சூடான செய்திகள் 1

இலவன்குளம் – மறிச்சிக்கட்டி பாதையை பொதுமக்கள் பாவனைக்கு திறந்து விட இணக்கம்! மார்ச் 25 இல் இறுதித் தீர்மானத்துக்கு வர உச்ச நீதி மன்றில் முடிவு.

(UTV|COLOMBO)-வில்பத்து சரணாலயத்திற்கு அணித்தாகச் செல்லும் B37 இலவன்குளம் – மறிச்சிக்கட்டி பாதையை மீண்டும் பொது மக்களின் பாவனைக்கு திறந்து விடுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று(25)  இணக்கம் காணப்பட்டுள்ளது. எதிர் வரும் மார்ச் மதம் 25 ஆம் திகதி இது தொடர்பான இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் தெரிவித்தார்.

குறிப்பிட்ட இந்த  பாதையை பொதுமக்கள் பாவனைக்கு பயன்படுத்துவதை எதிர்த்து 2010 ஆம் ஆண்டு சூழலியல் வன பாதுகாப்பு லிமிட்டட் என்ற அமைப்பினால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட  அடிப்படை உரிமை மீறல் வழக்கின் விவாதம் இன்று இடம்பெற்ற  போது, இந்தப்  பாதையை  திறப்பதில் மனுதாரர்கள் ஓர் இணக்கப்பாட்டிற்கு வந்து, மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பொதுமக்களின் பாவனைக்காக திறந்துவிட அவர்கள் விருப்பம் தெரிவித்ததை அடுத்தே ஒரு புதிய திருப்பு முனை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த வழக்கின் பிரதிவாதிகளாக வன ஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் , சட்டமா அதிபர் , வீதி போக்குவரத்து அதிகார சபை , மற்றும்  அமைச்சர் ரிஷாட் பதியுதீன்  ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் இடையீட்டு மனு தாரர்களாக மறிச்சிக்கட்டி,  கரடிக்குழி, முசலி பிரதேசத்தில் வாழும் பொதுமக்கள் இருக்கின்றனர்.

நான்காவது பிரதிவாதியான அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சார்பில் பொதுமக்கள் நலனுக்காக சிரேஷட சட்டத்தரணி ருஸ்தி ஹபீபும் இடையீட்டு மனு தாரர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி வெலியமுனவும் ஆஜராகி பாதை திறக்க வேண்டியதன்  அவசியம் பற்றியும் பொதுமக்களுக்கு ஏற்படும் நன்மை பற்றியும்  நீதிமன்றத்தில் வாதிட்டனர்.

உச்ச நீதிமன்ற நீதியரசர்களான தெஹிதெனிய ,சூரசேன ,துரைராஜா ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

“சட்டமா அதிபர் சார்பில் இந்த வழக்கை சுமூகமாக தீர்த்துக்கொள்ளக்கூடிய சூழல்
ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.அதற்கான வழிமுறை
காணப்படுவதாகவும்  கூறப்பட்டது .அதனடிப்படையில் மனுதாரர்களும் இதனை சுமூகமாக முடித்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளுக்கு இன்றைய தினம் தயாராக இருந்தனர்.

பொதுமக்கள் குறிப்பிட்ட பாதையை பயன்படுத்தக்கூடிய வகையிலும்  வனஜீவராசிகளுக்கு பாதிப்பு ஏற்படாத  விதமாகவும் ஒரு பொறிமுறையை ஏற்படுத்தி, இந்த பாதையை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக எதிர்வரும் மார்ச் 25 ஆம் திகதி குறிக்கப்பட்டு அன்றைய தினம் நீதிமன்றத்தில் இதனை நிறைவு செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதற்கிடையில் சட்டமா அதிபர் சார்பில் வனஜீவராசிகள் திணைக்களத்துடன் கலந்துரையாடி, பொது மக்களும் இந்த பாதையை பாவிக்கின்ற விதத்தில் எந்தளவுக்கு மட்டுப்பாடுகளை ஏற்படுத்தலாம் என்பதையும்  உச்ச நீதி மன்றத்தில் அறிவிப்பு செய்யுமாறு தீர்மானிக்கப்பட்டது.” என்று  சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் மேலும் தெரிவித்தார் .

-ஊடகப்பிரிவு-

 

 

 

 

Related posts

நாட்டின் பல பாகங்களில் இன்றும் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

கிளப் வசந்த கொலை : 10 லட்சம் பெற்ற கடை உரிமையாளர்

“அமைச்சர்களுக்கு வந்தது புதிய தடை”