சூடான செய்திகள் 1வணிகம்

இலங்கையின் நெசவுத்தொழிலில், நவீன தொழில்நுட்பம் உலகளாவிய போட்டிக்கு இலங்கையை தயார்படுத்த அமைச்சு நடவடிக்கை

(UTV|COLOMBO)-பல தசாப்தங்களின் பின்னர் இலங்கையின் புடைவைத் தொழிலையும் நெசவுத்துறையையும் பாரியளவில் மேம்படுத்தும் வகையில் இந்த வருடம் நவீன தொழில்நுட்பங்களை அந்தத்துறையின் விருத்திக்காக புகுத்த கைத்தொழில் வர்த்தக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் உள்ளூர் கைவினைஞர்களும், நெசவு வடிவமைப்பாளர்களும் உலகளாவிய தொழில்நுறட்பத்துடன் போட்டி போடக்கூடிய வாய்ப்பை அமைச்சு உருவாக்கி வருகிற்து.

“நெசவுத்தொழிலில் நவீன தொழில் நுட்பங்களை புகுத்தி நெசவு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்று இந்த துறைக்கு பொறுப்பான அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான பல்வேறு நிறுவனங்களின் முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் அமைச்சில் இன்று காலை(23) இடம்பெற்ற போதே, அமைச்சர் பதியுதீன் இந்த தகவலை வெளியிட்டார் . இந்தக்கூட்டத்தில் அமைச்சின் செயலாளர் கே .டி .என் .ரஞ்சித் அசோக, மேலதிக செயலாளர் எம் .தாஜூடீன், புடவை திணைக்கள பணிப்பாளர் திருமதி. கிறிஷ்ணமூர்த்தி ஆகியோர் உட்பட பல உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

சாதாரண கைத்தறி உற்பத்தியாளர்கள் நெசவு உற்பத்தியை துரிதப்படுத்துவதற்காக ஜக்காட் (Jacuard) இயந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த வகையான இயந்திரங்கள் வழங்கும் வலுக்கள் மூலம் கைத்தறி இயந்திரங்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு, நெசவு டிசைன்கள்
கூட்டாக வடிவமைக்கப்பட்டு வருகின்றன. எனினும் இதன் இயக்கத்திற்கு  பழைய வகையிலான தொடுகை அட்டை முறையே இதுவரை காலமும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

“இலங்கையின் நெசவு வடிவமைப்பாளர்கள் இதுவரை காலமும் ஜக்காட் இயந்திர கைத்தறிகளின் பயன்பாட்டிற்காக பழைய தொடுகை முறையையே பயன்படுத்தி வந்தனர். இருந்த போதும் இன்றைய கைத்தறி சந்தையின் துரித  வளர்ச்சி போக்கிற்கு ஏற்ப பழைய முறையிலான இந்த இயந்திராதிப்பாவனை ஈடுக்கொடுக்க முடியாத நிலையே உருவாகியுள்ளது. எனவே எனது அமைச்சின் கீழான புடைவை மற்றும் நெசவுத் துறை திணைக்கள பிரிவான பழைய
முறையை மாற்றியமைத்து, கணனி மயப்படுத்தப்பட்ட டிஜிட்டல் முறையை உட்புகுத்தியுள்ளது. இந்த நவீன தொழில்நுட்பம் மூலம் கைத்தறி உற்பத்தியும் வடிவமைப்பு முறைகளும் மேம்பாடு அடையும்” இவ்வாறு அமைச்சர் மேலும் குறிப்பிட்டார் .

இலங்கை புடைவைகள் மற்றும் ஆடைகளுக்கான நிறுவனம் முதன் முதலாக ரத்மலானையில் உயர் தர டிஜிட்டல் ஜக்காட் முறையை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த புதிய திட்டத்திற்கு 20000 அமெரிக்க டொலர் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நவீன முறையானது செயன்முறையாளர்கள், மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கு துணை புரிவதோடு தேசிய மட்டத்தில் கைத்தறி உற்பத்தியாளர்களை பயிற்றுவிப்பதற்கு உதவுகின்றது. தனியார் துறையை சேர்ந்த விநியோகஸ்தர்கள் இந்த இயந்திரங்களை இறக்குமதி செய்து உள்நாட்டு நெசவுக்கைத்தொழிலை ஊக்குவிக்க இந்த புதிய முறையானது உத்வேகம் வழங்குகின்றது. புடைவைத் திணைக்களமானது எட்டுக்கும் அதிகமான டிஜிட்டல் ஜக்காட் இயந்திரங்களை இறக்குமதி செய்து ஒவ்வொரு மாகாணங்களுக்கும் வழங்கி அங்குள்ள உற்பத்தியாளர்களை பயிற்றுவிப்பதற்கும் மாகாணங்களில்
உள்ள இயந்திராதி இறக்குமதியாளர்களை ஊக்குவிப்பதற்கும் திட்டமிட்டுள்ளது.

இலங்கையின் நெசவுத்தறி துறையானது குறைந்த செலவிலான கூடுதலான வருமானத்தை ஈட்டும் தொழிலாக கருதப்படுகிறது. அதுமாத்திரமன்றி அதிகமான வேலைவாய்ப்புக்களை வழங்கும் இந்த துறையில் 12000க்கு மேற்பட்டோர் தம்மை ஈடுபடுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

-ஊடகப்பிரிவு-

 

 

 

 

Related posts

மஹிந்தவுக்கு கட்டுப்படாத கோட்டாபய எவ்வாறு நாட்டை பாதுகாக்கப்போகிறார்?

இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தொடர்ந்தும் விளக்கமறியலில்