விளையாட்டு

இலங்கையினை வீழ்த்தி இந்திய அணி தொடரை கைப்பற்றியது

(UTV | இந்தியா) – இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் தன்வசப்படுத்தியுள்ளது.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது இருபதுக்கு 20 போட்டி, பூனேயில் உள்ள மஹாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இரவு ஆட்டமாக நேற்று இடம்பெற்றது.

போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது.

இதனை அடுத்து, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 6 விக்கெட் இழப்புக்கு 201 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இந்திய அணி சார்பாக, லோகேஷ் ராஹுல் (Lokesh Rahul) 54 ஓட்டங்களையும், ஷிக்கர் தவான் (Shikhar Dhawan) 52 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இலங்கை அணி சார்பாக லக்‌ஷான் சந்தகன் (Lakshan Sandakan) 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

202 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 15.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பாக தனஞ்சய டீ சில்வா (Dhananjaya de Silva) 57 ஓட்டங்களையும் அஞ்சலோ மெத்யூஸ் 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இந்திய அணி சார்பாக, நவ்தீப் சைனி (Navdeep Saini) 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்த நிலையில் 78 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இந்திய அணி 2 க்கு 0 என தொடரை கைப்பற்றியுள்ளது.

இதேவேளை, ஆட்ட நாயகனாக இந்திய அணியின் ஷர்துல் தாக்கூர் (Shardul Thakur) மற்றும் தொடர் நாயகனாக நவ்தீப் சைனி (Navdeep Saini) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஸ்மித், வோனர் இருவருக்கும் 1 வருட போட்டித்தடை

விதிமுறைகளை மீறி செயற்பட்ட இலங்கை அணி வெளியேற்றம்

ஐபிஎல் போட்டிக்கு வரும் ‘குஜராத் டைட்டன்ஸ்’