அரசியல்உள்நாடு

உங்கள் ஆணவத்தை ஒருபுறம் வைத்துவிட்டு, இப்போதாவது நாங்கள் சொல்லும் சாதகமான தீர்வுகளுக்கு செவிசாயுங்கள் – சஜித் பிரேமதாச

இன்றைய நிலவரப்படி, பங்குச் சந்தையும் வீழ்ச்சியடைந்து, பரிவர்தனைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அமெரிக்கா நாட்டின் ஏற்றுமதிக்கு 44% பரஸ்பர வரி விதித்து எதிர் வரும் 9 ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்த வரி விதிப்பால், அமெரிக்க சந்தையில் நுழையும் இலங்கை ஏற்றுமதிக்கு 44% வரி விதிக்கப்படுவதோடு, நமது நாடு ஏற்றுமதி விலைக்கான போட்டித்தன்மையையும் இழக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ரணசிங்க பிரேமதாசவின் 200 ஆடைத் தொழிற்சாலைகள் திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளில் 40% ஆனவை அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

அன்று இந்த திட்டத்தை கிண்டல் செய்தவர்கள் கூட இன்று இந்த துறையின் மதிப்பை நன்கு உணர்ந்துள்ளனர். இந்த வரி விதிப்பால், ஏற்றுமதி தேவை குறையும்.​

இதனால் தொழிற்சாலைகளின் உற்பத்தி குறைந்து, வருமானம் குறையும். தொழிலாளர்கள் கூட தொழில் இல்லா நிலைக்கு வரலாம். இதனால் சில தரப்பினர் தமது வாழ்வாதாரத்தை கூட இழக்க நேரிடும்.

இதன் காரணமாக, 350,000 நேரடி மற்றும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மறைமுக தொழில்களில் ஈடுபடுவோரில் பெரும்பாலானவர்களின் வாழ்வாதாரம் ஆபத்தில் காணப்படுகின்றன என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஆடைத் துறையைத் தவிர, ஏற்றுமதி தொடர்பான பிற தொழில்களுக்கும் இந்த வரி விதிக்கப்படுகிறது. இந்த விடயத்தில் அரசாங்கம் பெரும் தவறிழைத்து விட்டது.

இந்த வரிகள் தொடர்பில் பல மாதங்களுக்கு முன்னரே ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வு கூறி முன்னாயத்த நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவித்தது.

இந்த விடயங்களை முன்வைத்து உரையாற்றும் போது ஆளுந்தரப்பினர் எம்மைப் பார்த்து கேலி செய்தனர். எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தற்போது வரி விதிக்கப்பட்ட பின்னர் அரசாங்கம் பீதியடைந்து குழுக்களை நியமித்து வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிமித்தம் தெதிகம தேர்தல் தொகுதியில் இன்று (07) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டை பின்னோக்கி கொண்டு சென்று, மக்களைத் தூண்டிவிட்டு, அரசியல் அதிகாரம் பெறுவது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் ஈடுபடாது.

இந்த வரிவிதிப்பு நடைமுறைப்படுத்தப்படக்கூடாது என்றே ஐக்கிய மக்கள் சக்தி பிரார்த்திக்கின்றது.

அரசாங்கம் இப்போது பீதியடைந்து வெவ்வேறு கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அரசாங்கமானது செயலற்ற கொள்கையைப் பின்பற்றாமல் விரைந்து செயல்பட வேண்டும்.

ஆணவம் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்ட யோசனைகளைக் கூட பரிசீலிக்காது நடந்து வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இந்த வரிகளால் உற்ப்பத்தி தொழில்கள் மூடப்பட்டால், ஒட்டுமொத்த பொருளாதாரமும் சரிந்து விடும். 2028 இல் கடனை கட்ட முடியாத நிலை ஏற்படும்.

இந்தியப் பிரதமர், இத்தாலி தூதுவர் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் ஆகியோருடன் கலந்துரையாடிய போது இலங்கை உற்பத்திகளுக்கு அதிக சந்தை வாய்ப்புகளை இலங்கைக்கு பெற்றுத் தருமாறு நான் கோரிக்கை விடுத்தேன்.

தன்னால் இயன்ற சிறந்த பங்களிப்பை இதற்கு வழங்கியுள்ளேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

Related posts

மேல் மாகாணத்தின் ஆரம்பப் பாடசாலைகள் வழமைக்கு

தேர்தல் : சுகாதார நெறிமுறைகள் குறித்து இன்று சந்திப்பு

இலங்கை விமான படைக்கு புதிய தளபதி நியமனம்