தம்பலகாமம் பகுதியில் மூன்று இனங்களுக்கும் வேறுப்படுத்தப்பட்ட வகையில் மூன்று கல்வி வலயங்கள் காணப்படுவது இனவாத செயற்பாடாக பார்க்கப்படுகிறது. இதனை கருத்திற் கொண்டு தம்பலகாமத்துக்கு தனியான கல்வி வலயத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தம்பலகாமம், குச்சவெளி தனி கல்வி வலயம் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் கல்வி அமைச்சிடம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
கல்வித்துறையில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. இலவச கல்வி அனைவருக்கும் நியாயமானதாக கிடைக்கப்பெறுகிறதா என்பது பிரச்சினைக்குரியதாக உள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா, மூதூர், திருகோணமலை, திருகோணமலை வடக்கு மற்றும் கந்தளாய் ஆகிய கல்வி வலயங்கள் காணப்படுகின்றன.
தம்பலகாமம் பகுதியில் உள்ள பாடசாலைகள் இனரீதியிலான பிரிவினை நிலையடைந்துள்ளன. இனவாதம் மற்றும் மதவாதமற்ற சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அனைவரும் பேசுகிறோம்.
தம்பலகாமம் பகுதியில் உள்ள தமிழ் பாடசாலைகள் திருகோணமலை வலயத்திலும், முஸ்லிம் பாடசாலைகள் மூதூர் வலயத்திலும், சிங்கள பாடசாலைகள் கந்தளாய் வலயத்திலும் இணைக்கப்பட்டுள்ளன.
அருகருகில்; உள்ள பாடசாலைகள் இனரீதியி பிரிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் மத்தியில் எவ்வாறு இன நல்லிணக்கம் பற்றி பேசுவது என்ற அச்சம் காணப்படுகிறது.
இதன் காரணமாகவே தம்பலகாமத்துக்கு தனியான கல்வி வலயத்தை கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம். அதேபோல் திருகோணமலை குச்சவெளி கோட்டத்திலும் பல பிரச்சினைகள் காணப்படுகிறது. இந்த பகுதியில் உள்ள பாடசாலைகளில் பௌதீக மற்றும் மனித வளப்பற்றாக்குறை காணப்படுகிறது. ஆசிரியர் பற்றாக்குறை மிக மோசமாக காணப்படுகிறது.
திருகோணமலை பகுதியில் குச்சவெளி தனியான வலயமாக உருவாக்கப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தினோம். அந்த பகுதியின் எல்லை நிர்ணயங்களுக்கு அமைவாக 2023.09.26 ஆம் திகதி கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் குச்சவெளிக்கான தனியான கல்வி வலயத்தை அமைப்பதற்காக யோசனைகளை முன்வைத்துள்ளதாக கிழக்கு மாகாண செயலாளர் எமக்கு அறிவுறுத்தியுள்ளார். இதனை சபைக்கு சமர்ப்பிக்கிறேன்.
இந்த கடிதம் மத்திய அரசாங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் எவ்வித நடவடிக்கைகளும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. ஆகவே இந்த விவகாரம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கல்வி அமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன்.
தம்பலகாமம் பகுதியில் மூன்று இனங்களுக்கும் வேறுப்படுத்தப்பட்ட வகையில் மூன்று கல்வி வலயங்கள் காணப்படுவது இனவாத செயற்பாடாக பார்க்கப்படுகிறது. இதனை கருத்திற் கொண்டு தம்பலகாமத்துக்கு தனியான கல்வி வலயத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
கடந்த அரசாங்கம் மூதூர் பகுதியில் இருந்த சிங்கள பாடசாலையை கந்தளாய் வலயத்தில் இணைத்துள்ளது.
கல்வி முறைமையில் .இன ரீதியிலான பிரச்சினைகள் காணப்படுகின்ற நிலையில் எவ்வாறு மாணவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை உருவாக்க முடியும். ஆகவே இவ்விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
-எம்.ஆர்.எம்.வசீம்