உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கை விஞ்ஞானி ஜவாஹிருக்கு அமெரிக்காவில் விருது!

(UTV | கொழும்பு) –

அனுராதபுர மாவட்டத்திலுள்ள நாச்சியாதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் விஞ்ஞானி இப்ராஹிம் ஜவாஹிர் அவர்களுக்கு ‘அமெரிக்க இயந்திர பொறியியலாளர் சமூகம்’ (The American Society of Mechanical Engineers) இன் 2023ம் ஆண்டுக்கான சிறந்த விருது அமெரிக்காவில் வழங்கப்பட்டுள்ள செய்தி மகிழ்ச்சி தருகிறது.அவர் எமது ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்பதனால் ஊர் சார்பாக அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சிடைகிறேன்.

அவர் தற்போது அவர் ஐக்கிய அமெரிக்காவின் University of Kentucky ல் பொறியியல் துறைப் பேராசிரியராகவும் விஞ்ஞான ஆராய்ச்சி ஆய்வு கூடத்தின் தலைவராகவும் இருப்பது இலங்கை மக்களுக்கும் பெருமை சேர்க்கிறது. அவர் சர்வதேசங்களில் பல முக்கிய விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றிருப்பதுடன் அமெரிக்காவிலுள்ள முக்கியமான நிறுவனங்களுக்கு பல மில்லியன் டொலர் செலவிலான திட்டங்களை (Projects) நிறைவேற்றிக் கொடுத்து தனது பல்கலைக் கழகத்துக்கும் ஆராய்ச்சி நிலையத்துக்கும் பாரிய வருமானத்தையும் பெருமையையும் தேடிக்கொடுத்துள்ளார்.

அவர் உலகில் உள்ள பல முன்னணி பல்கலைக் கழகங்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருவதுடன் அங்கு பல சொற்பொழிவுகளையும் நிகழ்த்தி வருகிறார். பொறியியல் முதுமாணி மாணவர்களுக்கான பல ஆராய்ச்சிப் புத்தகங்களை அவர் எழுதியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கல்விப் பயணம்

ஜவாஹிர் அவர்கள் தனது இரண்டாம் வகுப்பு வரையுள்ள ஆரம்பக் கல்வியை அனுராதபுர மாவட்ட நாச்சியாதீவு இக்பால் மகாவித்தியாலயத்தில் பெற்றுக் கொண்டதுடன் க.பொ.த.(சா/த) வரை Erukkalampiddy Muslim Madhya Maha Vidyalaya த்தில் கற்ற அவர், தனது க.பொ.த.(உ/த) கல்வியை யாழ்ப்பாணம் Sri Skandavarodaya College லும் பெற்றார். பின்னர் அவர் Bachelor of Mechanical Engineering Degree யையும் Master of Science in Mechanical Engineering ஐயும் மாஸ்கோவில் உள்ள Patrice Lumumba University லும் பெற்றார்.

ஜவாஹிர் அவர்கள் அவுஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரில் அமைந்துள்ள New South Wakes University ல் Mechanical Engineering எனும் துறையில் தனது கலாநிதி(PhD) கற்கை நெறியை பூர்த்தி செய்தார்.

அதன் பின்னர் அவர் அவுஸ்திரேலிய நாட்டின் Wollongong University இல் Mechanical Engineering துறை விரிவுரையாளராக கடமையாற்றிமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஜவாஹிர் அவர்கள் பொறியியலாளராக பட்டம் பெற்ற பின்னர் வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலையிலும் National Engineering Research and Development Centre( NERD) ல் ஆய்வுக்கான பொறியியலாகவும் கடமைபுரிந்து நாட்டுக்கான பங்களிப்பை வழங்கியுள்ளார்.

நாச்சியாதீவுத் தொடர்பு

இவரது பெற்றோர் கல்வித் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து தமது பிள்ளைகளை வளர்த்தார்கள். தந்தை இப்ராஹீம் ஸாஹிப் மன்னார் மாவட்டத்தின் எருக்கலம்பிட்டியையும் தாய் பாத்திமா பீவி அனுராதபுர மாவட்ட நாச்சியாதீவையும் பிறப்பிடமாகக் கொண்டவர்களாவர்.

பேராசிரியர் ஜவாஹிர் அவர்களது சகோதரரான இப்ராஹீம் அன்ஸார் அவர்கள் எகிப்து, மலேசியா, சவூதி அரேபியா,ஓமான் ஆகிய நாடுகளில் இலங்கை நாட்டின் தூதுவராக கடமையாற்றியிருப்பதுடன் சிறிது காலம் முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளராகவும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

முன்னை நாள் தூதுவர் இப்ராஹீம் அன்ஸார் தனது குடும்பத்தின் நிலை பற்றி குறிப்பிடுகையில் “நாம் அடிப்படையில் எருக்கலம்பிட்டியில் தான் வசித்து வந்தோம்.
எமது குடும்பத்தில் ஒவ்வொரு பிள்ளையும் தாயின் வயிற்றில் தரித்த பின்னர் பிரசவத்திற்காக இன்னும் 40 நாட்கள் இருக்கின்றன என்ற நிலை வந்தால் எமது தகப்பன் எமது தாயை நாச்சியாதீவுக்கு அழைத்துச் செல்வார்.
அங்கு தான் நாம் ஒவ்வொருவரும் பிறந்தோம். எனவே எமது பிறந்தகம் நாச்சியாதீவு தான். எனது சகோதரர் ஜவாஹிர் அவர்கள் இரண்டாம் வகுப்பு வரை நாச்சியாதீவு இக்பால் மகாவித்தியாலயத்தில் தான் கல்விகற்றார்” எனக் கூறுகிறார்.

