சூடான செய்திகள் 1

இனவாதிகளின் அச்சுறுத்தலுக்கு அடிப்பணியமாட்டேன் –  ரிஷாத் 

நேர்காணல் : ந.லெப்ரின்ராஜ்

 முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அட்டகாசங்கள், அவர்களுடைய தனித்துவத்துக்கு விடுக்கப்பட்டிருக்கின்ற சவால்களுக்கு எதிரான எந்தவொரு விட்டுக் கொடுப்பும் இல்லாமல் நியாயத்துக்காக போராடிவருகின்றோம். நியாயம் கிடைக்கும்வரை அரசியலமைப்புக்கு உட்பட்டு போராடுவோம். தேவைப்பட்டால் ஜனநாயக ரீதியான போராட்டங்களையும் முன்னெடுப்போம் என்று தெரிவித்த அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், இந்த நாட்டை அமைதியற்ற  சூழலில் வைத்திருக்க எண்ணும் இனவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அடிபணிய வேண்டிய தேவை எமக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.

ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கேள்வி: உயிர்த்த  ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அதிதீவிர பிரசாரங்கள்,கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளையடுத்து ஒட்டுமொத்த  முஸ்லிம் அமைச்சர்களும் பதவிகளைத் துறந்தீர்கள்.இந்நிலையில் மீண்டும் அந்த பதவிகளை பொறுப்பேற்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் பின்னணி என்ன?

பதில்;உயிர்த்த ஞாயிறு சம்பவம் இடம்பெற்றதன் பின்னர்  நாட்டில் முஸ்லிம் சிங்கள கலவரத்தை தூண்டுவதற்கு இனவாதிகள் முயற்சி எடுத்த போது,பௌத்த தேரரொருவர் பௌத்த தர்மத்துக்கு மாறாக உண்ணாவிரதம் இருந்து எங்களை (முஸ்லிம் அமைச்சர்களை) அமைச்சு பதவிகளிலிருந்து வெளியேறுமாறு அச்சுறுத்திய அதேவேளை, அந்த தேரருடைய அச்சுறுத்தலுக்கு பக்கபலமாக சிறையிலிருந்து வெளியே வந்த தேரர் ஒருவர் பதவிகளிலிருந்து வெளியேறாவிட்டால் பாத யாத்திரை மேற்கொண்டு நாட்டில் கலவரம் ஒன்றை உருவாக்குவோம் என்று அச்சுறுத்திய போது,இனங்களுக்கிடையில் முரண்பாடு வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் நாட்டினுடைய நலனையும் கருத்தில் கொண்டு நாங்கள்(முஸ்லிம் அமைச்சர்கள்) அன்று பதவிகளிலிருந்து வெளியேறுவது என ஒட்டுமொத்த

முஸ்லிம் தலைவர்களும் முடிவெடுத்து விலகினோம்.

அச்சமயத்தில் என் மீதும் இரண்டு ஆளுநர்கள் மீதும் பல தரப்புகளால்  பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. ஆனால் பயங்கரவாத செயற்பாடுகளுடன் எனக்கு எந்த தொடர்புமில்லை என்று  பொலிஸ் மா அதிபர்  சபாநாயகருக்கு அறிவித்திருக்கிறார். அதேபோல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்துவரும் பாராளுமன்ற தெரிவுக்குழு எங்களை அழைத்தபோது, அங்கு சென்று தெளிவான பதிலை வழங்கியிருக்கிறேன்.

அந்த அடிப்படையில், நாங்கள் பதவிகளை மீண்டும் ஏற்பதா?இல்லையா?என்று முடிவெடுப்பதற்காக கடந்த வியாழக்கிழமை அமைச்சர் பௌசி தலைமையில் கூடி வேளையில், முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ஒன்றாக மீண்டும் பதவிகளை பொறுப்பேற்பது என்றுமுடிவெடுக்கப்பட்டிருக்கிறது.அனைவரினதும் ஏகோபித்த முடிவாக அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.அதற்கேற்ப விரைவில் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்போம்.

கேள்வி:நீங்கள் அமைச்சு பதவியை பொறுப்பேற்றால் மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும் என்று அத்துரலிய ரத்ன தேரர் எச்சரித்திருக்கிறாரே?

