அரசியல்உள்நாடு

உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடியுங்கள் – அரசியல் பழிவாங்கல்களைக் கைவிடுங்கள் – நாமல் எம்.பி

அனைத்து ஊழல்களையும் ராஜபக்சர்கள் மீது சுமத்துவதால் உண்மையான குற்றவாளிகள் ஒழிந்து கொள்வார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

அரசாங்கம் மேற்கொள்ளும் அரசியல் பழிவாங்கல்களை நிறுத்தி விட்டு உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரிப்பதற்கு வருகை தருமாறு கூறியிருந்தார்கள். அதனால் நான் வந்தேன். அவர்கள் கூறிய நேரத்திற்கே வந்து விட்டேன்.

நேற்று ஒரு விடுமுறைநாள். விடுமுறைநாளிலும் வருகை தந்து விசாரணை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றோம்.

வழமையைப் போல 100 மில்லியன் ரூபாயை மேசைமீது வைத்து விட்டுச் சென்றுள்ளதாக இன்னும் ஒருவர் கூறியுள்ளார். கடந்த முறை 200 மில்லியன் ரூபாய். இம்முறை நூறாகக் குறைந்துள்ளது. அடுத்தடுத்த முறைப்பாட்டில் 50, 25 எனக் குறைந்து செல்லும்.

அரசாங்கம் எங்களைப் பற்றி விசாரிக்க சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, சமய விடுமுறை தினங்கள் என பாராது விடுமுறை நாட்களிலும் விசாரணைகளை மேற்கொள்வது போல நாட்டு மக்களுக்கு நாளாந்தம் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குங்கள்.

பாதீட்டில் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றுங்கள். தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளை மறந்து விட்டார்கள். பாதீட்டில் வழங்கியவற்றையாவது நிறைவேற்ற இவ்வாறு அயராது உழைத்தால் நல்லது என நான் எண்ணுகின்றேன்.

இப்போது யார் வேண்டுமானாலும் எல்லா கள்ள வேலைகளையும் செய்து விட்டு ராஜபக்சர்கள் மீது சுமத்தி விட முடியும்.

இப்போது அது எல்லாருக்கும் மிக இலகுவான விடயமாகிப் போய்விட்டது. அதனால் அவர்கள் நிரபராதிகள் என விடுதலையாவார்கள்.

அரசாங்கமும் இதனை வழக்கமாக்கிவிட்டால் நாட்டில் நடக்கும் எல்லா குற்றச்செயல்களும் எங்கள்மீது சுமத்திவிட்டு உண்மையான குற்றவாளிகள் ஒழிந்துகொள்வார்கள்.

அதனால் இந்த அரசியல் பழிவாங்கல்களைக் கைவிட்டு விடுங்கள் என நான் அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றேன்.

உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடியுங்கள்.” என்று கூறினார்.

Related posts

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் 103 வெளிநாட்டு பயணிகளுடன் கரை ஒதுங்கிய படகு

editor

இன மத பேதங்களுக்கு அப்பால்   மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன் – ரிஸ்லி முஸ்தபா

editor