நாச்சியாதீவில் உறவுகள்

நாச்சியாதீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமை புரிந்து தற்போது ஓய்வு பெற்றிருக்கும் AHA Azeez அவர்களது தாயார் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த
Mr. Yakoob, Mr. Seinulabdeen,Mr. Habeeb Mohamed, Mr. Ibramsa ஆகியோர் பேராசிரியர் ஜவாஹிர் அவர்களது தாயாரின் உடன்பிறப்புக்களாவர். இவர்கள் அனைவரதும் பிள்ளைகளும் தற்போது நாச்சியாதீவிலேயே வசித்து வருகிறார்கள்.

மூளைசாலிகள் வெளியேற்றம்

இலங்கை மண் ஈன்றெடுத்த இத்தகைய விஞ்ஞானிகள் பலர் வெளிநாடுகளில் குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் தொழில் செய்வதும் பாராட்டுக்களைப் பெறுவதும் மகிழ்ச்சி தரும் செய்தியாக இருப்பினும் இன்னொரு வகையில் அவர்களது சேவை இந்நாட்டுக்கு கிடைக்கவில்லை என்ற விடயம் கவலை தருகிறது.

எமது இலங்கை நாடு வளமான புத்திஜீவிகளைக் கொண்ட நாடு. ஆனால் அவர்கள் உயர்ந்த கல்வித் தகைமைகளை அடைகின்ற பொழுது அத்தகைய திறமைசாலிகளை நாட்டில் தக்கவைத்துக் கொள்வதற்கான பொறிமுறை இந்த நாட்டில் இல்லாமல் இருப்பது கண் கூடு.

குறிப்பாக அண்மைக் காலத்தில் இனவாதம், அரசியல் நெருக்கடிகள், யுத்தங்கள், பொருளாதார நெருக்கடிகள் போன்ற செயற்கையாக உருவாக்கப்பட்ட காரணிகளால் இந்நாடு பல புத்திஜீவிகளையும் விஞ்ஞானிகளையும் துறை சார் நிபுணர்களையும் இழந்திருக்கிறது. அவர்கள் புலம்பெயர்ந்து சென்று விட்டார்கள்.

பல்கலைக்கழகங்களில் 50% ஆன விரிவுரையாளர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக தகவல்கள் கூறுகின்றன. வைத்தியத்துறை உள்ளிட்ட இன்னும் பல துறைகளிலும் இது போன்ற ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்படிப் போனால் இந்த நாட்டின் நிலை என்னவாகும்?

மேற்கத்திய நாடுகள் எம் போன்ற நாடுகளைச் சேர்ந்த புத்திஜீவிகளுக்கு கவர்ச்சியான சலுகைகளையும் கொழுத்த சம்பளங்களையும் வழங்கி அவர்களை உள்வாங்கி தமது நாடுகளை முன்னேற்றியிருப்பதை நாம் அறிவோம். ஆனால் துரதிஷ்டவசமாக எமது நாடு இத்தகைய புத்திஜீவிகளை தொடர்ந்து இழந்து வருகிறது. இன்னும் ஓரிரு வருடங்களில் இதன் பயங்கரமான பாதிப்பை நாம் அனுபவித்தே தீருவோம்.இப்போதே அனுபவிக்கிறோம். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

துறை சார் நிபுணர்களை உருவாக்குவது ‘பர்ளு கிபாயா’ என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். அந்த வகையில் இஸ்லாமிய உணர்வுள்ள, சமூக சேவை மனப்பாங்கு கொண்ட புத்திஜீவிகள், பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள் வைத்தியர்கள், நிபுணத்துவ அறிவு கொண்டவர்கள் என்று ஒவ்வொரு துறைக்கும் உரியவர்களை தேவையான அளவு எண்ணிக்கையில் உருவாக்கி அவர்களை தக்க வைத்துக் கொள்வது சமூகத்தின் கடமையாகும். ஆனால், தற்போதைய நிலை மிக கவலைக்கிடமாக இருக்கிறது. இது பற்றி நாட்டுத் தலைவர்களும் பொறுப்பான பதவிகளில் அமர்ந்திருப்பவர்களும் அதிகமதிகம் சிந்திக்க வேண்டும். பேராசிரியர் ஜவாஹிர் போன்றவர்கள் இந்த நாட்டில் இருந்திருந்தால் நிலை எப்படி இருக்கும் என்று சிந்தித்து பார்ப்போம்.

எனவே எதிர்காலத்தை திட்டமிடுவதற்கான வழிமுறை ஒன்று இந்த நாட்டுக்குத் தேவைப்படுகிறது.

SHM. பலீழ்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்த ஜனாதிபதி

இன்றும் சீரற்ற வானிலை

பாணந்துறையில் ஹெரோயினுடன் 4 பேர் கைது