ஜனாதிபதி அவர்கள் இந்த பணிப்புரையை விடுத்தார்.

நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் பாரிய பல்நோக்கு திட்டங்களில் ஒன்றான உமா ஓய திட்டத்திற்கு 535 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

உமா ஓய பல்நோக்கு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வரும் நிலக்கீழ் மின்சார நிலையத்தின் நிர்மாணப் பணிகளையும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது பார்வையிட்டார். தேசிய மின் உற்பத்தி முறைமைக்கு 120 மெகா வோட்ஸ் மின்சாரத்தை வழங்கும் இந்நிலையத்தின் நிர்மாணப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது.

உமா ஓய பல்நோக்கு திட்டத்தின் மூலம் தெற்கு மற்றும் தென்மேற்கு உலர் வலயங்களில் சுமார் 5,000 ஏக்கர் காணிகள் இரண்டு போகங்களின் போதும் நீர்ப்பாசனத்தை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வெள்ளவாய, மொனராகலை பிரதேசங்களில் உள்ள சுமார் 300 சிறிய குளங்கள் இதன் மூலம் வளம்பெறவுள்ளன.

நீர்த்தேக்கத்தின் பிரதான சுரங்கப் பாதையின் நிர்மாணப் பணிகளையும் ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டார்.

இத்திட்டத்தின் மூலம் புகுல்பொலவிலும் டயரபாவிலும் இரண்டு நீர்த்தேக்கங்கள் நிர்மாணிக்கப்படுவதுடன் இந்த நிர்மாணப் பணிகளையும் ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டார். சுற்றாடல் அழுத்தங்கள் தொடர்பாக உரிய மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு தொடர்ச்சியான கண்காணிப்பை மேற்கொண்டு திட்டத்தின் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மகாவலி அபிவிருத்தி சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க உள்ளிட்ட அதிகாரிகளும் இலங்கைக்கான ஈரான் தூதுவரும் ஜனாதிபதி அவர்களுடன் இந்த கண்காணிப்பு விஜயத்தில் இணைந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

 

 

 

 

Related posts

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

தேசிய அடையாள அட்டை பெறுவதற்கு 100 ரூபா அறவிடப்படும்

தப்போவ நீர்த்தேக்கத்தின் 20 வான் கதவுகள் திறப்பு