பதில்:அவர் விரும்புகிற நேரத்தில்,அவர் விரும்புகிற  ஒருவர்தான் முஸ்லிம் சமுதாயத்தில் அமைச்சராக இருக்கவேண்டும் என்று அவருடைய சிந்தனைக்கு  நாங்கள் அடிபணிவோமாகவிருந்தால், அது அவருடைய இனவாத சிந்தனைக்கு நாங்கள் அடிபணித்தவர்களாகிவிடுவோம்.

நாங்கள் தற்பொழுது எடுத்திருக்கின்ற முடிவு என்பது இனவாதிகளின் எதிர்பார்ப்புக்கு மாறானதாகவே இருக்கிறது.முஸ்லிம் சமுதாயத்தில் ஒரு சிலர் அமைச்சு பதவிகளை ஏற்றுக்கொள்ளக்கூடாது,இவர் இவர் தான்  அமைச்சு பதவிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற இனவாதிகளின் விருப்பத்தை எங்களால் நிறைவேற்ற முடியாது.அமைச்சு பதவிகளை பொறுப்பேற்பதாக இருந்தால் ஒட்டுமொத்தமாகத்தான் ஏற்போம்.

கேள்வி:நாட்டில் சிங்களமுஸ்லிம் மக்களுக்கு இடையில் கலவரம் வந்துவிடுமோ என்ற அச்சத்திலும் நாட்டின் நலன் கருதியும் தான் அமைச்சு பதவிகளை துறந்ததாக கூறினீர்கள்.இன்று அந்த அச்சங்கள் நீங்கிவிட்டதா?

பதில்:உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்ற பின்னர் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் அனைத்துவிதமான குற்றச்சாட்டுகளையும் திணிக்க பார்த்தார்கள்.ஆனால் ,பயங்கரவாத தாக்குதலுக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கும்  எந்தவிதமான சம்பந்தமுமில்லை என்பது இன்று நிரூபணமாகியிருக்கிறது.

நாட்டில் பயங்கரவாத தாக்குதல் ஒன்று நடைபெறப்போகிறது என்பதை ஏற்கனவே அறிந்திருந்த போதும், அதனை தடுக்காமல் இருந்தது அரசாங்கத்தின் தவறு என்பதை முழு உலகமும் இன்று அறிந்திருக்கிறது.அந்த அடிப்படையில் முஸ்லிம் மக்கள் நிரபராதிகள்;முஸ்லிம் தலைவர்கள் நிரபராதிகள் என்பது முழு உலகுக்கும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

எங்கள் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்பதை நிரூபித்திவிட்டுதான் நாங்கள் அமைச்சு பதவிகளை மீண்டும் ஏற்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

கேள்வி:அரசாங்கத்திலிருக்கின்ற உயர்மட்ட தலைவர்களுக்கு பயங்கரவாத எச்சரிக்கை தொடர்பாக தெரிந்திருக்கிறது.உங்களுக்கு அது தொடர்பாக தெரிந்திருக்கவில்லையா?

பதில்;உண்மையிலேயே சம்பவம் நடைபெறுவதற்கு முன்னதாக இது தொடர்பாக நாங்கள் அறிந்திருக்கவில்லை.சம்பவம் நிகழ்ந்ததன் பின்னர்தான் இந்த நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் ஒன்று இருந்திருக்கிறது என்பது தொடர்பில் அறிந்தோம்.

கேள்வி:ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைமைகளை கருத்தில் கொண்டு ஒட்டுமொத்த முஸ்லிம் அமைச்சர்களும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக பதவிகளை துறந்த அதேவேளை,அனைத்து சவால்களையும் ஒன்றிணைந்து எதிர்கொண்டீர்கள்.இந்த ஒற்றுமை எதிர்காலத்திலும் தொடருமா?

பதில்:பல கட்சிகளைச் சார்ந்த,வெவ்வேறு  கொள்கைகளை உடைய தரப்பினர் சமுதாயத்துக்காக, இன ஒற்றுமைக்காக,நாட்டின் நலனுக்காக ஒற்றுமைப்பட்டோம். இந்த ஒற்றுமை எதிர்காலத்திலும் தொடரும்.

அரசியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக,அரசியல் இருப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக நாங்கள் ஒன்றிணையவில்லை.மக்கள் வாக்குகளால் அரசியலுக்கு வந்த நாங்கள்,எங்களுடைய அரசியல் பலத்தை சமூக நலனுக்காக, நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காக இக்கட்டான நிலையில் நாடு இருந்தபொழுது பெரும்பான்மை இனத்தையும் முஸ்லிம் இனத்தையும் மோதவிட்டு அதனூடாக முஸ்லிம்களுடைய பொருளாதாரம்,முஸ்லிம்களுடைய எதிர்காலம்,முஸ்லிம்களுடைய இருப்பு என அனைத்துக்கும் ஆபத்து வந்த பொழுதுதான் நாங்கள் ஒன்றுபட்டோம். அன்றிலிருந்து இன்றுவரை பலவிடயங்களில் ஒற்றுமையாக இருந்து அவற்றுக்கு முகம்கொடுத்தோம். முஸ்லிம் சமூகத்துக்கு கிடைக்கவேண்டிய நியாயத்துக்காக ஒற்றுமையாக பயணித்துக்கொண்டிருக்கின்றோம்.எதிர்காலத்திலும் அரசியலுக்கு அப்பால்,சமூக நலனை மையமாக வைத்து மக்களின் நலனுக்காக ஒற்றுமையாக செயற்படுவோம்.

கேள்வி:நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மையின மக்கள் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பிரிந்து தான் செயற்படுகிறார்கள். இந்நிலையில் அரசியலுக்கு அப்பால், சிறுபான்மையின மக்களுடைய பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு  சிறுபான்மையின தலைவர்கள் ஒருகுடையின் கீழ் இயங்குவதற்கு எதிர்காலத்தில் வாய்ப்புகள் இருக்கின்றனவா?

பதில்:சிறுபான்மை கட்சிகளுக்கிடையில் வெவ்வேறு  கொள்கைகள் இருந்தாலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்பட்ட  அநீதிகளுக்கு எதிராக அனைத்து சிறுபான்மைக் கட்சிகளும் எவ்வாறு ஒன்றுபட்டு  செயற்பாட்டோமோ, அதேபோன்று எதிர்காலத்திலும் இந்த நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மையினருக்கு இருக்கின்ற பொதுவான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒன்றுபட்டு செயற்படுவது காலத்தின் தேவை என்று நான் கருதுகிறேன்.

அந்த அடிப்படையில் சம்பந்தன் ஐயா,சுரேஷ் பிரேமச்சந்திரன், மனோ கணேசன், தொண்டமான், திகாம்பரம்,ராதாகிருஷ்ணன் உட்பட முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பயணிப்போமானால் அது இந்த நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மையினத்துக்கான ஒரு பாதுகாப்பு அரணாக அமையும் என நான் நம்புகிறேன்.

கேள்வி:ஏப்ரல் தாக்குதலுக்கு பின்னர் சிங்கள தீவிரவாத அமைப்புகள் சிறுபான்மையினத்துக்கு எதிராக  முன்னெடுத்துவருகின்ற நடவடிக்கைகளை பார்க்கும்பொழுது, சிறுபான்மையினருக்கு இந்த நாடு அச்சுறுத்தலான நாடு என்ற பார்வை முன்னைய காலத்தையும் விட ஓங்கிநிற்கிறது.இந்த அச்சுறுத்தலை போக்குவதற்கு சிறுபான்மைத் தலைவர்கள் எவ்வாறு செயற்பட போகிறீர்கள்?

பதில்:பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த அடிப்படைவாத அமைப்புகள் சுதந்திரத்துக்கு பின்னரான காலம் தொட்டு ஒவ்வொருவகையான அச்சுறுத்தல்களை சிறுபான்மையினருக்கு எதிராக கட்டவிழ்த்துக்கொண்டுதான் வருகிறார்கள்.இவர்களுடைய இந்த செயற்பாடுகளை சிங்கள சமூகம் அங்கீகரித்த  வரலாறு கிடையாது.இந்த நாட்டில் பெரும்பான்மை சமூகத்துக்கும் சிறுபான்மை சமூகத்துக்குமிடையில் எப்பொழுதும் ஒரு  முறுகல்,பிளவு  இருப்பது போன்று காட்டி, அதனூடாக தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிவருவது காலாகாலமாக நடந்துவருகிறது.

