உள்நாடு

“சித்திரசிறி குழுவின் அறிக்கை” அமைச்சரவை உபகுழுவிற்கு கையளிப்பு!

(UTV | கொழும்பு) –

பாராளுமன்ற சட்டமொன்றின் ஊடாக இலங்கை கிரிக்கெட்டுக்கான புதிய யாப்பொன்றைத் அறிமுகம் செய்வதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் கே.டி. சித்ரசிறி தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் கிரிக்கெட் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் தலைவர் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியிடம் நேற்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

எமது நாட்டில் பிரபலமான விளையாட்டான கிரிக்கட் தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடியானது மிகவும் சிக்கலானது மற்றும் ஆழமானது என்பதனால், அதனை இடைக்கால நிர்வாகக் சபை நியமிப்பதால் மாத்திரம் தீர்க்க முடியாது எனவும் விளையாட்டுத் துறையின் மேம்பாடு தொடர்பாக கவனம் செலுத்துகையில் இதற்காக நிரந்தரமான, உறுதியான தீர்வை வழங்குவது அவசியம் என்பதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நிலைப்பாடாகும்.

“சித்ரசிறி குழுவின் அறிக்கை” அண்மையில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட போதிலும், 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் என்பவற்றுக்குப் பின்னர் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு உத்தேச யாப்பு வரைபை அமைச்சரவை உபகுழுவிடம் சமர்ப்பித்து பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவர ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

இதன்படி அறிக்கை இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு ஆராய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சரவை உபகுழுவின் தலைவரும் வெளிவிவகார அமைச்சருமான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார் இந்த உத்தேச புதிய யாப்பு வரைவின் மூலம் இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபை நியமிக்கும் முறையை முற்றாக மாற்றுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதுடன் அதன் உள்ளடக்கம், நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம் என்பனவும் திருத்தப்பட்டுள்ளன.
உத்தேச புதிய கிரிக்கெட் யாப்பின் பிரகாரம், இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபை 04 வருட காலத்திற்கு நியமிக்கப்படும் 18 உறுப்பினர்களைக் கொண்ட பணிப்பாளர் சபையினால் நிர்வகிக்கப்பட வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது. கொள்கை முடிவுகளை எடுப்பதற்கான அதிகாரங்கள் பணிப்பாளர் சபைக்கு வழங்கப்பட வேண்டும் எனவும், அந்த முடிவுகளை நடைமுறைப்படுத்தும் அதிகாரங்கள் பணிப்பாளர் சபையினால் நியமிக்கப்படும் பணிப்பாளர் நாயகத்திற்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தப் பணிப்பாளர் சபையின் 08 உறுப்பினர்கள் பரிந்துரைக்கப்பட்டு பெயரிடப்படும் பணிப்பாளர்கள் என்பதோடு அவர்களை பரிந்துரைக்கும் அதிகாரம், 06 பேர் அடங்கிய நிபுணர்கள் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் தேசிய கிரிக்கட் கவுன்ஸில் தலைவர், வரையறுக்கப்பட்ட பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் தலைவர் அல்லது அவரினால் பெயரிடப்படும் அதிகாரி,சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அல்லது அவர் பெயரிடும் அதிகாரி,இலங்கை வணிகச் சபையின் தலைவர் அல்லது அவர் பெயரிடும் அதிகாரி, இலங்கை பணிப்பாளர்கள் நிறுவனத்தின் தலைவர் அல்லது அவர் பெயரிடும் அதிகாரி , இலங்கை முகாமைத்துவ கணக்காய்வு நிறுவனத்தின் (CIMA Sri Lanka) தலைவர் அல்லது அவர் பெயரிடும் அதிகாரி ஆகியோர் உள்ளடங்குவர்.

பணிப்பாளர் குழுவின் ஏனைய உறுப்பினர்கள் தேர்தலின் ஊடாகவே தெரிவு செய்யப்படுவர். அந்த தேர்தலில் 05 கிரிக்கெட் சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 01 பணிப்பாளரும், கிரிக்கெட் நடுவர்களின் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரும், பெண்கள் கிரிக்கெட் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரும், கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்களின் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரும் தெரிவு செய்யப்படுவர். கிரிக்கெட் விளையாட்டின் பல்வேறு துறைகளையும் உள்ளடக்கி செயற்பாடுகளை ஒழுங்குமுறையின் அடிப்படையில் முன்னெடுத்துச் செல்வதற்காக 12 குழுக்களை நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட், கணக்காய்வுக்குழு, பங்குதாரர் கொடுக்கல் வாங்கல் குழு , வேட்பு மனுக் குழு, தெரிவுக்குழு, போட்டிக்குழு, வசதிகள் மேம்பாட்டுக் குழு, சுற்றுலாக் குழு, விதிகள் – தீர்ப்பு – ஒழுக்கம் தொடர்பான குழு, முதலீட்டுக் குழு , தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து மற்றும் மோசடி தடுப்புக் குழு மற்றும் சம்பளக் குழு உள்ளிட்ட குழுக்களை நிறுவும் யோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஹட்டன் பேருந்து விபத்து – சாரதிக்கு விளக்கமறியல்

editor

போதைப்பொருட்களை அழிக்க புதிய திட்டம்!

தேர்தல் திகதியை தீர்மானிக்கும் அதிகாரம் தொடர்பில் கருத்து