உள்நாடு

இனவாத ஊடகங்களின் பொய் பிரசாரம் தொடர்பில் ரியாஜின் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

(UTV NEWS | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில், ஞாயிறு வார இறுதிப் பத்திரிகைகளில், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் கைது செய்யப்பட்டமை குறித்து பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தி அறிக்கையானது  முற்றிலும் தவறானதும் வெறுப்புணர்வை தூண்டக்கூடியாதனது எனவும் ரியாஜ் பதியுதீனின் மனைவி தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அவர் அளித்துள்ள புகாரிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது,

கடந்த ஆண்டு ஏப்பிரல் 21 ஆம் திகதி நடந்த ஈஸ்டர் தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் எனது கணவர் ரியாஜ் பதியுதீனை தொடர்புபடுத்தி, அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் ஒரேயொரு நோக்கில் 2020 04 19  இலங்கையின் நாளிதழ்களான “பெயர் குறிப்பிடுவதை தவிர்த்து” மற்றும் “பெயர் குறிப்பிடுவதை தவிர்த்து” ஆகியவற்றில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

அந்தக் கட்டுரையானது அது எழுதப்பட்டுள்ள நோக்கம் மற்றும் அதன் வீரியம் என்பவற்றை தெளிவாக எடுத்தியம்புகிறது. அதாவது வன்முறையை அல்லது கோபத்தை தூண்டும் எண்ணத்துடன் இந்தக் கட்டுரையின் ஆக்கம் காணப்படுகின்றது. இந்தக் கட்டுரையானது எந்தவிதமான தெளிவும் மற்றும் உண்மைத்தன்மையும் இல்லாமல் தவறானதொரு இலக்குடன் பிரசுரிக்கப்பட்டுள்ளமை மிகச்சிறந்ததொரு சான்றாகும்.

குறிப்பாக, நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புவது யாதெனில், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமுக்கும் எனது கணவர் ரியாஜ் பதியுதீனுக்கும் இடையே இருந்ததாகக் கூறப்படும் தொடர்பானது முற்றிலும் தவறானதும் ஆதாரமற்றதும் வெறுக்கத்தக்கதுமாகும். எனது கணவர் ரியாஜ் பதியுதீனுக்கும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமுக்கும் இடையில் இருந்ததாகக் கூறப்படும் தொடர்பு பற்றி பொலிஸ் படையின் எந்தவோர் உறுப்பினரோ அல்லது பயங்கரவாத விசாரணைப் பிரிவின் எந்தவோர் உறுப்பினரோ, எந்தவவோர் உத்தியோகபூர்வமான அறிக்கையினையும் வெளியிட்டுள்ளதாக எந்தவிதமான பதிவும் கிடையாது.

எனது கணவரினுடைய கைதானது, இன்ஷாப் இப்ராஹீமுக்கும் எனது கணவருக்கும் இடையில் நடைபெற்ற ஒரு தொலைபேசி உரையாடலினை அடிப்படையாக வைத்தே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்ஷாப் இப்ராஹீம் ஒரு தற்கொலை குண்டுதாரியாக இனங்காணப்பட்ட போதிலும், அவர் ஒரு வர்த்தகராவார். இன்ஷாப் இப்ராஹீம் பிரபல தொழிலதிபரும் செல்வந்தருமான முஹம்மத் இப்ராஹீம் என்பவரது மகனாவார். இன்ஷாப் இப்ராஹீம் எனது கணவரது சொந்த ஊரான மன்னாரைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவரினது மகளையே திருமணம் செய்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது விளக்கமறியலில் உள்ள எனது கணவர் ரியாஜ் பதியுதீன் ஒரு வரி செலுத்தும் வர்த்தகர் என்பதோடு, அவர் வரிக்கொடுப்பனவு தொடர்பில் எந்தவிதமான தவறுகளையும் ஒருபோதும் இழைத்திருக்கவில்லை. இலங்கையில் எந்தவொரு நபரும் சட்டரீதியாக வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு உரிமை உண்டு. அந்தவகையில், எனது கணவரும் சட்டரீதியான வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தார். இன்ஷாப் இப்ராஹிமின் நடவடிக்கைகள் தொடர்பில், எனது கணவர் எதனையும் அறிந்திருக்கவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுக்குப் பின்னர் இன்ஷாப் இப்ராஹீமினது மனைவிக்கோ அல்லது அவரது தந்தை முஹம்மத் இப்ராஹீமுக்கோ, இன்ஷாப் இப்ராஹீம் பயங்கரவாத செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தார் அல்லது அதற்கான திட்டத்தினைக் கொண்டிருந்தார் என்பது தெரிந்திருக்கவில்லை என, ஊடகங்கள் வாயிலாக தெளிவாகக் கூறப்பட்டிருந்தது.

ஞாயிற்றுக்கிழமை வெளியான பத்திரிகைகள், அவற்றினது கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்ததாவது யாதெனில், எனது கணவர் வடமாகண பாதுகாப்புப் படையினரால் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார் என்பதாகும். இது முற்றிலும் பொய்யானதும் உண்மைக்குப் புறம்பானதுமாகும். தற்பொழுது விளக்கமறியலில் உள்ள எனது கணவர், ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் இதற்கு முன்னர் கைது செய்யப்படவோ, விசாரிக்கப்படவோ இல்லை என்பது உறுதியானதாகும்.