இவர்களால் இந்த நாட்டில் எதனையும் செய்யமுடியாது.ஆனால் இந்த நாட்டை சீரழிக்கின்ற, இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தை சீரழிக்கின்ற, இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை குலைக்கின்ற,உயிராபத்தை  ஏற்படுத்துகின்ற முகவர்களாகவே இவர்கள் செயற்பட்டுவருகிறார்கள்.இவர்கள் இந்த நாட்டினுடைய சட்டதிட்டங்களுக்கு முரணாக பேசுகிறவர்கள்,செயற்படுகிறவர்கள்.

இவர்களை கட்டுப்படுத்தவேண்டிய பொறுப்பு சிறுபான்மைச் சமூகத்தினுடைய பொறுப்பல்ல.அது ஆட்சியாளர்களுடைய  பொறுப்பு.இந்த நாட்டினுடைய சட்டம்  பௌத்த மதத்துக்கு  முன்னுரிமை கொடுத்தாலும்,ஏனைய மதத்தினருக்கும் அவர்களுடைய மதத்தை  பேணி நடத்துகின்ற அனைத்து   உரிமையையும் வழங்கியிருக்கிறது. அரசியலமைப்பில்  சிறுபான்மை சமூகங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அங்கீகாரங்களை கூட சிறுபான்மைச் சமூகம் அனுபவிப்பதை விரும்பாத சக்திகள் தான் இவர்கள். சிங்கள மக்கள் இவ்வாறான இனவாதிகளுடைய செயற்பாடுகளை அங்கீகரிப்பதில்லை.

அந்த அடிப்படையில் இந்த சக்திகளுடைய எதிர்பார்ப்பு இந்த நாட்டை  ஸ்திரமற்ற நிலையில் வைத்திருப்பதாகும்.இவர்களை சக்தியொன்று இயக்கிக்கொண்டிருக்கிறது. எனவே சிறுபான்மை சமூகங்கள் இந்த விடயத்தில் தெளிவாக, விழிப்பாக, புத்திசாதுரியமாக இருக்க வேண்டிய தேவைப்பாடு இருக்கிறது.

கேள்வி:உங்கள் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுகளின் பின்னணி என்ன? 

பதில்:கடந்த ஒக்டோபரில் நடந்த 52 நாள் அரசியல் சதிப்புரட்சிக்கு நான் ஒத்துழைக்கவில்லை என்பது தான் என் மீதான அதிருப்திக்கு காரணம். அரசாங்கத்தை விட்டு வெளியேறி சதிப்புரட்சிக்கு நான் ஆதரவளிப்பேன் என்ற அவர்களுடைய எதிர்பார்ப்பை முறியடித்ததனால் என் மீது அதிகளவான பழிவாங்கல்களை செய்துகொண்டிருக்கிறார்கள்.

மேலும் எங்கள் சமூகத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்படும் சம்பவங்களுக்கு எதிராக நாங்கள் பேசாமல் இருக்க வேண்டும் என்றும் ,எதிர்த்து நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் இனவாத சக்திகள் எதிர்பார்க்கிறார்கள். சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிராக நடக்கின்ற அநியாயங்களை தட்டிக்கேட்பது அவர்களுக்கு விருப்பமில்லாமல் இருக்கிறது. ஆனால் நான் உடனுக்குடன்  அவற்றுக்கு எதிராக குரல் கொடுப்பதனால் என் மீது அவர்களுக்கு விரோதம்.இவைதான் என் மீதான பகைமைக்கு காரணம்.

கேள்வி: சிறுபான்மை இனங்கள் ஒற்றுமைப்படுவது காலத்தின் கட்டாயமாக இருக்கின்ற நிலையில், அந்த இணைவு சம்பந்தமான பேச்சுக்கள் வருகின்ற போது வடகிழக்கு இணைப்பு பற்றிய பேச்சும் பேசப்படுவது வளமை.இது தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?

