உள்நாடு

இளைஞர் சமுதாயத்தை விவசாயத்தின் பக்கம் ஈர்க்க நடவடிக்கைகள் – மஹிந்த அமரவீர.

(UTV | கொழும்பு) –

 

இளைஞர் சமூகத்தை விவசாயத்தின் பக்கம் ஈர்க்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்காக விவசாய நடவடிக்கைகளை நவீனமயப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.வரலாற்றில் முதல் தடவையாக பயிர் சேதத்தின் பின்னர் இரண்டு மாதங்களுக்குள் இழப்பீடு வழங்கியமைக்காக ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சு பாராட்டப்பட வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று  நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர,“அண்மையில் கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் இடம்பெற்றது. ஏனைய அமைச்சுகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த குற்றச்சாட்டுகளுடன் நிறைவேற்றப்பட்டது. அவை அனைத்தும் கடந்த காலங்களில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பானவையே ஆகும். தற்போது அனைத்து துறைகளினதும் ஒத்துழைப்புடன் எமது அமைச்சு முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தை கண்டுள்ளது.

மிகவும் சவால்மிக்க சந்தர்ப்பத்திலேயே நான் இந்த அமைச்சை ஏற்றுக்கொண்டேன். வயல்களுக்கு சென்று பயிரிடுமாறு நான் முதல் முதலாக விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினேன். அன்று 212,000 ஹெக்டெயார்கள் நெல் பயிரிடப்பட்டது. ஆனால் இந்த விளைச்சலை அதிகரிக்க ஆர்வத்துடன் செயற்படுமாறு நான் மிகவும் தாழ்மையுடன் விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுத்தேன். உரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பயிரிடுமாறு நான் கூறினேன். அதன் பிறகு 512,000 ஹெக்டெயார்கள் நெல் பயிரிடப்பட்டது. இதுவே அண்மைக்காலத்தில் கிடைத்த அதிக விளைச்சலாகும்.

அன்றும் பல்வேறு சவால்கள் காணப்பட்டன. தரம் குறைவான உரம் கொண்டுவரப்படுவதாகவும், நிறை குறைந்தது என்றும் கூறப்பட்டது. உரங்களில் புழுக்கள் இருப்பதாகவும் கூறினார்கள். ஆனால் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கைவைத்து விவசாயிகள் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டனர். அதன் பின்னர் நாம் படிப்படியாக இரு போகங்களிலும் அதிக விளைச்சலைப் பெற்றுக்கொண்டோம். நாம் அனைத்து வகை உரங்களையும் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் வழங்க நடவடிக்கை எடுத்தோம். நிதி உதவிகளையும் வழங்கினோம். எரிபொருள் மாணியங்களையும் வழங்கினோம். இதன் மூலம் வெற்றிகரமான நெல் விளைச்சல் கிடைத்தது.

எமக்கு வருடாந்தம் 25,40,000 மெட்ரிக் தொன் அரிசி அவசியமாகும். இம்முறை 27,50,000 மெட்ரிக் தொன் விளைச்சல் கிடைத்தது. இதன் ஊடாக இரண்டு இலட்சம் மெட்ரிக் தொன்னுக்கு மேல் மேலதிக விளைச்சல் இம்முறை கிடைத்துள்ளது. ஆனாலும் அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது. காரணம், அதிக நெல் விளைச்சல் கிடைத்தாலும் நெல் ஆலையாளர்கள் அவற்றை முழுமையாக சந்தைக்கு விநியோகிக்காத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது. அதேபோன்று கீரி சம்பா விளைச்சலில் குறைவு ஏற்பட்டதே தவிர பொதுவாக மக்கள் உட்கொள்ளும் அரிசி வகையில் குறைவு ஏற்படவில்லை. எனவே இந்த பண்டிகைக் காலத்தில் அரிசி இறக்குமதி செய்யவில்லை என்றால் அரிசியின் விலை வேகமாக அதிகரித்திருக்கும். இதனால் தான் நாம் விருப்பமின்றியேனும் அரிசி இறக்குமதி செய்யவேண்டி ஏற்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு 04 வகையான பயிர்களை முதன்மைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். நெல் தற்போது வெற்றிகரமான நிலையை அடைந்துள்ளது. அதனுடன் சோளம், மிளகாய், உருளைக் கிழங்கு ஆகியவற்றை பயரிடுவதற்கு மக்களைத் தூண்டுவதற்கு எதிர்பார்த்துள்ளோம். அதற்காக நாம் ஏற்கனவே ஒரு வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். இவை பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படுகின்றன. அவற்றை எமது நாட்டில் பயிரிடுவது குறித்து கவனம் செலுத்தியுள்ளோம். இந்தப் பயிர்கள் இலகுவாக விளையக் கூடிய பகுதிகளில் வேறு பயிர்களை பயிரிட வேண்டாம் என்று நாம் கூறியுள்ளோம். அப்பிரதேசங்களை குறித்த பயிர்களுக்கு ஒதுக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளோம்.

