மக்களின் வருமானம் குறைந்து, வாழ்வாதாரம் வீழ்ச்சி கண்டாலும் அரசாங்கம் தன் பொறுப்பை நிறைவேற்றத் தவறிவிட்டது. மக்களின் உயிரைப் பாதுகாக்கவும், மனித வளத்தைப் பாதுகாக்கவும் தவறிவிட்டது.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் பெரிதாகப் பேசியவர்கள், தற்போதைய பலவீனமான அரசாங்கத்தின் கீழ், தேசிய பாதுகாப்பிற்கு பதிலாக, நாட்டை பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளிவிட்டுள்ளனர்.
சட்டம் கிடப்பில் போடப்பட்டு, நீதி நிலைநாட்டப்படாது, சட்டத்தின் ஆட்சி இல்லாது, நீதிமன்றமும் கொலைக்களமாக மாறியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிமித்தம் ஐக்கிய மக்கள் சக்தியின் ருவன்வெல்ல தேர்தல் தொகுதி அமைப்பாளர் நிஹால் பாரூக் அவர்களின் ஏற்பாட்டின் கீழ் ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் நேற்று (23) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய அரசாங்கம் தனது பொறுப்பை சரியாகச் செய்யாமையால் கொலை கலாசாரமும், காட்டுச் சட்டமும் கோலோச்சியுள்ளன.
இவ்வாறான நிலையில் நாட்டு மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க அரசால் முடியாது போயுள்ளன.
சுதந்திரமான அச்சமில்லாத சமூகத்தை உருவாக்க முடியாதுபோயுள்ளது. மக்களை கொலை செய்யும் கலாசாரம் கூட கோலோச்சியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
இன்றைய செய்திகளைப் பார்க்கும்போது இந்தக் கொலைகள் சர்வ சாதாரணமாகிவிட்டன. இவ்வாறான நிலையில் ஒரு நாட்டை ஆள முடியாத அரசாங்கத்தால், உள்ளூராட்சி மன்றங்களை ஆள முடியாது போகும்.
மக்களுக்குச் செய்ய வேண்டிய சேவைகளை இவர்களால் செய்ய முடியாது போயுள்ளன.
வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இந்த அரசாங்கத்திற்கு எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இந்த அரசாங்கத்திற்கு தெளிவான செய்தியை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மேடைக்கு மேடை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு துரோகம் செய்து, ஆட்சிக்கு வந்த இவர்கள் அன்று சொன்னதை நிறைவேற்றாது வேலையில்லா பட்டதாரிகளை கைவிட்டுள்ளனர்.
அரச ஊழியர்களின் சம்பளத்தை 6 மாதங்களுக்கு ஒருமுறை அதிகரிப்போம் என்று கூறிய தற்போதைய அரசாங்கம் அனைவரையும் ஏமாற்றியுள்ளது.
ஒட்டுமொத்த சமூகத்தையும் ஏமாற்றியுள்ள இந்த அரசாங்கத்திற்கு எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நல்லதொரு செய்தியை நாம் சொல்ல வேண்டும் என மேலும் தெரிவித்தார்.