உள்நாடு

இலங்கையில் நியாயமான தேர்தலை நடாத்துவதற்கு எப்போதும் ஆதரவு – மத்தியூ மில்லர்.

(UTV | கொழும்பு) –

இலங்கையில் ஊழல் மோசடிகள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கும், சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலை நடாத்துவதற்கும் தாம் எப்போதும் ஆதரவளிப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் மத்தியூ மில்லர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க செனெட் சபையின் உறுப்பினர்களான பென் கார்டின், ஜிம் ரிச், ராஜா கிருஷ்ணமூர்த்தி மற்றும் பில் ஜோன்ஸன் ஆகியோர் இணைந்து இலங்கையில் ஊழலை இல்லாதொழித்தல் மற்றும் நீதியை அடைதல் ஆகியவற்றை முன்னிறுத்திய பொதுமக்களின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதையும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதையும் இலக்காகக்கொண்ட இருகட்சித் தீர்மானமொன்றை செனெட் சபையில் முன்மொழிந்துள்ளனர். இத்தீர்மானத்தில் இலங்கை மக்களின் ஜனநாயக ரீதியான மற்றும் பொருளாதாரத்தை மையப்படுத்திய அபிலாஷைகளை ஈடேற்றுவதற்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்குமென உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று ஊழலை இல்லாதொழித்தல், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்தல், உள்ளுராட்சிமன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை மேலும் தாமதமின்றி சுதந்திரமானதும் நியாயமானதுமான முறையில் நடாத்துதல் ஆகியவற்றை நிறைவேற்றுவதன் ஊடாக இலங்கை அரசாங்கம் நாட்டுமக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கவேண்டும் எனவும் அத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

‘இலங்கை மக்கள் அரசியல், பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருப்பதுடன், அவை மக்கள் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அத்தோடு அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள், முறையற்ற நிதி நிர்வாகம், சட்ட ஆட்சியை உறுதிப்படுத்துவதில் தோல்வி, சீனாவிடமிருந்து பெற்ற மிகையான கடன்கள் போன்றவை இந்த நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. இருப்பினும் ஊழலையும், தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கையும் முடிவுக்குக்கொண்டுவருவதற்குரிய போதிய நடவடிக்கைகளை அரசாங்கம் இன்னமும் முன்னெடுக்கவில்லை. அதேபோன்று தேர்தல்களை நடாத்துவதில் நிலவும் தொடர் தாமதம் நாட்டின் ஜனநாயகத்தை வலுவிழக்கச்செய்துள்ளது. இந்த நெருக்கடிக்குக் காரணமானவர்களில் பலர் உள்நாட்டுப்போர் இடம்பெற்ற காலப்பகுதியில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்’ எனவும் அமெரிக்க செனெட் உறுப்பினர்கள் முன்மொழிந்திருக்கும் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் நேற்று முன்தினம் வொஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இத்தீர்மானத்தை மேற்கோள்காட்டி ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் பேச்சாளர் மத்தியூ மில்லர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கேள்வி – அமெரிக்க செனெட் வெளியுறவு குழுவினால் முன்மொழியப்பட்டிருக்கும் இருகட்சித் தீர்மானத்தில் ‘ஊழலை இல்லாதொழித்தல், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்தல், உள்ளுராட்சிமன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை மேலும் தாமதமின்றி சுதந்திரமானதும் நியாயமானதுமான முறையில் நடாத்துதல் ஆகியவற்றை நிறைவேற்றுவதன் ஊடாக இலங்கை அரசாங்கம் நாட்டுமக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கவேண்டும்’ என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது பற்றிய உங்களது கருத்து என்ன?

பதில் – ஊழல் மோசடிகள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்தல் மற்றும் சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலை நடாத்துதல் என்பவற்றுக்கு நாம் எப்போதும் ஆதரவளிப்போம்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வலுவான சர்வதேச கலந்துரையாடல் அவசியம் – ஜனாதிபதி தெரிவிப்பு

முன்னாள் அமைச்சர் அத்தாவுத செனவிரத்ன காலமானார்

பிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து தடை