வகைப்படுத்தப்படாத

இலங்கை குறித்த முதலாவது விவாதம் இன்று

(UTV|COLOMBO)-ஐக்கிய நாடுகளது மனித உரிமைகள் பேரவையின் 37வது கூட்டத்தொடரில், இன்றையதினம் இலங்கை குறித்த முதலாவது விவாதம் நடைபெறவுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு நொவம்பர் மாதம் முன்வைக்கப்பட்ட இலங்கை குறித்த பூகோள காலக்கிரம அறிக்கையின் பெறுபேறுகள் குறித்து இன்று விவாதிக்கப்படவுள்ளன.

இதன்போது மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் அமுலாக்கப்பட வேண்டிய பரிந்துரைகள் முன்வைக்கப்படவுள்ளன.

அத்துடன், இந்த விடயங்களில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில், ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி விளக்கமளிப்பையும் மேற்கொள்ளவுள்ளார்.

மேலும் இலங்கை தொடர்பில் பல்வேறு பொது, அரச சார்பற்ற அமைப்புகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அறிக்கைகளை சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டம் கடந்த 16ம் திகதியே நடைபெற உத்தேசிக்கப்பட்டிருந்தது.

எனினும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் பணியாளர்கள் மேற்கொண்ட உள்ளக போராட்டம் காரணமாக, இன்று வரையில் பிற்போடப்பட்டிருந்தது.

இதேவேளை, இன்றைய கூட்டத்தின் போது மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் செயிட் ராட் அல் ஹுசைன், இலங்கை குறித்த அறிவிப்பையும் வெளியிடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், மனித உரிமைகள் மாநாட்டின் 37வது அமர்வில் இலங்கை குறித்த பிரதான விவாதம் எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ளது.

இதன்போது மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், இலங்கையின் மறுசீரமைப்பு மற்றும் நல்லிணக்க பொறிமுறை அமுலாக்கம் குறித்த அறிக்கையை முன்வைக்கவுள்ளார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக, இலங்கை அரசாங்கத்தின் சார்பில், வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனையின் தலைமையிலான குழு ஒன்று ஜெனீவா செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் உருவாக்கப்பட்ட காணால் போனோர் அலுவலகம், பலவந்தமாக காணாமல் போதல்களில் இருந்து பாதுகாப்பு வழங்குவதற்கான சர்வதேச சாசன சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டமை, பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதற்கும், காணிகளை விடுவிப்பதற்கும் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து, இலங்கையின் குழு விளக்கமளிக்கவுள்ளது.

அதேநேரம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த விடயங்கள் குறித்து சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதன்படி ஜெனீவா சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், அங்கு பல பொது அமைப்புகள் மற்றும் மனித உரிமைகள் பேரவையின் அதிகாரிகளுடன் சந்திப்புகளை நடத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், அமெரிக்காவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

அவர் அங்கு அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளையும், ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தரவதிவிடப் பிரதிநிதியையும் சந்திப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

போலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் சிறுவியாபாரிகளுக்கு கிடைக்காத அனுமதி பெரும் உணகவக உரிமையாளறிற்கு

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொழிற்சங்கங்களுடன் ராஜித்த சந்திப்பு