எனது நோக்கில் இவ்வாறு உண்மையற்ற விடயங்களை உண்மை போல திரிபுபடுத்தி கூறுவதன் நோக்கமானது, எனது கணவரது உடன்பிறந்த சகோதரரான முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பெயரை களங்கப்படுத்துவதற்கேயாகும். இது ஒரு பொறுப்பற்ற அறிக்கை ஆகும். ஏனெனில் வாசகர்களை வெறுப்பின் தீப்பிழம்புகளாக மாற்றி, அதன்மூலம் வாசகர்களை தவறாக வழி நடத்தும் தீய மற்றும் கெட்ட நோக்கத்துடனேயே இப்பத்திரிகைகள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன.

இந்த ஊடகப்பிரச்சாரம் கூட, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை ஈஸ்டர் குண்டுத்தாக்குதலோடு தொடர்புபடுத்துவதை இலக்காகக் கொண்டது என்பது தெளிவாகும். ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுக்குப் பின்னர், ரிஷாட் பதியுதீனை குறிப்பிட்ட தாக்குதலோடு தொடர்புபடுத்த, சில குறுகிய அரசியல் முகவர்களும் சில ஊடக நிறுவனங்களும் அவரைக் குறிவைத்து மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம், இந்தக் குறுகிய அரசியல் நோக்கம் புலனாகிறது. இந்தக் குறுகிய அரசியல் இலாபத்துக்காகத்தான் பொய்களை உண்மைகளாக சோடித்து, பொதுமக்களையும் அந்த உண்மைக்குப் புறம்பான விடயங்களினை நம்பவைத்து, அரசியல் இலக்கை அடைய எடுத்ததொரு முயற்சியாகவே நான் இதனை அறிகிறேன்.

எனது கணவர் ஒரு பிரபல வர்த்தகர் என்பதினால், தனிப்பட்ட நபர்களுடன் வர்த்தக ரீதியான தொடர்பாடலை மேற்கொள்வது சாதாரணமானதொரு விடயமாகும். புலனாய்வுத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட தொலைபேசி உரையாடலின் உள்ளடக்கத்தினை ஆய்வுக்குட்படுத்துவது அவர்களுக்குரிய உரிமையாகும். அதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது. எப்படியாயினும் ஊடக நிறுவனங்களுக்கு ஒரு தார்மீகப் பொறுப்பும் கடமையும் உண்டு. யாதெனில் நீதிமன்றத்தால் ஒருவிடயம் தொடர்பில் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னர் மனச்சாட்சியுடனும், பொதுமக்களை தவறுதலாக வழிநடாத்தும் நோக்கத்தோடு செய்திகளை வெளியிடக் கூடாது. நீதிமன்றம் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னதாகவே ஊடக நிறுவனங்களே, தீர்ப்பினை அறிவித்தது நீதித் துறைக்கு இழுக்காகும். மேலும் பொய்களை செய்திகளாக்குவது, தீர்க்கப்படாத விடயங்களை முடிவாக்கி தீர்ப்பினை அறிவிப்பதும் ஊடக தர்மத்திற்கும் ஒழுங்கிற்கும் முரணானதாகும்.

நான் இங்கு குறிப்பிட விரும்புவது யாதெனில், எனது கணவர் கைது செய்யப்பட்ட தினத்தன்று அவருடன் சேர்த்து ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். ஆனால், எனது கணவர் முன்னாள் அமைச்சரும் பிரபல அரசியல்வாதியுமான ரிஷாட் பதியுதீன் என்பவரது சகோதரர் என்பதற்காக மட்டுமே, எனது கணவரினது பெயர் மட்டும் ஊடகங்களில் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான விசாரணை முடிவு பெறுவதற்கு முன்னரே சில ஊடகங்கள் முண்டியடித்துக்கொண்டு, தவறான ஊடகப் பிரச்சாரத்தை மேற்கொள்வதானது, குறிப்பிட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்கு பொய்யான தகவல்கள் வழங்குவதாகவே அமைந்துவிட வாய்ப்புள்ளது.

இவ்வாறு உண்மைக்குப் புறம்பாக தகவல்களை வெளியிடும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்கள் நீதிமன்றுக்கு முன் நிறுத்தப்பட வேண்டும்.

குறிப்பிட்ட எனது கணவரது கைது மற்றும் அவர் தொடர்பில் ஊடகங்கள் வெளியிடுகின்ற பொய்யான தகவல்கள், என்னையும் எனது 10 வயது மகனையும் மிகவும் பாதிப்படையச் செய்துள்ளது என்பதோடு மட்டுமல்லாமல், இது எனதும் எனது குடும்பத்தினரதும் அடிப்படை உரிமை மீறலாகும். இவ்வாறு அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– ஊடகப்பிரிவு –

(ஊடகங்களின் பெயர்களை வெளியிடுவதை ஊடக தர்மத்தின் பிரகாரம் தவிர்த்துள்ளோம்)

Related posts

சாந்தனுக்கு கிளிநொச்சியில் பிரத்தியேக இடத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி!

ஹட்டன் மறு அறிவித்தல் வரையில் முடக்கம்

டெங்கு நோயை கட்டுப்படுத்த Wolbachia பக்டீரியா