தேவேந்திர முனை ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் தெற்கு நுழைவாயில் முன்பாக, சிங்காசன வீதியில் கடந்த மார்ச் 21 ஆம் திகதி இரவு இடம்பெற்ற இரட்டைக் கொலைக்கு, தேவேந்திரமுனை பெரஹராவின் காவடி நடனத்தின்போது ஏற்பட்ட மோதல் காரணம் என சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
கடந்த மார்ச் 21 ஆம் திகதி இரவு, வேன் ஒன்றில் வந்த குழுவினர், இரண்டு இளைஞர்களை சுட்டுக் கொலை செய்தனர்.
இந்த கொலை சம்பவத்தில் “தெஹிபாலே மல்லி” என்று அழைக்கப்படும் தேவேந்திர முனை பகுதியைச் சேர்ந்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பிரதான சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் மனிதப் படுகொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவு தடுத்து வைத்து விசாரணை செய்து வருகிறது.
இவர்களில் ஒருவர் கொலையாளிகள் வந்த வாகனத்தின் சாரதியாகவும், மற்றவர் துப்பாக்கிதாரியாவார்.
சாரதி, “தெஹிபாலே மல்லி”யின் உறவினர் என்றும் “தெஹிபாலே மல்லி”யின் படகுகளின் ஆவணப் பணிகளை மேற்கொண்டவர் எனத் தெரியவந்துள்ளது.
விசாரணையின்போது சந்தேக நபர்கள், தம்மை உள்ளடக்கிய நான்கு பேர் இந்த கொலைக்காக வந்ததாகவும், அதில் கொழும்பிலிருந்து வந்த இரண்டு துப்பாக்கிதாரிகளும் அடங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால், அந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் தொடர்பில் எந்த தகவலும் தமக்குத் தெரியாது என அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், இந்த கொலைக்காக எந்த பணமும் பெறவில்லை என்றும், நட்பு உறவின் அடிப்படையில் இந்த சம்பவம் நடந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்ட இளைஞர்களில் ஒருவரான யொமேஷ் நதீஷான், தேவேந்திரமுனை பெரஹரவின் காவடி நடனத்தின்போது “தெஹிபாலே மல்லி”யின் சகோதரரின் உடலில் மோதியதால் ஏற்பட்ட மோதல், பின்னர் பெரிய அளவில் வளர்ந்து இந்த கொலைக்கு வழிவகுத்ததாக சந்தேக நபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
காவடி நடனத்திற்குப் பின்னர், “தெஹிபாலே மல்லி”யின் சகோதரர் வெளிநாடு சென்றுவிட்டதாகவும், அவருக்கும் யொமேஷிற்கும் இடையே தொலைபேசி மூலம் வாக்குவாதம் நடந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
“தெஹிபாலே மல்லி”யின் ஆலோசனையின் பேரில், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட வேன் வாகனம் எரிக்கப்பட்டதாக சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.
விசாரணை அதிகாரிகள், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு T-56 ரக துப்பாக்கிகளை கண்டுபிடித்துள்ள போதும் 9 மி.மீ. வகை துப்பாக்கி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த ஆயுதங்கள் கொலைக்கு முதல் நாள் தமக்கு வழங்கப்பட்டதாக சந்தேக நபர்கள் கூறியுள்ளனர்.
“தெஹிபாலே மல்லி”யின் படகுகள் மற்றும் பல்வேறு இடங்களில் மறைந்திருந்த போதிலும், விசாரணைகள் தீவிரமடைந்ததால் தாங்கள் அதிகாரிகளிடம் சரணடைந்ததாக சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.