வணிகம்

இளம் சமாதான ஊடகவியலாளர்களுக்கான MediaCorps புலமைப்பரிசில் செயற்திட்டம்

(UTV | கொழும்பு) – இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட Media Corps புலமைப்பரிசில் செயற்திட்டத்தின் ஐந்தாவது குழுக்கான பயிற்சி இம்மாதம் 11 ஆம் திகதி கட்டுநாயக்க ரமதா ஹோட்டலில் ஆரம்பமானது. நாட்டின் பல பாகங்களிலும் இருந்து தெரிவான பல்வேறு கலாசாரங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற இளம் ஊடகவியலாளர்கள் 25 பேர் (சிங்களம் 12, தமிழ் 6, முஸ்லிம் 7) (பெண்கள் 7, ஆண்கள் 18) இக்குழுவில் உள்ளடங்குகின்றனர்.

இந்த பயிற்சிநெறி செப்டம்பர் 11 ஆம்திகதியிலிருந்து 16 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட புலமைப்பரிசில்தாரிகளுக்கு குறித்த இந்த ஐந்து நாள் பயிற்சிநெறிக்கு முன்னர் ஒன்லைன் (Online) மூலம் நடைபெற்ற இணைய அமர்வுகள் (Webinar) நான்கினில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. பன்மைத்துவம் மற்றும் பல்வகைமை விடயத்தில் கூருணர்வுடன் நடந்து கொள்ளல், பால்நிலை கூருணர் அறிக்கையிடல், முரண்பாட்டு கூருணர் அறிக்கையிடல் மற்றும் ஊடகவியலுக்காக சமூகஊடகங்களை பயன்படுத்துதல் போன்ற கருப்பொருட்களின் கீழ் இந்த தொடர் Webinar ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பயிற்சி அங்குரார்ப்பணநிகழ்வின் இறுதியில் பங்குபற்றியவர்களுக்கு MoJo உபகரணங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.

இந்த ஐந்து நாள் பயிற்சி நெறி (MoJo) ‘கைப்பேசியைப் பயன்படுத்தி கதை உருவாக்குதல்’ என்ற விடயத்தை நோக்காகக் கொண்டு நடைபெற உள்ளது. இதற்கு மேலதிகமாக பிரதி எழுதுதல் மற்றும் ஊடகவியல் செயற்பாடுகளில் தரவுகளை பயன்படுத்துதல் தொடர்பாகவும் அறிவூட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரபல MoJo பயிற்று விப்பாளர்களால் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது.

பயிற்சியின் நான்காவது தினத்தில், நீர்கொழும்பு மோரவல மற்றும் தூவ மீனவ கிராமங்களுக்கு கள விஜயமொன்றை மேற்கொண்டு, தாம் கற்ற விடயங்களை பிரயோக ரீதியாக பயன்படுத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

‘ஜனநாயக இலங்கைக்காக ஊடகங்களை வலுவூட்டுதல்’ என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் மற்றுமொரு செயல்பாடாக, சர்வதேச ஆராய்ச்சி மற்றும் பரிவர்த்தனை சபை (IREX) மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவனம்(USAID) ஆகியவற்றுடன் இணைந்து இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் (SDJF), இவ் Media Corps  நிகழ்ச்சித் திட்டத்தை செயற்படுத்துகின்றது.

Related posts

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் சரிவு

காலாவதியான பேக்கரி உற்பத்தி பொருட்கள் மீட்பு

சர்வதேச நாணய நிதியத்தினால் நிதி ஒதுக்கம்