விளையாட்டு

ஈரானின் ஒரே பெண் வீராங்கனையும் நாட்டை விட்டு வெளியேறினார்

(UTV|ஈரான்) – ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஈரானின் ஒரே பெண் வீராங்கனையான கிமியா அலிசாதே (Kimia Alizadeh) தன் நாட்டை விட்டு வெளியேறியதாக அறிவித்துள்ளார்.

“போலித்தனம், பொய், அநீதி, முகஸ்துதி” ஆகியவை நிறைந்த ஈரானின் ஓர் அங்கமாக இருக்க தான் விரும்பவில்லை என்பதால் நாட்டை விட்டு வெளியேறியதாக 21 வயதாகும் அலிசாதே தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஈரானில் ஒடுக்கப்பட்டுள்ள இலட்சக்கணக்கான பெண்களில் தானும் ஒருவர் என்றும் தனது வெற்றியை இரான் அரசு அதிகாரிகள் பிரசார கருவியாக பயன்படுத்தியதாகவும் அவர் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தாம் தற்போது எந்த நாட்டில் இருக்கிறார் என்பதை அலிசாதே தெரிவிக்கவில்லை என்றாலும், அவர் சமீப காலமாக நெதர்லாந்தில் பயிற்சி மேற்கொண்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2016 ஆம் ஆண்டு ரியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் டேக்வாண்டோ-வில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் ஈரானிய பெண் வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்திருந்தார்.

ஈரான் தலைநகர் டெஹ்ரானிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ்வை நோக்கி புறப்பட்ட விமானம் அடுத்த சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 176 பேரும் உயிரிழந்து மூன்று நாட்களுக்கு பிறகு, கடந்த சனிக்கிழமை அன்று, தாங்கள் “தவறுதலாக” அந்த விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டதாக ஈரான் இராணுவம் அறிவித்தது.

ஈரானிய அரசின் முன்னுக்குப்பின் முரணான பேச்சை எதிர்த்து அந்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழல் கிமியா அலிசாதே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

241 ஓட்டங்களை குவித்த தென்னாபிரிக்கா…

கொரோனா வலையில் மொயீன்

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் நீல் வக்னர் முன்னேற்றம்