பதில்: இந்த விவகாரம் தொடர்பில் கிழக்கு மாகாண மக்களுடைய விருப்பு வெறுப்புகளை முதலில் அறிய வேண்டும்.வடக்குகிழக்கு இணைய வேண்டுமாகவிருந்தால் கிழக்கு மாகாண மக்கள் அதனை விரும்பவேண்டும்.எனவே அவர்களுடைய நிலைப்பாட்டை அறிந்து தான் அதனை செய்யவேண்டும் தவிர,அவர்களுடைய விருப்புக்கு மாறாக செய்ய முற்படும்பொழுது அது வேறு பிரச்சினைகளை உருவாக்கிவிடும்.எனவே,அவர்களுடைய விருப்பை அறிந்த பின்னர்தான் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேள்வி:நீண்ட காலமாக இருந்துவருகின்ற கல்முனை பிரதேச சபை தரமுயர்த்தல் தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?

பதில்:பேச்சுவார்த்தை ஊடாக அந்த விடயத்துக்கு தீர்வு காணப்படவேண்டும்.தற்பொழுது அந்த விவகாரம் சூடு பிடித்திருக்கிறது.இரண்டு தரப்பும் திருப்தி அடையக்கூடிய வகையில் இந்த விடயத்துக்கு தீர்வு காணப்படவேண்டுமே ஒழிய, ஒரு தரப்பு வெற்றிபெற்றதாகவும், ஒரு தரப்பு தோல்வியடைந்ததாகவும் இருக்கக்கூடாது. இவ்விரு இனங்களும் மதத்தால் வேறுபட்டாலும் மொழியால் ஒரு இனமே. அந்த அடிப்படையில், தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் இருக்கின்ற சிறுசிறு பிரச்சினைகளைக்காரணம் காட்டி பெரும்பான்மை பேரினவாதிகள் சிறுபான்மையினத்தை எவ்வாறு நசுக்கலாம் என்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.நாங்கள் அதற்க்கு விலை போய்விடாமல், இரண்டு தரப்பிலுள்ள புத்திஜீவிகளும் அரசியல் வாதிகளின் ஒத்துழைப்போடு,பேசி ஒரு நியாயமான தீர்வை அவசரமாக எடுக்கவேண்டும் என நான் விரும்புகிறேன்.

கேள்வி:சிறுபான்மை சமூகத்தினுடைய முழுமையான ஆதரவுடன் 2015 இல் ஏற்படுத்தியிருந்த ஆட்சி மாற்றம் இறுதி தருணத்துக்கு வந்திருக்கிறது.நீங்கள் எதிர்பார்த்த விடயங்கள் நடந்தேறியிருக்கிறதா?

பதில்:இந்த ஆட்சியினுடைய பின்னடைவுக்கு காரணம் ஜனாதிபதி ஒரு கட்சியையும் பிரதமர் ஒரு கட்சியையும் வைத்துக்கொண்டு அதிகாரம் பிரிந்து நிற்பதாகும்.அந்த அடிப்படையில் நாங்கள் எதிர்பார்த்த இலக்கை எங்களால் அடையமுடியவில்லை என்பது தான் உண்மை.கடந்த அரசாங்கத்துடன் ஒப்பிடும்பொழுது இந்த அரசாங்கத்தின் உருவாக்கத்தில்  சிறுபான்மை கட்சிகளுடைய பெருமளவான ஒத்துழைப்பு இருந்திருக்கிறது. அதேபோல், தமிழ், மலையக, முஸ்லிம் கட்சிகளுடைய ஒத்துழைப்போடு தான் இந்த அரசாங்கம் நகர்ந்துகொண்டிருக்கிறது.

சிறுபான்மை சமூகங்களின் வெறுப்பை சம்பாதித்தால் அரசாங்கத்தை கொண்டுநடத்த முடியாது என்ற அச்சமும் இந்த அரசாங்கத்துக்கு இருக்கிறது.ஆனாலும் நாங்கள் எதிர்பார்த்த எதிர்பார்ப்புகள் முழுமையாக பூர்த்தியடையவில்லை என்ற வருத்தம் எங்களிடம் இருக்கிறது. இந்த அரசாங்கத்தில் சிறுபான்மைக் கட்சிகள் அதிகளவில் இருப்பதனால்,ஒப்பீட்டு ரீதியில் கடந்த அரசாங்கத்தைவிட இந்த அரசாங்கத்தில் எங்களுடைய விடயங்களில் சிலவற்றை செய்துமுடிக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.

என்றாலும் கடந்த அரசாங்கத்தை வீழ்த்தி புதியதொரு அரசாங்கத்தை கொண்டுவந்த போதிலும் கூட பேரினவாத சக்திகளின்  அட்டகாசங்களை அடக்குகின்ற விடயத்தில் நாங்கள் திருப்திப்படக்கூடிய வகையில் இந்த அரசாங்கம் செயற்படவில்லை என்ற குறை இருக்கிறது.

கேள்வி:மீண்டும் ஒரு ஆட்சி மாற்றம் வருவதை விரும்புகிறீர்களா?இல்லை ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கம் வருவதே பொருத்தம் என கருதுகிறீர்களா?

பதில்:அது தொடர்பில் தற்பொழுது பேசுவது தகுந்த தருணம் என நான் கருதவில்லை.உரிய நேரம் வரும் பொழுது அது தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுப்போம்.

கேள்வி:முஸ்லிம் மக்களின் தனித்துவத்துக்கு சவால் விடுக்கும் சம்பவங்கள் பல அரங்கேறுகின்றன.குறிப்பாக  அபாயா விவகாரம்,அரபுக்கல்லூரிகளுக்கு எதிரான பிரசாரங்கள் போன்ற விடயங்களை குறிப்பிடலாம்.இவை தொடர்பில் முஸ்லிம் தலைவர்கள் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளீர்கள்?

பதில்:இந்த விடயங்கள் தொடர்பாக எந்தவொரு விட்டுக்கொடுப்பும் இல்லாமல் மிக நேர்த்தியாக   எங்களுடைய நியாயத்துக்காக நாங்கள் போராடிவருகின்றோம்.இந்த நாட்டினுடைய அரசியலமைப்பில் ஒவ்வொரு மதத்தினரினதும் உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கிறது.அந்த அடிப்படையில் எங்களுடைய சமூகத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற விடயங்களுக்கு எங்களுடைய  அரசியல் பலத்தை பயன்படுத்துவோம்.முடியாவிட்டால் அரசியலமைப்புக்கு உட்பட்டு சட்ட நடவடிக்கைகளை எடுப்போம்.தேவைப்பட்டால் ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுப்போம்.அதேபோல் தேவைப்பட்டால் ஐ.நா.வரை செல்லவேண்டுமென்றாலும் செல்வோம்.

கேள்வி:மிக விரைவில் ஜனாதிபதி தேர்தலுக்கு நாடு முகம்கொடுக்கவிருப்பதாக செய்திகள் அடிபடுகின்றன.ஜனாதிபதி தேர்தலில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?

பதில்:அரசியல் ரீதியான முடிவுகளை எடுக்கின்ற பொழுது அந்த முடிவுகள் ஒவ்வொரு கட்சி ரீதியாக வெவ்வேறு முடிவுகளாகவும் இருக்கலாம்.ஒரே முடிவாகவும் இருக்கலாம். அந்த அடிப்படையில் தேர்தல் வருகின்ற பொழுது தான் அந்த சூழ்நிலையில் ஏற்படுகின்ற நிலைவரங்களை  வைத்துக்கொண்டு முடிவுகளை எடுக்கமுடியும்.அதற்கேற்ப எந்த தேர்தல் முதலில் வருகிறதோ, அவ்வேளையில் எங்களுடைய முடிவை அறிவிப்போம்.

Related posts

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் சில காலதாமதம்

அதிக வெப்பநிலையினால் நீர் தேக்கங்களில் நீர் மட்டம் குறைவு

சிங்கப்பூர் இன்வெஸ்ட் ஸ்ரீலங்கா மாநாட்டில் பிரதமர்