சம்பிரதாய கட்டுமானங்களுக்கு அப்பாலான சரியான நகர திட்டமிடல் முறையின் மூலம் இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலா களமாக மாற்ற முடியுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின் அதிகாரிகளுடன் நேற்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
நகர அபிவிருத்தியை திட்டமிடும்போது இலங்கையின் தனித்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் திட்டங்களை தயாரிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
நகரங்கள் மாத்திரமின்றி கிராம அபிவிருத்தியை மையப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் இங்கு நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், அந்த அபிவிருத்தி செயற்பாடுகளின் போது கிராமிய கலாச்சாரம் மற்றும் மக்கள் வாழ்வியலின் தனித்துவத்தை பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரசல் அபோன்சு, நகர அபிவிருத்தி கட்டுமானங்கள் மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன மற்றும் தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.ஆர்.ருசிர விதான உள்ளிட்ட தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின் அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
-ஜனாதிபதி ஊடகப் பிரிவு