அரசியல்உள்நாடு

இனவாதத்தை தூண்டிவிட ஒரு தரப்பினர் நல்லிணக்க சட்டமூலத்தை தூக்கிப் பிடிக்கிறது – நீதியமைச்சர் அலி சப்ரி

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் ஊடாக  எவருக்கும் சார்பாக செயற்படவில்லை. நாட்டின் அரசியலமைப்புக்கு அமைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் யோசனைகளையே முன்வைத்துள்ளோம். இந்த சட்டமூலத்தை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தலாம்.

ஜனாதிபதித் தேர்தலின் போது மக்கள் பொருளாதார பாதிப்பு பற்றிய பொது பிரச்சனைகளை பேசும் போது இனவாதத்தை தூண்டிவிட ஒரு தரப்பினர் இந்த சட்டமூலத்தை தூக்கிப் பிடித்துக் கொள்கிறார்கள்  என  வெளிவிவகாரம் மற்றும் நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (3) இடம்பெற்ற அமர்வின் போது முதலாம் வாசிப்புக்காக முன்வைக்கப்பட்ட உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை எதிரணியின் சுயாதீன உறுப்பினர்களான விமல் வீரவன்ச, கெவிந்து குமாரதுங்க ஆகியோர் கடுமையாக எதிர்த்தார்கள்.

இதனை தொடர்ந்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூல வரைவில் எவ்விடத்திலும் இராணுவத்தினரை காட்டிக் கொடுக்கும் ஏற்பாடுகள் உள்ளடக்கப்படவில்லை.ஏனெனில் எங்களின் மூளை பழுதடையவில்லை.

வெளியக மட்டத்தில் சாட்சியம் திரட்டும் பொறிமுறை முன்னெடுக்கப்படுகிறது. அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் இதற்கு முழுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம்.

2015 ஆம் ஆண்டு அரசாங்கம் ஏற்றுக் கொண்ட தீர்மானத்தில் இருந்து வெளியேறியுள்ளோம்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இலங்கையில் மாத்திரம் உருவாக்கப்படவில்லை. நேபாளம், பேரு ,தென்னாப்பிரிக்கா உட்பட 40 நாடுகளில் இம்முறைமை பின்பற்றப்பட்டுள்ளது. நாட்டின் உள்ளக விவகாரங்களில் வெளியக தலையீடுகளை தடுப்பதற்காகவே இந்த ஆணைக்குழு உருவாக்கப்படவுள்ளது.

இந்த பொறிமுறையை உருவாக்காவிடின் தான் நியாயத்தை பெற்றுக்கொள்ள பாதிக்கப்பட்டவர்கள் வெளியக பொறிமுறையை நாடுவார்கள். தண்டனை வழங்கும் அதிகாரம் எவருக்கும் வழங்கப்படவில்லை. விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்கான விதிப்புரைகள் மாத்திரமே முன்வைக்கப்பட்டுள்ளன.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உருவாக்கத்தை தமிழ் அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. சர்வதேச அழுத்தத்தில் இருந்து விடுப்படுவதற்கு காண்பிக்கப்படும் பொய் என்று தமிழ் கட்சிகள் இதனை குறிப்பிடுகிறார்கள்.

இவர்கள் குறிப்பிடுகிறார்கள் இராணுவத்தினரை தண்டிப்பதாக, இராணுவத்தினரை தண்டிப்பதாக இருந்தால் தமிழ் கட்சிகள் எமக்கு ஆதரவளிப்பார்கள் தானே,

எவருக்கும் சார்பாக நாங்கள் செயற்படவில்லை. நாட்டின் அரசியலமைப்புக்கு அமைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் யோசனைகளையே முன்வைத்துள்ளோம். இந்த சட்டமூலத்தை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தலாம்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்கும் தேவை காணப்படுகிறது. இந்த ஆணைக்குழு இன ரீதியில் வரையறுக்கப்படவில்லை. யுத்தத்தால் சிங்களவர்களும், முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களும் இந்த ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்க முடியும்.

தவறிழைத்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டும். உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு எவரையும் தண்டிக்காது.

அறிக்கை மாத்திரமே சமர்ப்பிக்கப்படும். சட்டமா அதிபர் திணைக்களமே அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும். இந்த சட்டமூலத்தை விமர்சிப்பவர்களுக்கு முதலில்  சட்டமூலம் பற்றி தெளிவில்லை. தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்குவது தவறா,

1983 ஆம் ஆண்டு முதல் பாதிக்கப்பட்டவர்கள் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஊடாக நிவாரணத்தை பெற்றுக்கொள்ளும் சூழலை ஏற்படுத்தவே முயற்சிக்கிறோம்.

உண்மையை கண்டறிந்தால் மாத்திரமே நல்லிணக்கத்தை ஸ்தாபிக்க முடியும்.  காணாமல் போனார் பட்டியலில் 6042 பேர் உள்ளடக்கப்பட்டுள்ளார்கள்.இவர்களின் உறவுகளுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும். தமது கோரிக்கைகளை முன்வைக்க ஒரு களத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

அனைத்தையும் இனவாத கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டாம். பிரச்சினைகள் இல்லாவிட்டால் புதிய பிரச்சினைகளை இவர்கள் தோற்றுவிக்கிறார்கள்.

இவ்வாறு இருந்தால் ஒருபோதும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. தண்டனை வழங்குவதற்கும், வழக்குத் தாக்கல் செய்வதற்கு ஆணைக்குழுக்களுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. சட்டமா அதிபருக்கே வழக்குத் தாக்கல் தொடர்பில் அதிகாரம் உண்டு.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் தான் இனவாதம் மற்றும் மதவாதம் இல்லாமல் பொருளாதார பிரச்சினை பற்றி பேசப்படுகிறது. ஒருசிலர் இதனை விரும்பவில்லை. இனவாதத்தை தோற்றுவிக்கவே முயற்சிக்கிறார்கள்.

இலங்கையர் என்ற அடிப்படையில் பொது பிரச்சினைகள் பற்றி பேசும் போது இனவாதத்துக்காக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை தூக்கிப் பிடித்துக் கொள்கிறார்கள் என்றார்.

-எம்.ஆர்.எம். வசீம்

Related posts

முதலாவது வணிக விமானம் நாட்டிற்கு

உலகின் சிறந்த நிலத்தடி திட்டங்களில் உமா ஓயா

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு