20,000 ரூபா இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கைது செய்துள்ளது.
கிரிபாவ பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டின் பேரில் குறித்த பொலிஸ் சார்ஜன்ட் கைது செய்யப்பட்டார்.
கிரிபாவ பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சார்ஜென்ட் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
திருமணமாகி தற்போது கைவிட்டுச் சென்ற மனைவிக்கு எதிராக தாக்கல் செய்த இழப்பீட்டு வழக்கு தொடர்பாக, மனைவிக்கு எதிரான பிடியாணையை நிறைவேற்றவும், அவரது மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும், குறித்த பொலிஸ் சார்ஜன்ட் முறைப்பாட்டாளரிடம் 20,000 ரூபாய் இலஞ்சம் கோரியுள்ளார்.
குறித்த இலஞ்சத் தொகையை வழங்காவிட்டால் முறைப்பாட்டாளருக்கு எதிராக ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கையை தொடர்பு படுத்தி வழக்கு தாக்கல் செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவ்வாறு செய்யாமல் இருக்க குறித்த இலஞ்சத் தொகையை வழங்குமாறு குறித்த பொலிஸ் சார்ஜென்ட் முறைப்பாட்டாளருக்கு தெரிவித்துள்ளார்.
அதன்படி, குறித்த பொலிஸ் அதிகாரி, சம்பந்தப்பட்ட இலஞ்சத் தொகையை வாங்கச் சென்றபோது, முறைப்பாட்டாளரின் வீட்டில் வைத்து, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.