ஈரானின் பாந்தர் அப்பாஸ் நகரிலுள்ள மிகப்பெரிய துறைமுகமான ஷாஹித் ராஜீயில் சனிக்கிழமை இரசாயனப் பொருட்களினால் ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதோடு, 700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் அமெரிக்காவுடன் ஓமானில் மூன்றாவது சுற்று அணுசக்தி பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ள நிலையில், ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் கொள்கலன்களில் இரசாயனங்கள் முறையாக சேமிக்கப்படாததே வெடிப்பு சம்பவத்துக்கு காரணம் என ஈரானின் நெருக்கடி முகாமைத்துவ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஹொசைன் ஜஃபாரி தெரிவித்துள்ளார்.
ஈரானின் நெருக்கடி முகாமைத்துவ அமைப்பின் பணிப்பாளர் இதற்கு முன்னர் துறைமுகத்திற்கு வருகை தந்தபோது இந்த துறைமுகத்திற்கு எச்சரிக்கைகளை விடுத்திருந்தார், மேலும் ஆபத்துக்கான சாத்தியக்கூறுகளை சுட்டிக்காட்டியிருந்தார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
மேலும் தீயை அணைக்கவும், அது மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கவும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறியதோடு, சம்பவ இடத்திற்கு உள்நாட்டு அமைச்சரை அனுப்பி வைத்துள்ளார்.