கடந்த காலங்களில் முட்டை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அது தொடர்பில் நாம் விசேட வேலைத்திட்டமொன்றை தயாரித்துள்ளோம். அடுத்த வருடம் முதல் முட்டை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது. அதேபோன்று கோழி இறைச்சி இறக்குமதி செய்ய அனுமதி கோரப்பட்டாலும் கூட நாம் அதற்கு அனுமதி வழங்கவில்லை. தற்போது கோழி இறைச்சியின் விலை குறைவடைந்துள்ளது. பறவைக்காய்ச்சல் அற்ற நாடு என்ற வகையில் எமக்கு கோழி இறைச்சி ஏற்றுமதி செய்யக் கூடிய அதிக சந்தர்ப்பம் உள்ளது. ஏற்கனவே நாம் மாலைத்தீவுக்கு ஏற்றுமதி செய்கின்றோம். அடுத்த வருடம் முதல் இதனை இன்னும் பல்வேறு நாடுகளுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டு வருகின்றோம்.

தற்போது விளைச்சல் சேதங்களுக்கு நட்ட ஈடு வழங்கி வருகின்றோம். அதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை நிவர்த்தி செய்து அந்த வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தி வருகின்றோம். வரலாற்றில் முதல் முறையாகவே இவ்வாறு விளைச்சல் சேதங்கள் ஏற்பட்டு ஓரிரண்டு மாதங்களில் நட்ட ஈடு வழங்கப்படுகின்றது. இதற்காக ஜனாதிபதிக்கும் நிதி அமைச்சுக்கும் பாராட்டுகளை தெரிவிக்கின்றேன்.

பெருந்தோட்டக் கைத்தொழிலை எடுத்துக்கொண்டால், இறப்பரில் நமது நாடு தற்போது பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது. அதனை மீண்டும் மேம்படுத்த அவசியமான திட்டங்களை வகுத்து வருகின்றோம். தேயிலையின் தரத்தை உயர்த்தவும் விளைச்சலை அதிகரிக்கவும் அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கறுவா பயிர்ச்செய்கையின் அபிவிருத்திக்காக தனியானதொரு திணைக்களத்தை நிறுவியுள்ளோம். அது தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்தியுள்ளோம். கோப்பி பயிர்ச்செய்கை குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம். அதனை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.

இளைஞர்கள் விவசாயத்தை விட்டுத் தூரமாகியுள்ளமை எமக்குள்ள பாரிய பிரச்சினையாகும். பெரும்பாலும் வயதானவர்களே விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். வருமானம் போதாமை உட்பட இன்னும் பல்வேறு காரணங்களினால் இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபடுவதில்லை. எனவே அவர்களை விவசாயத்தின் பக்கம் ஈர்க்க அவசியமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். இதற்காக விவசாய நவீனமயப்படுத்தல் பணிகளை மேலும் வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.” என்று கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தாதியர் சங்கத்தினால் அரசுக்கு காலக்கெடு

ஐஸ் போதைப்பொருட்களை வாடகை வாகனம் மூலம் கடத்திய இருவருக்கு விளக்கமறியல்

editor

இன்று முதல் Drone கெமரா பயன்படுத்த நடவடிக்கை